Thursday, November 3, 2011

தெருக்கலைகள் ஏசி மண்டபத்தில்..........





மஸ்கெலியா பெ. லோகேஸ்வரன்


மஸ்கெலியா பகுதியிலுள்ள மொக்கா தோட்டம் எனும் அழகிய பசுமையான தேயிலைத் தோட்டம் களைகட்டியிருந்தது. தோட்டத்து பாட்டு வாத்தியார் மிகவும் சுறுசுறுப்பாக இங்கும் அங்குமாக தன்னந் தனியாக எல்லா விடங்களையும் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். மீண்டும் இருபது வயது குறைந்தது போல அவரது வேகம் குதிரையை மிஞ்சியிருந்தது.

அடுத்த நாள் அந்த கோவில் முற்றத்தில் மலையகக் கூத்துக்களின் சங்கமம் நிகழ்ச்சி அரங்கேற இருந்தது. தெருவிலே ஆடிப்பாடி மக்களை வசியப்படுத்தும் அந்தக் கலைகள் தற்போது ஓரே நாளில் ஓரே நேரத்தில் திறந்தவெளி அரங்கில் அமைக்கப்பட்ட மேடையில் அரங்கேறவிருக்கின்றது.

பாட்டு வாத்தியார் மிகவும் கவலைப்பட்டுக் கொள்வார். இப்போதெல்லாம் எங்கே இந்த சின்னஞ் சிறுசுகள் கூத்துக்களையும் கலைகளையும் மதிக்கிறார்கள்? எல்லாரும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கோடிக் கணக்கினில் பணத்தை சம்பாதிக்கும் நடிகர்களின் படங்களையும் இண்டர்நெட்டில் செட் செய்வதையுமே பொழுது போக்காகக் கொள்கின்றார்கள். இண்டர்நெட்டில் உள்ள நல்ல விடங்களைக் கூட அவர்களுக்குப் பார்க்க பொறுமையில்லை.

ஓரே இடத்தில் அப்படியே அமர்ந்து திண்பண்டங்களைச் சாப்பிட்டுக் கொண்டு உடலைப் பருத்துப் போக மட்டுமல்ல மரத்துப் போகவும் வைத்து டிவியையுயம் கம்பியூட்டரையும் கட்டிப் பிடித்துக் கொண்டு கண்களைக் களைத்துப் போகவிட்டு வாழும் மனிதர் கூட்டங்கள் என அடிக்கடி அவரது கூத்துக் கழக உறுப்பினர்களிடம் முறைப்பாடு செய்வதுண்டு.

அவரின் இந்த மின்சார உபகரணங்களுக்கான மாற்றுச் சிந்தனை தான் இந்த மலையகக் கூத்துக்களின் சங்கமம். நாளை இந்த ஐம்பவதாவது தள்ளாடும் வயதிலும் அரங்கேறும் மலையகக் கூத்துக்களின் சங்கமம்.

ஒரு ஆறேழு பெண் பிள்ளைகளுடன் பத்துப் பதினைந்து சிறுவர்கள்,இளைஞர்கள், பெரியவர் என அவரது கழக உறுப்பினர்கள் பாட்டு வாத்தியாரின் கொள்கைக்கு கொஞ்சம் ஒத்துப் போக் கூடியவர்கள்.

பொழுது சுறுசுறுப்பாய் விடிந்தது. நமது கழக உறுப்பினர்களும் வெகு சீக்கிரமாய் எழுந்து கோவில் முற்றத்தைக் கூட்டி அழகாக்கி வாழை மரம் கட்டி ஒலிபெருக்கி பொருத்தி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

இரண்டு நாட்களாக கிரீடம், கை வலையம், மார்பு சட்டை என அனைத்தையும் செய்த உடற் களைப்பால் ரதி வேடமிட தயாராக இருந்த குமுதினி அசந்து போய் ஓரமாய் உட்கார்ந்திருந்தாள். மன்மதன் ரகு கொஞ்சம் வேகமாக அனைத்தையும் ஒட்டி முடிக்க பொன்னர் சங்கக் கூத்தில் நடிக்கும் பார்த்திபனை வேலை வாங்கிக் கொண்டிருந்தான்.

அர்ச்சுனன் தபசு கதாநாயகன் அவளுடைய ஒரு தலைக் காதலுக்கு உதவி செய்து கொண்டிருந்தான். வேப்பிலை நடனக்காரியுடன் ஒரு தலையாக ஓடும் பச்சைக் காதல். ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் வேப்ப மரத்தில் ஆஜானுபகவானாக விர்ரென்று ஏறிக் கொண்டிருந்தான்.

ஏய்... பார்த்தி... போதுமடா............. வேப்பிலை கையில் வைத்து ஆடத்தான்..... தைலம் செய்வதற்கு இல்லடா...... எறங்குடா..... கைய காலை ஒடச்சிக்காத..................... அவுங்க வருத்தப்படப் போறாங்க என்று நக்கலாகக் கத்தினான.; நாட்டார் பாடலின் பிரதான குரல் நாயகன் பத்மா. வேப்பிலை நடனக்காரி சுகுனா வெட்கித் தலை குணிந்தாள்.

மாலை ஐந்து மணிக்கு அந்த தோட்டத்து முக்கிய அதிதிகள் அனைவரும் சரியாக நேரத்திற்கு வந்து விட்டனர். ஆனால், பார்வையாளர்களாக பங்கு பெறும் பிள்ளைகளின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு ஐம்பது பேர் மட்டும் தான் வந்திருந்தார்கள்.



வழமையான குத்து விளக்கேற்றல் நிகழ்வோடு மேடை களைகட்டியிருந்தது. ஒலிபெருக்கி நிகழ்ச்சியை அந்த தோட்டத்து மக்கள் வீட்டிலிருந்து கேட்கும் வசதியை சோம்பேறிகளுக்குச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தது. பாட்டு வாத்தியார் களைத்துப் போயிருந்தார். மூச்சுவாங்கத் தொடங்கினாலும் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார்.

அந்த சில்லென்ற குளிர்காற்று அவரது உடலுக்கு ஏற்காமல் தன்னையறிhமலே வீசிங் அவஸ்தை அவரை வாட்டியது. ஆனால், எப்படியும் இந்த நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என் திடசங்கற்பம் பூண்டிருந்தார். என்ன முயற்சி செய்தாலும் இறைவனது திருவிளையாடலில் தப்பிக்க முடியுமா என்ன?

பாட்டு வாத்தியார் அந்த மேடைக்குப் பின்னாலிருந்த மேசையில் நிரந்தரமாகவே கண்ணயர்ந்தார். வாத்தியாரய்யா... வாத்தியாரய்யா.... அடுத்த நிகழ்ச்சி ஆரம்பமாகப் போகுது... வாங்க..... கும்மியாட்டம் ரெடியாகிருச்சு.. அதற்கடுத்ததா கரகாட்டத்த போடுவோம் .... என்று அந்த அறிவிப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரமேஸ் கேட்டான்.

ஆனால் அந்தக் குரலைக் கேட்காமலேயே அந்த மேடையைப் பார்த்துக் கொண்டவாரே பாட்டு வாத்தியார்.... அவருடைய கண்களின் ஓரத்தில் ஒரு பக்கமாக..... வழியவந்த கண்ணீர்......................

அது ஆனந்தக் கண்ணீரா? இல்லை அழுகையா.................... அது அவருக்கே வெளிச்சம்............ ரமேஸ் தழுதழுத்த குரலில் அடுத்த நிகழ்ச்சியை அறிவித்து எல்லா நிகழ்ச்சியையும் முடித்தான்.. ரமேஸுக்கு குளிர் வந்திருச்சு................. குரல் மாறிருச்சுடா... அவனுடைய நண்பன் சொன்னதையும் அதனைப் பொருட்படுத்தவில்லை. இரவு ஒன்பது மணிக்கு நிகழ்ச்சி முடிவை எட்டியதும் அந்த ஒலிபெருக்கி பாட்டு வாத்தியாரின் மறைவையும் சோக கீதத்தையும் இசைத்தது.






ஊர் திரண்டது ஆயரக்க கணக்கினில் மக்கள் கூடினர். அந்த சங்கம மேடையில் பாட்டு வாத்தியார் அங்கவஸ்திரத்துடன் அழகாக கிடத்த வைக்கப்பட்டிருந்தார். அதிதிகளின் கையிலிருந'த மாலைகள் அவரது கழுத்தை நசுக்கிக் கொண்டிருந்தன. அந்த தோட்டத்து இளைஞர் அணி, கட்சி தலைவர்கள் என எல்லோரும் கூடி ஆக வேண்டிய வேலைகளைச் செய்து அதே மேடையில் அவருக்கு மரணத்தின் பின் துதிபாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொன்னாடை, மாலை என குவிந்து கிடந்தது.

ஊர் அழுதது. இப்படி ஒரு மனிதனை இனி பார்க்க முடியுமா? கூத்துக்காகவே வாழ்வை அர்ப்பனித் மனிதன்..... இனி யார் இப்படி ஒருவர் இந்த தோட்டத்திற்குக் கிடைக்கப் போகின்றார்கள்....? ஊர் கண்ணீர் அழுக புகழ் புராணம் பாடிக் கொண்டிருந்ததை அந்த பாட்டு வாத்தியார் கேட்கவா போகின்றார்? மலையகக் கூத்துக்களின் சங்கமம் திரட்டாத அந்த கூட்டம் அந்த பாட்டு வாத்தியாரின் மரணம் அழைப்பு இல்லாமலே கூட்டியிருந்தது. பாட்டுவாத்தியாரின் கனவுகளை அவரின் கழக உறுப்பினர்கள் அழகாகவே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அடுத்த அரங்க நிகழ்வில் டிக்கெட் வாங்க கியு வரிசையில் இளைய தலை முறையினர் கொழும்பு டவர் மண்டபத்தின் வாசலில் வெயிலையும் பொருட்படுத்தாது உள்ளே ஏசி மண்டபத்தில் பார்வையிட அவர்கள் காத்துக் கொண்டிருந்தனர்....

முற்றும்.

Thursday, October 13, 2011

வீடு கட்டப் போய் ஆணி வாங்கி வந்தாள்!




மஸ்கெலியா பெ.லோகேஸ்வரன்

மழை பெய்த சத்தத்தில் அந்த லயத்துக் காம்பறாக்கள் மெல்லமாய் ஆடத் தொடங்கின. ஓட்டைக் குடிசைகளும், தொடர்ச்சியாக இருந்த நாற்பது அடி லயன்களும் அங்கு ஒற்றுமையாய் காற்றுக்கு தலையசைத்துக் கொண்டிருந்தன. அடுத்தடுத்தாக நாற்பது லயன்கள். அதான் தோட்டத் தொழிலாளர்களது வீடுகள்......................

இன்னும் ஆறு மணிக்கு பத்து நிமிடம் தான் இருக்கின்றது. ச்சீ............... இருட்டும் முன்னதாக வீடு nபுhய் சேர வேண்டும். நாளை மறு தினம் திரும்பவும் வரவேண்டும்... புதன்கிழமை சவூதி பயணம். இந்த ஒரு வாரமாக வெளிநாட்டில் வேலை செய்வது எப்படி? அந்த வெளிநாட்டு முகவர் நிலையத்தில் பயிற்சி.

கொண்டுவந்து விட்ட புருசன் பிள்ளைகள் தனித்திருக்குமே என்று தேயிலைத் தோட்டத்திலுள்ள வீட்டிற்குச் சென்றுவிட்டான். இந்த ஒரு வாரப் பயிற்சியில்.............. அந்த லயத்து வீட்டு சின்ன அறைக்குள் தனக்கும் புருசனுக்கும் மட்டும் நடைபெற்ற விடயங்களெல்லாம்............. பயிற்சியில் இரவு நேரங்களில் இதெல்லாம் நடக்கும் என்பதையும் அவளுக்கும் வந்த மற்றப் பெண்களுக்கும் சிறப்பாகப் பயிற்சி கொடுத்தார்கள்....

அவள் உடல் களைத்து போயிருந்தது. கொழும்பிலிருந்து புறப்பட்ட பஸ் வண்டியிலிருந்து அவளது பயணம் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது. அந்த உயர்ந்த கட்டங்களும் வரும் வழியில் அவள் கண்ட வீடுகளும் அவளை அகலக் கண் விரித்துப் பார்க்கச் செய்தது. எப்டியும் வெளிநாடு அதுதான்... சவூதி போனால் நம்ம வீட்டை எப்படியும் திருத்திக் கட்டிப்புடலாம்...... மனம் பேசியது.. அப்பொழுதெல்லாம் அவளுக்கு வீடு மட்டுந் தான் கனவில் இருந்தது. தோட்டத்திலுள்ள ஒழுகிய கூரையைக் கூட இக் காலத்தில் மாற்றுவது சட்டப்படிக் குற்றம் என்று பக்கத்து தோட்டத்து முனியாண்டியை நிர்வாகம் வழக்குத் தொடர்ந்து சிறையில் தள்ளியிருப்பதெல்லாம் இந்த அபலைக்கு தெரியவில்லை.

அசதியில் துஸங்கிப் போனவள் அட்டன் பஸ் நிலையத்தை வந்து சேர இரவு பதினொரு மணியாகிவிட்டது. அழைத்து வர வந்து நிற்பதாகச் சொன்ன வீட்டுக்காரன் தண்ணியிலே மிதந்து அந்த ஆட்டோக்காரனுடன் போட்ட தண்ணி பார்ட்டியிலே .. இனி எழமுடியாது... என்கிற அளவுக்குக் குடித்துவிட்டு அந்த பஸ்டாண்டிலே சொந்த வீட்டைப் போல உடம்பை நீட்டியிருந்தான்.....

அவள் அவனருகில் சென்று எழுப்பினாள். எழும்புவதற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை. அந்த ஆட்டோக்காரன் அவளை வாங்க... வாங்க........... இவ்வளவு நேரம் உங்களுக்காகத்தான் பார்த்துவிட்டு குளிர்னு சொல்லி...... கொஞ்சம் குடிச்சிட்டாரு.... இப்ப அவர தூக்கிக்கிட்டுப் போக முடியாது. இந்த ஆட்டோவுல இருந்துட்டு கொஞ்சம் விடிஞ்சதும் போகலாம் என்று அவள் கேட்காமலேயே அவளது பைகளை ஆட்டோவுக்குள் ஏற்றி......... அவளை ஆட்டோ உள்ளே ஏற்றிக் கொண்டான்....

கதைத்தவாறே பயணக் களைப்பு வேறு... பயிற்சிக் களைப்பு வேறு............ அவள் உயிரற்ற ஜடம் போல் மாறினாள்................ ஆட்டோக்காரனின் குளிருக்கு மெல்லமாய் உரமாகிப் போனாள். அந்த இரவில் பிணத்துடன் உறவாடிக் nகொண்டிருந்தான் ஆட்டோக்காரன்..... பொழுது புலர்ந்தது... என்ன நடந்தது என்று தெரியாமலே....... அவனது புருசனை அன்போடு அழைத்துச் சென்று முகம் கழுவி விட்டு................ அந்த ஓட்டலில் உணவு சாப்பிட்டு........ அந்த ஆட்டோக்கரனுக்கும் வாங்கிக் கொடுத்து nதூட்டம் நோக்கிப் பயணமானார்கள்......................

எயார்போர்ட் போகும்போது நான் தான் வருவேன். காசெல்லாம் கொறச்சி எடுக்கிறேன்............... ஆட்டோக்காரன் உதவி செய்கிறானாம்.............









வேணாங்க......... எங்கள கூட்டிப் போக கொழும்புல இருந்து வேன் வருகுது........... அதுல போயிருவோம். மீண்டும் எதுவும் கிடைக்காது என்று நினைத்த ஆட்டோக்காரன் கெஞ்சம் கவலை அடைந்தான்..............


அவள் இன்று செவ்வாய்கிழமை அல்லவா? அதனால் குழித்து அந்தத் தோட்டத்துக் கோயிலுக்கெல்லாம் போய்..................... பிள்ளைகளுக்குத் தேவையான ஒரு வார உடுதுணிகளெல்லாம் எடுத்து வைத்துவிட்டு உணவு சமைத்து காலைக்கு.. மாலைக்கு என எல்லாம் தயார் செய்து விட்டு பண்ணிரண்டு மணிக்கு கொழும்புக்குச் செல்ல ஆயத்தமாகினாள்..........

அம்மா.............. இந்தப் புள்ங்கள ஸ்கூலுக்கு அனுப்பி படிக்க வைம்மா... பணம் அனுப்புறேன்.............. பார்த்துக்கம்மா............... எத்தனை நாளைக்கு தான் இந்த வீட்டுல வாழுறத... நாலு காசு தேடி வந்தாத் தான் செய்ய முடியும். அந்த மனுசன் குடிச்சு குடிச்சே எல்லாத்தையும் நாசமாக்கிப்புட்டான்................ அதுனால பணத்த ஓம்பேருக்கு அனுப்புறேன்..... கவனமா பார்த்துக்கம்மா................ அவள் கலங்கிய கண்களோடு அட்டனுக்குச் சென்று வெளிநாட்டு ஏஜண்டிடம் புதன்கிழமை பயணத்திற்கான அலுவல்களைக் கவனித்தாள்.

சவூதி பிளைட் மெல்லமாய் சவூதி எயார் போர்ட்டில் தரையிறங்கியது. வெளிநாட்டுக் கனவுடன் சென்றிருந்த சுமார் ஐம்பது பெண்களும் ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பணக்கார நாய்களும் அந்த பங்களாவுக்குள் வந்து தங்கியிருந்து.. ச்சீ............... என்னக் கொடுமை..... ஆள் செலக்கட் பண்ணுறாங்களூம்............. வீட்டு வேலைக்கா ஆள் எடுக்கிறார்கள்...? ஒன்றுமே புரியவில்லை............... அவளுக்கு.................

பயணம் வந்தாச்சு................ பெட்டி பெட்டியாய்ப் பணம் கிடைக்கும் என்ற நினைப்பு..... வெள்ளைக்காரன் தேயிலைத் தோட்டம் உருவாக்க மாசிக்கருவாடு இருப்பதாக் சொன்ன கைங்கரியம்............. இங்கு டாலர் டாலராக பணம் கிடைக்கும் என்ற நப்பாசை... இவ்வளவு காலத்திற்குப் பிறகும் நம்மவர்கள்......................

அவளை எந்த ஆண் எஜமானர்களும் எடுக்கவில்லை... அவள் அவ்வளவு அழகாய் யாருக்கும் தெரியவில்லை. மாடாய் உழைத்து மரத்துப் போன எழும்புக் கூட்டை யார் வாங்குவார்கள்..........?

ஒரு பெண் அவளை வீட்டு கக்கூசு, பாத்ரும், தோட்டம் செய்ய வாங்கினாள்.... அவளுக்கு சந்தோசம்.. அப்பா இந்த ஆண் காட்டுமிராண்டிகளிடம் அகப்பட்டு தினந்தோறும் ராத்திரியில் அவஸ்தைப்படுவதைவிட.... அப்பா. எங்க ஊரு மாரியாத்தா நல்ல வேலையா கொடுத்திட்டா................ அவள் மனதிற்குள் அந்தத தோட்டத்து மாரியம்மனை கும்பிட்டுக் கொண்டாள்..............

போனவள் இரண்டு மாதமாகியும் பணமும் அனுப்பவில்லை.. சேதியும் வரவில்லை..... அவள் புருசனோ தண்ணியும் பொண்டாட்டிச் சுகமும் இல்லாமல் தவித்தான்...... அப்படியே அந்த தோட்டத்து ஆத்தோர லயத்து பெண்ணிடம் சல்hபிக்கத் தொடங்கியவன் இன்று ஒரு வருடமாகியும் வீடு வருவதில்லை...

கிழவி இந்தத் தள்ளாத வயதிலும்..... அந்தப் பிள்ளைகளை தனக்கு முடிந்தளவுக்கு செய்து சாப்பிடக் கொடுத்து ஸ்கூலுக்கு அனுப்பி வந்தாள்... தாயும் இல்லை.................... தந்தையும் இல்லை.... என்ற நிலையில் அந்தப் பிள்ளைகள் தறிகெட்டுப் பேயிருந்தன....... எந்தப் பிள்ளைகளும் அவர்களிடம் நெருங்குவதில்லை............. துப்பரவில்லை.......திருட்டுத்தனம்........ இப்படி எல்லாமே மொத்தமாக அவர்களிடம் குடியேறியிருந்தன.................

சவூதியில் அவளுக்கு துஸங்குவதற்குக் கூட நேரமில்லை..... அந்த வீட்டில் எஜமானியின் கடுமையான துன்புறுத்தல்கள் என அவள் வேதனைப்பட்டது அவளுக்கு மட்டுமே தெரியும்.................. இப்போதெல்லாம் வேலை செய்யாவிட்டாலோ அந்த எஜமானிக்குப் பொழுது போகாவிட்டாலோ ஆணியை அவள் உடம்பிற்குள் குத்தி அடித்து... உணவோடு ஆணியைச் சாப்பிட வைத்து................ இப்படி அவள் வாழ்க்கை ஆணியாகிவிட்டது......................









எந்தத் தகவலையும் அவளால் இலங்கைக்கு அனுப்ப முடியவில்லை.............. ஒரு நாள் சேதி வந்தது...................... மாடியிலிருந்து துவறி விழுந்து இறந்துவிட்டாளாம்...... பிணத்தை சீல் வைத்து கொஞ்சம் அலகை;கழிக்காமல் அனுப்பியிருந்தார்கள்.............. கிழவிக்கு சந்தேகம் வந்ததாள் பிணத்தை வாங்க மறுத்தாள்............... அவள் பிணம் மீண்டும் அறுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.... வீடு கட்டும் கனவுடன் போனவள் ஒரு அரை கிலோ ஆணியை உடம்பினில் ஏற்றி வந்துள்ளாள்.............. அந்த பிணப் பெட்டியை கழற்றி அடித்தால் ஒரு கதவு மட்டும் தான் வரும்..........

அவள் உழைப்பு அவ்வளவு தான். புரோக்கரைப் பிடித்து ஒருவாறாக வெளிநாட்டு ஏஜண்டைப் பிடித்து பேசி நட்ட்;; ஈடாக அம்பதாயிரத்தை வாங்கி அடக்கச் செலவெல்லாம் செய்து ஒரு இருபதாயிரத்தை கையில் வைத்துப் பிசைந்து கொண்டிருந்தாள் கிழவி.........

முற்றும்.

கூட்டுக் களவாணி




அந்தத் தோட்டம் மிகவும் வரண்டு போயிருந்தது. மலைத் தேசத்திற்குள் 'எங்கும் பசுமை! எதிலும் பசுமை!' என்பதில் தோற்றுப் போயிருந்தது அந்தத் தோட்டம்!.
வாழ்க்கையின் வரட்சிக்கு அவர்களது அடுப்புத் திண்ணைகளே சாட்சி. அழகாய் வார்த்து மெழுகிடப்பட்டது போல அந்த அடுப்பு. மாசு மறுவில்லாமல் பூசப்பட்டிருந்த சாணிச் சாயத்தில் மாக் கோலம் எசகுபிசகில்லாமல் ஓவியனின் தூரிகையை மிஞ்சியிருந்தது அந்தக் கை வண்ணம்! அநேகமாக அந்தக் கோலத்திற்கு வயசு குறைந்தது ஒரு வாரமாகவேனும் இருக்கும்.அரிசியின் வரவை அது வழி மேல் விழி வைத்துக் காத்துக்கிடந்தது.
ஏதோ சில வீட்டுப் பிள்ளைகள் கொழும்பில் 'கார்மெண்ட்ஸ்', கடைகள், என விரல் விட்டு எண்ணக் கூடிய இரண்டு ஆசிரியைகள்,ஒரு பொலிசுக்காரர்,தோட்டத்து ஆசுப்பத்திரியில் ஆயா வேலையில் ஒருத்தர், என அந்தத் தோட்டத்தில் கொழுந்திருந்தாலும் இல்லாவிட்டாலும் வறுமையை விரட்டி வாழ்க்கையை வளமாக்கும் சுமார் பத்துப் பதினைந்து குடும்பம்.ஆனால் தேயிலையே வாழ்க்கை என வாழும் மிச்ச சொச்சத்தில் ஒரு நூற்றுக்கணக்கான குடும்பங்கள்.
அதில் மலைச்சாமி குடும்பம் கொஞ்சம் விசேசமானது.தெரிந்தோ தெரியாமலோ இப்போதெல்லாம் தோட்டத்து தொழிலாளர் குடும்பங்களில் கணக்குக்கு மூனோ இரண்டோ தான் பிள்ளைகள். அதில் நம்ம மலைச்சாமி கொஞ்சம் விசேசமானவர்.கடைசி காலத்தில் குழந்தைகள் 'தம்மை தாங்கும்' என்ற விடாப்பிடிக் கொள்கைக்காரர்.பிறகு சொல்ல வேண்டுமா என்ன? கருத்தடை சிபாரிசுக்கு வரும் அந்தத் தோட்டத்து மகளிர் கள உத்தியோகத்தருக்கு ஏச்சு தான் மிஞ்சும்.எதற்கும் கவலைப்படாத மனிதர் மலைச்சாமி.
பாவம் மனைவி என்ற பெயரில் கணவன் சொல்லைத் தட்டாத பதிவிரதை. மெசினுக்கும் அவளுக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கிறது.மெசினுக்கு அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை 'சிங்கர் ஒயில்' தான் எல்லா வீடுகளிலும். செல்லம்மா என்கிற மெசினுக்கு மட்டும் மாதத்தில் மூன்று நாள் விடுமுறை கிடைக்கும்.அதுவும் அரசாங்க செலவில். ஓய்வை அவள் பணக்காரர்களைப் போல வைத்தியசாலையில் கடத்திவிடுவாள். ஓரே ஒரு குறை தான். அப்பிள் இருக்க வேண்டிய இடத்தில் சுசிறி ஹோட்டல் காய்ந்த றோஸ்பான் அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கும்.
வீடு. அது மலைச்சாமி வீட்டில் குசேலரை விடக் கொஞ்சம் குறைவு தான். என்ன ஒரு எட்டிருக்கும். எட்டடி எடுத்து வைக்கவே கஸ்டப்படும் செல்லம்மாவின் இடுப்பிற்கு இதெல்லாம் மகிழ்ச்சியான விசயம் தான். 'ஏழைகள் வீட்டில் இறைவன் இருப்பான்' என்பது போல அவர்களது வீட்டில் அடுப்பெரிய மறந்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. பிள்ளைகளின் குறும்புகளை பார்த்து இரசிப்பதே அவர்களது வேலை. அவ்வளவு ஒற்றுமையான தம்பதி.
காலம் தான் அங்கு வாழ்க்கையை ஓட்டியது.செல்லம்மாவின் இடுப்பு இன்னொரு சுமைக்குத் தயாரானது.
இரண்டு முதல் ஐந்து வரையான 'பொம்புள புள்ளங்க' வயசுக்கு வரத் தயாராகிட்டாங்க.மலைச்சாமி மலைக்கவில்லை.அது தானாக நடந்து முடியம் என்ற நம்பிக்கை அவனுக்கு.
செல்லம்மாவுக்கு இப்போ தான் வயிற்றில் புளியைக் கரைத்தது.மூத்த புள்ள எப்போதும் 'அம்மா,என்னுட்டு கூட்டாளிங்களுக்கு பூப்புனித நீராட்டு விழா செய்ற மாதிரி எனக்கும் செய்வியாம்மா?' அசந்து போய்விடுவாள் செல்லம்மா.பதிலை எப்டிச் சொல்வது? ஒரு வேளை அடுப்பெரியவே பெரும் போராட்டம். இதில் நூறு பேரை அழைத்து விருந்து வைக்கிறதெல்லாம் நடக்கிற விசயமா?அவள் பதில் நம்பிக்கையுடன் வருவது தான் வேடிக்கை.
'அதெல்லாம் அப்பா பார்த்துக்குவாரம்மா. நீ யோசிக்காத.நம்ம தகுதிக்கு ஏத்த மாதிரி எல்லாம் செய்வோம்'
'நம்ம தகுதி'. வயசுக்குவரும் ஏக்கத்துடன் காத்திருக்கும் மகேசுக்கு இது தான் புரியவில்லை. 'எது நம்ம தகுதி? அவள் இப்படியிருக்குமோ? அல்லது பெட்டிக்கடைக்காரர் மகள் கோகிலாவின் சடங்கைப் போல நம்ம தகுதியிருக்குமோ?'
'அப்படியிருந்தால் சந்தோசம். வீடியோ எடுப்பாங்க.படம் பிடிப்பாங்க.கோழி விருந்தெல்லாம் இருக்கும். நானும் என்னுட்டு 'பிரண்ட்ஸ்' எல்லாம் நின்னு படம் பிடிப்பேன். அழகான இதயம் போட்ட 'எல்பம்' தான் வாங்கனும். அப்புறமா எப்பிடியாவது செல்போன்ல பேசுற மாதிரி ஒரு படம் எடுத்து பெருசாக்கி போடனும்.என்னமோ எல்லாரும் பீத்திக்கிறாளுக. அவளுக கிட்ட மட்டும் தான் 'சோலி கிட்' இருக்காம்'
அந்த அளவில் மலைச்சாமி பாராட்டப்படவேண்டியவன் தான். இலவசக் கல்வியை அவனுடைய பிள்ளைகளுக்காக விரட்டிப் பிடித்து விடுவான். மகேசுவுக்கு ஆங்கிலம்,சிங்களம் நல்லா வரும் என்ற செல்லம்மாவின் பீத்தலும் பொய்த்துவிடவில்லை.
'மகேசு! இப்படி யோசிச்சிட்டே இருந்தா எப்படி? போ. போய் வேலயப் பாரு' செல்லமாவின் குரல் அவளை நிதானத்துக்குக் கொண்டு வந்தது.
'மகேசு இப்ப கொஞ்சம் மாறுதலா தான் இருக்கிறா! அந்தக் காலத்துல பெரிய புள்ளங்கள ஆவுறதுனா பயம்! வெளிய துறுவ அனுப்ப மாட்டாங்க.வெளயாட முடியாது.லயத்துக் காடெல்லாம் சுத்த முடியாது. தாவணிய சுத்தி மூலையில ஒக்கார வச்சிருவாங்க. இப்ப உள்ள புள்ளங்க எப்படா பெருசாகுவோனும் நிக்குதுங்க'
'தீபாவளி எப்போம்மா வரும்?ங்கிறது போயி எப்ப எனக்கு 'பூப்புனித நீராட்டு விழா' செய்வீங்களானு கேக்கிற நாகரிமாப் போச்சு.இருக்கிறவனுங்கெல்லாம் விழா செஞ்சுடறானுங்க.நம்ம புள்ளங்கள அங்க அனுப்புனது தான் தப்பாப் போச்சு'
மலைச்சாமி நாலாம் நம்பர் மலையில் கவ்வாத்து வெட்டிய களைப்புடன் கட்டைக் கழிசானை தடவியபடி உள்ளே நுழைகிறான்.வரும்போதே செல்லம்மாவின் புதிய நச்சரிப்புக் காத்திருக்கும் என்பது அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
'என்னாங்க! நம்ம புள்ள வயசுக்கு வாற மாதிரி இருக்கு.செலவு நெறைய இருக்கு.கஸ்டத்தோட கஸ்டமா நாம ஊருல எல்லாத்துக்கு மொய் எழுதிருக்கோம்.நம்ம புள்ளவுட்டு விசேசத்தையும் பெருசா செய்யனும்ங்க!'
'அதுக்கு என்னா செஞ்சுட்டாப் போவுது.அதான் ஆட்டுக் குட்டி ரெண்டு இருக்கே.வித்தா செலவுக்கு ஆகும்'
'என்னாங்க!நம்ம புள்ளங்கள மாதிரி வளர்த்துட்டு அதப் போயி விக்கிறதா'
'என்னா செல்லம்மா? நாம என்னா குண்டுமணித் தங்கமா வச்சிருக்கோம்.எனக்கு மட்டும் ஆசையா விக்கிறதுக்கு? இப்ப கிலோ ஒன்னு எட்டுனூறு போவுது.எப்படியும் ஒன்னு இருபது கிலோ தேறும்.
வித்தா மொத்தமா ஒரு முப்பது நாப்பது வரும்.அத வச்சி செய்வோம்.அப்புறமா நம்ம கடைக்கார சேரு!
ஈ.பி,பஎப் பணத்த அடமானமா வச்சி காசு தாராறாம்.அது கெடக்கிதானு பார்க்கிறேன்.'
'அது நல்ல யோசனங்க. ஈ.பி,எப் காசுல கெடச்சா விசேசசமா செய்யலாம். கேட்டுப் பாருங்க!'
மலைச்சாமிக்கு வழமையான பிளேன்டி போய் இன்று இருபது ரூபா நெஸ்பிறே பக்கட்டிலிருந்து விருந்தாடித் தேத்தண்ணி மாவு வந்தது.
'இந்தாங்க. களைச்சிப் போயி வந்திருப்பீங்க! மூஞ்ச கழுவிட்டு குடிங்க.அப்புடியே அந்த புறோக்கர் பொன்னையாவப் பார்த்து 'டவுனு சேர' பார்த்து விசயத்த சொல்லி கேக்கச் சொல்லுங்க'
'சரிம்மா, நீ யோசிக்காத. குடிச்சுட்டு நான் போறன்.எல்லாம் சரி வரும்.'
மலைச்சாமி வைரம் பாய்ந்த கட்டை.நம்பிக்கை தான் அவனது மூலதனம்.அலட்டிக் கொள்ளமாட்டான்.
'பொன்னையா................. பொன்னையா........................'
'யாரு? ஆ.... மலைச்சாமி அண்ணனா...... கொஞ்சம் இருங்க.............. அவரு கொள்ளப் பக்கமா போயிருக்கிறாரு. வாங்க இந்த சோபாவில உக்காருங்க'
மலைச்சாமி அந்த சோபாவில் உட்காற யோசித்தான். 'சுவரோரமா பெத்தாம் பெரிய டீ.வி.சோபா எப்படியும் ஒரு ஐம்பது இருக்கும். நீட்டமா ஒரு றேடியோ பெட்டி. சில்வர் சாமானெல்லாம் அடுக்கி வக்கிற அந்த அலுமாரிய தூக்க ஒரு பத்துப்பேறாவது வேணும்.பெரிய கோப்பை பூட்டி தான் அவுங்க டீ.வி பார்க்கிறாங்க போல.....' அவன் மனம் பேசியது.
'வாப்பா... மலைச்சாமி.... என்னாப்பா இந்தப் பக்கம். நீ தான் வட்டிக்கு எல்லாம் வாங்க மாட்டியே!
என்ன சங்கதி?'
மலைச்சாமிக்கு மனசே கலங்கியது.இதுவரை எவரிடமும் கை கட்டி நின்று கைமாத்தோ,வட்டிக்கு பணமோ வாங்காதவன் அவன்.
'என்னா செய்யிறது? தேவைன்னு வந்தா வாங்கத் தானே வேணும்?'
புறோக்கருக்கு தலை சுற்றியது.மலைச்சாமியிடம் கொடுத்தால் திரும்ப வாங்க முடியுமா என்ன?
அவன் யோசிப்பது மலைச்சாமிக்குப் புரிந்தது.
'அண்ணன்.. வட்டிக்குப் பணம் வேணாம்.என்னுட்டு ஈ.பி,எப் பணத்த அடமானமா வச்சி செவுனு கடை சேர்ட்ட வாங்கித்தாங்க!'
'அது கொஞ்சம் கஸ்டம். முன்ன மாதிரி இல்ல. இப்ப பேப்பர்காரணுங்க பொய்க்கு மோசமா எழுதுறானுங்க. அதுனால் ஆபிஸ்ல எதுவும் செய்யப் பயப்படறாங்க'
'என்னா? அண்ணன் நீங்க தான் எப்பிடியாவுது எடுத்துத் தரணும்.ஒங்களால மட்டுந்தான் முடியும்.செல்லம்மாவும் ஒங்ககிட்ட சொல்லி கேக்கச் சொன்னுச்சு'
'சரி... சரி... எதுக்கும் நாளைக்கு வந்து பாரு.இன்னக்கி டவுனுக்குப் போறேன்.ஒனக்கு எவ்வளவு வேணும்'
' ஒரு அம்பது கெடச்சா நல்லா இருக்கும்.மொத தேவை வருது.அப்ப கடசி நேரத்துல கஸ்டப்படாம இப்பவே ரெடி பண்ணுனா தானே சரி வரும்?'
'ஆமா, அது நல்லது தான். அது சரி யாரு பேருல வாங்கப் போற?'
'செல்லம்மாவுக்கும் ஒடம்பு முடியல.அவவுக்கு வயசு நாப்பதாச்சு.அவ பேருல வாங்குறன்'
'அப்ப சரி நளைக்கு வாப்பா பாப்ப்போம்.....'
மலைச்சாமி சுமையை புரோக்கர் பொன்னையாவிடம் இறக்கி வைத்த நிம்மதியில் வீடு செல்ல அந்த ரொட்டித் தகரமாய் நெழிந்து வளைந்திருந்நத பாட்டாவை கால்களில் பவ்யமாகச் சொருகிக் கொண்டிருந்தான்.
'அப்பா..... அப்பா.............ஒடனே அம்மா வரச் சொன்னாங்க.........வாங்கப்பா......'
பதைபதைத்துப் போன மலைச்சாமி அவசர அவசரமாக ஓடினான்.அவனது மூத்த மகன் அப்பாவுடன் சேர்ந்து ஓடினான்.
'என்னாப்பா .. மக வயசுக்கு வந்துட்டா...மாமன்காரனுக்குச் சொல்லியனுப்பு...................'
அந்த மூக்காயியின் குரல் அவனுக்குச் செய்தியைத் தெளிவாகச் சொன்னது.
மலைச்சாமி முகத்தில் ஓரே சந்தோசம்.அவனது மச்சான் இருளாண்டியிடம் விசயத்தை நேரடியாகச் சொல்வது தான் சரி என்று நினைத்தவன் வேட்டி சட்டை மாற்றி தாம்பாளத் தட்டுடன் சென்றான்.
'வாங்க மச்சான்.... என்னா........... என்னுட்டு மருமக வயசுக்கு வந்துட்டாளாமே.... ரொம்பச் சந்தோசம்...... நானும் பவுனும் அங்க வரத் தான் பொறப்பட்டோம்'
'அப்பிடியா நல்லதாப் போச்சு.. சரி தட்ட வாங்கிக்குங்க'
'அதுக்கு என்னா மச்சான்? நம்ம வீட்டு விசேசத்துல இதெல்லாம் எதுக்கு?.....................'
'எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கு தானே'
'சரி..சரி பேசிகிட்டே இருந்தா நேரம் போயிரும்.வாங்க போவம்' பவுணின் அதட்டலுடன் கூடிய பரபரப்பு அவளது குரலில் தெரிந்திருந்தது.
மலைச்சாமியும் மச்சானும் பவுனும் சடங்கு வீட்டை நோக்கி நடந்தனர். 'பங்சனைப்' பத்தி மச்சானிடம் பேசி புறோக்கர் பொன்னையாவிடம் சென்றதை எடுத்துச் சொன்னான்.
'மச்சான்............. கவனம் பொன்னையாவும் செவுனு மொதலாளியும் நெறையப் பேற ஏமாத்தியிருக்கிறதா சொல்றாங்க'
'என்னா செய்யிறது? பேங்குலயா சேத்து வச்சிருக்கோம்? இது மட்டுந்தானே நமக்கிருக்கிற சொத்து. வேற வழியில்ல.புள்ளயும் ஆசப்படுது.செல்லம்மாவும் பெருசா செய்யனுங்குது.அதோட நெறய பேருக்கு நாமலும் செஞ்சிருக்கோமே? அதெல்லாம் வாங்க வேணாமா? மொத 'பங்சன்' வேற...........................'
'அப்ப சரி! நாளக்கி பொன்னையாவ பார்க்கப்போவம்? இன்னக்கி சாமானெல்லாம் இருக்கா?'
'பெருசா இல்ல......... கையில காசும் இல்ல.பெட்டிக் கடையில தான் கொஞ்சம் கடன் கேக்கணும்'
'வேணாம்... வேணாம்..... இப்ப வீட்டுக்கு தேவயான சாமான நான் வாங்கித் தாறேன்'
இரவு வந்தது.மச்சான்மார்கள் கொஞ்சம் சாராயம் குடித்துக் கொண்டார்கள்.நடுச் சாமம் வரை கதை பேசி அப்பிடியே தூங்கிப் போனார்கள்.பொழுது புலர்ந்தது.மலைச்சாமியின் முதல் வேலை புரோக்கர் பொன்னையாவைப் பார்ப்பது தான்.
'அண்ணன்........ அண்ணன்....................'
'ஆ! மலைச்சாமியா? ஓன் விசயமா கதைச்சேன் மெதல்ல ஏலாதுன்னாரு.பெறகு ஒனக்காகப் பேசி ஒத்துக்க வச்சிட்டேன்.பத்து மணியப் போல நீயும் செல்லமாவ கூட்டிக்கிட்டு வா.நம்ம ஆட்டோவுல போவம்.வாறப்ப அயடிண்டி கார்டு,பேங்கு பாஸ் புக்கு,ஈ.பி.எப் துண்டு எல்லாத்தயும் மறக்காம கொண்டு வந்துரு'
எல்லாம் அறிந்தவன் போல 'அதெல்லாம் நேத்து ராத்திரியே மச்சான் சொன்னாரு.எடுத்து வச்சிட்டேன்'
என்றான் சந்தோசத்துடன்.ஆனால் அவனுக்கு இப்போதெல்லாம் மகேசுவின் சடங்கு மட்டும் தான் நினைவுக்கு வந்தது.தருணம் பார்த்து பாம்பு அடிக்கும் வித்தை எல்லாம் அவனுக்குத் தெரியாது.
புரோக்கர் பொன்னையாவுக்குத் தான் அது வைந்த கலை.
மலைச்சாமி ஆட்டோவுக்குள். செல்லம்மா மனக் கண் முன்னால் 'பங்சனை' நடத்தி முடித்து விட்டாள். கடைக்கு முன்னாள் சர்ரென்று ஆட்டோ பிரேக் விழுந்தது.................... விழுந்தது அவர்களின் ஈ.பி,எப் பணத்திற்கும் தான்.
கையொப்ப விவகாரம் எல்லாம் முடிந்தது.அறுபது ஆயிரத்திற்கு கடிதம் எழுதப்பட்டது .கையில் ஐம்பது கொடுக்கப்பட்டது.ஏதோ மாதம் அஞ்சு வட்டி மட்
டும் தானாம்.மிச்ச அஞ்சும் செலவுக் கணக்காம்.
இந்த 'அஞ்சு'. அவர்களுக்குப் புரியவில்லை.வாங்குன காசுக்கு மாசம் அஞ்சாயிரமாம்.
சடங்கு அதாவது 'பூப்புனித நீராட்டு விழா' இனிதாக நிறைவேறியது.மொய் பணம் நினைத்தவாறு வரவில்லை. 'புள்ளங்க,ஆசப்படுது!ஒரு டீ.வி வாங்கிருங்க.வயசுக்கு வந்தப் புள்ளங்க அக்கம் பக்கத்து வீட்டுக்குப் போனா என்னா நல்லாவா இருக்கு? செல்லம்மா மொய் பணம் இருபதுக்கு வேலை வைத்திருந்தாள்.மலைச்சாமிக்கு அது சரியென்றேபட்டது.
வருசம் இரண்டாகியது.செல்லம்மா நோய்வாய்ப்பட்டாள். ஈ.பி.எப் பணத்திற்கு எழுதப்பட்டது.மொத்தமாக ஒரு இலட்சத்து எழுபத்தையாயிரத்து முன்னூற்றி சொச்சமாம்.மலைச்சாமிக்கு இப்போது தான் புரோக்கர் பொன்னையாவும் செவுனு சேரும் ஞாபகத்திற்கு வந்தார்கள்.
'அண்ணன்... அண்ணன்.... ஈ.பி.எப் பணம் வந்திருச்சு....ஆபீஸ்ல சொன்னாங்க...'
'ஆமாம் மலைச்சாமி நானும் சொல்லனும்னு நெனச்சேன்.அது பேங்குல போட்டு கணக்குப் பார்த்தா நீ தான் மிச்சம் கொடுக்கணும்.ஒரு ஏழாயிரம் அளவுல தேடிக்கிட்டு வந்திரு........................'
'என்னா சொல்றீங்க அண்ணன்..........................' மலைச்சாமிக்கு தலை சுற்றியது.
'பாரு........................மலைச்சாமி, அறுபது மொதல்ல கொடுத்தாச்சு.மாசம் அஞ்சுப்படி இருபத்தினாலு மாசம்.அப்ப ஒன்னு இருபது வருது.மொத்தமா ஒன்னு எம்பதாச்சு! ஒனக்கு வந்திருக்கிறதோ ஒண்ணு எழுபது சொச்சம்!அப்ப மிச்சத்த கொண்டு வந்து கொடுத்திரு!எனக்கு வேல இருக்கு நான் வாறன்'
பதிலைக் கேட்காமலே புரோக்கர் பொன்னையா இடத்தைக் காலி பண்ணினான். மலைச்சாமி வாயடைத்துப் போய் வெளியேறினான்.ஒரு சந்தோசம் அவனுக்கு.அவனுடைய ஈ.பி.எப் பணம் மிஞ்சியது தான். செல்லம்மா மிச்ச காசு வரும் என்று காத்திருந்தவள் விசயம் புரியாமலே இவ் உலகிலிருந்து விடைபெற்றுக் கொண்டாள்.
மலைச்சாமி இனி எந்த மகளுக்கும் சடங்கு சுத்தப் போவது இல்லை. அவனுடைய பிள்ளைகளும் உண்மையைப் புரிந்து கொண்டார்கள். பாடசாலையில் அவர்கள் 'படிக்கின்ற மாணவிகள்' அல்லவா? சடங்கு சுத்தியதில் அந்த வீட்டுக்கு புது வரவாக இருந்த அந்த டீ.வி மட்டும் மனதில் நிறைந்த கானங்களில் ' போனால் பொகட்டும் போடா........................................' பாடலை ஒலித்துக் கொண்டிருந்தது.மலைச்சாமி நினைத்துக் கொண்டான்.
'ஏமாறும் தொழிலாளர்களுக்கு நம்ம பாடம் புத்தி சொல்லும்' என்று.
அந்த வகையில் அவனும் ஒரு ஆசானாகின்றான்.
பிள்ளைகளை அந்தப் பாடசாலையும் நிர்வாகமும் தலைநிமிரச் செய்திருந்தது. இப்போது இரண்டாவது மகள் 'தோட்ட விழிப்புறவுக் கழகத்தின்' தலைவியாய் தோட்ட மக்களுடைய அறியாமைக் கடலை அப்புறப்படுத்துவதற்காகச் சமூகத்தின் கைகோர்த்துக் கொண்டிருக்கிறாள்..

முற்றும்.

Sunday, October 9, 2011

விண்ணக இளவரசனின் கனவு














24-08-2008ஆம் ஆண்டு சிறுவர் விரந்து பகுதியில் வெளிவந்த எனது கதை.

- பெரிசாமிபிள்ளை லோகேஸ்வரன் -


அன்று வழமை போல விண்ணகத்தில் தேவ சபை கூடியது. எங்கும் பரபரப்பு. எல்லோரும் ஆவலாய் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். இராணியின் முகத்தில் எள்ளவேனும் சந்தோசத்தைக் காணமுடியவில்லை. தேவ அரசனும் மந்திரிகளும் பிரதானிகளும் பலமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்படி என்ன பலமான Nhசனை என்றா கேட்கின்றீர்கள்?

இளைய இளவரசனின் உலகச் சுற்றுலா தான் இதற்கெல்லாம் காரணம். தேவ சபை ஒருவாறாக பலமான யோசனைகளுக்கு மத்தியில் மீண்டும் ஆரம்பமாகியது.

மந்திரி அரசர் முன்னிலையில் எழுந்து நின்று

அரசே! இளவரசனின் உலகச் சுற்றுலாவை நாங்கள் அனைவரும் வன்மையாகக் கண்;டிக்கின்றோம் என்றார்.

காரணம் என்ன மந்திரியாரே? இளவரசனின் இந்த ஆசை நியாயமானது தானே! என்றார் மன்னர்.

அரசே! தாங்கள் இன்னும் தேவசபையின் உள் விடயங்களில் மட்டுமே மூழ்கிப் போய் இருக்கின்றீர்கள். அதனால் உலக நடப்புகளை நீங்கள் அறிய தவறிவிட்டீர்கள்.

இன்று உலகிலுள்ள மனிதர்கள் யாவரும் தாங்கள் படைக்கப்பட்ட இரகசியங்களை மறந்து ஒவ்வொருவரும் சுயநலம்,பணம்,பொருள்,இடம்,மதம், என்று எந்தெந்த வகையில் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கின்றார்கள் தெரியுமா?

எல்லா நாடுகளிலும் எப்போது போர் வெடிக்கும்? எத்ததனை பேர் சாவார்கள் என்றே தெரியாது! அப்பாவி மக்கள் யாவரும் வாய்மூடி நிற்கின்றார்கள் என்றார்.

அங்கு எம் இளவரசால் ஒரு நிம்மதியான பயணத்தை மேற் கொள்ள முடியாது. தெரியாத இடங்களில் ஒவ்வொரு சட்டங்கள் இயற்றியிருக்கின்றார்கள்.ஃஇளவரசன் எங்கேயாவது திருதிருவென முழித்துக் கொண்டு இருந்தால் அவரைச் சிறைப்படுத்தி விடுவார்கள். போதாதற்கு எங்கும் நிலக் கண்ணி வெடிகள் வேறு! அது மட்டுமல்ல...............

அரசே! தலைமீது எறிகனைகள். வான் தாக்குதல்கள் என்று எங்குமே அலறல்களும் மரண ஓலங்களும் தான்.இது போதாதென்று ஆட்கடத்தல் வேறு!இளவரசனையும் யாராவது கடத்திக் கொண்டு பேனால் நாம் எவ்வாறு கண்டுபிடிப்பது என்றார் மந்திரி.

மந்திரியாரே1 நீ கூறுவதைக் கேட்டால் என் உள்ளமே நடுங்குகின்றது.பிரம்மா படைத்த அழகான உலகத்தில் இத்தனைச் சங்கடங்களா.............................?
மனிதர்களுக்குள் இப்படி மூர்க்கக் குணங்களை வளர்த்தவர்களை மனிதத் தலைவர்கள் கண்டு கொள்ளாமல் ஏன் இருக்கின்றார்கள்?

அரசே ! அவர்களே கதி கலங்கிப் போய் இருக்கின்றார்கள். எப்போது யார் தலையில் எது விழும் என்றே தெரியாமல் பாதுகாப்புக் கவசங்களுடனும் ஆயிரக் கணக்கான சிப்பாய்களுடனும் வீட்டிலும் தெருக்கிளிலும் செல்கின்றார்கள்.

அதுவெல்லாம் சரி மந்திரியாரே! அப்படிப்பட்ட உலகத்திற்கு நம் இளவரசனை அனுப்புவது நல்ல யோசனையாகப்படவில்லை தான்................ ஆனால்.................. ஒரு குழந்தையின் நியாயமான ஆசையை நிறைவேற்ற வேண்டியது பெற்றாரின் கடமையல்லவா?

ஒரு தந்தையின் இடத்திலிருந்து அவனது ஆசைகளை நான் நிறைவேற்றப் போகின்றேன். ஓர் இளவரசன் கோழையாக நின்று உலகப் பயணத்தைச் செய்யாமல் இருப்பது தேவசபைக்கே கேவலம்!

வீரனுக்கு ஒரு முறை சாவு தானே! நடப்பது நடக்கட்டும்.

இளவரசே! உங்களின் விருப்பப்படி நீங்கள் நடந்து கொண்டு உலகப் பயணத்தை மேற்கொள்ளலாம். ஆனால், அந்தந்த நாட்டுச் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப நீங்கள் நடந்து கொண்டு எம் தேவ சபையின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.

அப்படியே ஆகட்டும் அரசே! என் பயணத்தைத் தொடர என் தாய் தந்தையராகிய தங்களுடைய ஆசீர்வாதங்கள் வேண்டும்..... என்று பணிந்து அவர்களை வணங்கி தன் பயணத்தைத் தொடர்ந்தார் இளவரசு..........

வானம் அவரது கன்னங்களை முத்தமிட்டது. மேகங்கள் இளவரசனை தாலாட்டி வரவேற்றன! இளவரசன் பறக்கும் தட்டில் பறந்தார். அவரது முகத்தில் மிகப் பெரிய மகழ்சி!

அங்குமிங்குமாய் இளவரசனின் கண்கண் வட்டமிட்டன. திடீரென்று வானத்தைக் கிழித்துக் கொண்டு ஒரு நீண்ட ஆயுதம் போல் பறந்து சென்றது. இளவரசன் மெதுவாகச் சுதாகரித்துக் கொண்டு உலகின் ஒரு பகுதியில் இறங்கினார்.

உலகம் அழகாய் இருந்தது. மனிதர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். எங்கும் பச்சைப் பசேலெனவும் உயர்ந்த மலைகளும் காடுகளும் ஆறுகளும் அருவிகளும் கடலும் அவரை வசீகர்த்தன.

இளவரசனுக்குக் கொள்ளை ஆனந்தம்! மந்திரியார் தம் பயணத்தைக் கெடுக்கவே திட்டம் தீட்டியிருக்கின்றார். பூமியின் ஒவ்வொரு இடமாக சுற்றிப் பார்த்தார். பஞ:சுத் தரையில் நடந்த பாதங்களுக்கு இது கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது.

அவர் ஒரு அழகிய நகருக்குள் பிரவேசித்தார். அங்கு வாகனங்கள் ஓடிக் கொண்டிருந்ததையும் உயர்ந்த கட்டிடங்களையும் கண்டு அவர் சிந்தை கவர்ந்தார். நகரின் எல்லா இடங்களையும் பார்க்க எண்ணி தன் பயணத்தைத் தொடர்ந்த போது திடீரென்று ஒரு பயங்கர வெடிச் சத்தம்... எங்;கும் அலறல்கள்.............. மரண ஓலங்கள்.................... எங்கும் இரத்த வெள்ளம்...................................... மனிதர்கள் பயணித்த வாகனங்கள்.................................................. தலைகுப்புறக் கிடந்தன.

இளவரசு நடுநடுங்கிப் போனார்.

பின்னர் தன் நீண்ட நாள் கனவான கடற்கரை உலாவிற்குச் சென்றார். தன் தந்தையின் அனுபவங்களைக் கேட்டிருந்த அவருக்கு அதனை அனுபவிக்க கோடி ஆசை. கடலின் மேலே நின்று வானத்தைக் கிழித்துக் கொண்டு அந்த மீன்களை அள்ளினார்.

ஆஹா...... தேவ சபையிலே கிடைக்காத இந்த உயிரினங்கள்................ எவ்வளவு அழகு!!!!!!!!!!! எவ்வளவு நளினம்............ வியந்து போனார் இளவரசு!

அந்த அனுபவம் அவரை மகிழ வைத்தது. ஆனால், எல்லா திசைகளிலிருந்தும் வந்த மிதக்கும் வாகங்கள அதாவது கப்பல்கள் திடீரென குண்டுமாறி பொழிந்தன.

வானம் அக்கினிப் பிழம்பாய் காட்சியளித்தது. ஓரே புகை மூட்டம். இளவரன் வழி தெரியாமல் தவித்தார்.

இவ்வாறு நடக்கும் எற்றறிந்திருந்த அரசர் மந்திரியாரை அனுப்பியிரந்தது இளவரசனுக்குத் தெரியாது. மந்திரியார் மிகவும் பத்திரமாக இளவரசனை தேவ சபைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு அரசனிடம் இளவரசன் இவ்வாறு கூறினான்......................

அரசே! மனிதர்கள் உலகில் வாழத் தெரியாமல் எங்கும் சண்டை பிடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். குழந்தைகள் எல்லாரும் எதிர்கால கனவைத் தொலைத்திருக்கின்றார்கள். சிலர் கைகால்கள் இல்லாமலும் பெரியவர்கள், உறவுகளைத் தொலைத்து அனாதையாய் நிற்கின்றார்கள். வீடு, வாசல் என்று எதுவும் இல்லை.

உலகம் இப்போது வாழத் தகுதியற்ற ஓர் இடமாக மாறிவருகின்றது.

அரவே இனிமேல் தங்களது வார்த்தையைத் தட்டமாட்டேன். மூத்தோரின் சொல் கேளாது நான் அடைந்த துன்பங்கள் ஏராளம்...................... உலகச் சிறுவர்களுக்காக இனி நான் இறைவனை வேண்டப் போகின்றேன் என்றார்.

இளவரசின் வருகையைக் கண்ட தாய் அவனை அப்படியே அள்ளிக் கொண்டு வாரி அணைத்துக்கொண்டாள்..

முற்றும்.

Friday, October 7, 2011

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..............................























பெரியசாமிபிள்ளை லோகேஸ்வரன்




அந்தப் படுக்கறையில் அவனது முகம் பதிந்து கிடந்தது. தலையணை முழுக்க முழுக்க நனைந்து போய் நனைந்து தொலைத்திருந்தது.

என்ன இருந்தாலும் அவள் அப்படிச் செய்திருக்கக் கூடாது... அவன் அந்த நினைவுகளை மீட்டு மீட்டு தன்னையே கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தான்.....
எத்தனை ஏமாற்றங்கள்.... ச்சீ.... இந்தப் பெண்கள் தான் எத்தனை நடிப்புக்காரிகள்;;....... அவன் பெண்ணுலகத்தையே வெறுத்தான்.....

எத்தனை நாட்கள்... இந்த வாழ்க்கைக்காக... அதுவும் அவளுடன் சேர்ந்து வாழும் அந்த இனிய வாழ்க்கைக்காக.... ச்சீ....... என்னை நினைக்கவே எனக்கு வெறுப்பாக இருக்கின்றது.

நிலம் வாங்கி..... வீடு கட்டி....... அவளுக்கென்று ஒரு அறை அமைத்து..... அதில் பீரோ முழுக்க பார்த்துப் பார்த்து உடைகளை வாங்கி அடுக்கி........ அவள் சமையலறையில் கஸ்டப்படக் கூடாதென நினைத்து கேஸ் அடுப்பு முதல் துணி துவைக்கும் இயந்திரம் முதல்................. அத்தனையும்.............. என்னக் கொடுமை?

அவள் அவனுடன் நன்றாகத் தானே இருந்தாள்? பிறகென்னவாம் வந்தது? காதலை அவள் காமத்திற்கோ.. கட்டிலுக்கோ நினைக்கவில்லை... அந்தளவில் அவள் சுத்த யோக்கியதை தான்..............................

அப்படியிருக்க என்ன நடந்தது....... அவளுக்கென எழுதிய கடிதங்கள் எல்லாம்.... அது கூட பரவாயில்லை............... என் உணர்வுகள்...........................

அவளுடன் கைகோர்த்துச் சென்ற அந்த நாட்கள்?

வாழ உழைப்பு இருந்தால் போதாதா? என்னுடைய இந்த பத்தாயிரத்தில் அவளால் வாழ முடியாதா? அவனவன் தினமும் நூறோ இருநூறோ தான் உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றுகின்றான்.

இவளுக்கு மட்டும் திடீரென்று எப்படி வந்தது? இந்த ஆடம்பர வாழ்க்கை மோகம்?

பட்டும் பட்டாடையும் வெறுத்து.............. தமிழ் கலாசாரம் அறுத்து.............................. அந்தஸ்து என்ற பெயரில் கட்டைக் காற்சட்டையுடனும் மொட்டைக் கை சட்டையுடனும் இரவுப் படுக்கையில் நைட்டி உடுத்து யாரை இவள் மயக்கப் போகின்றாள்...............

எப்படி வாழ்ந்தாலும் அவள் ஒரு ஆணுடன் தானே வாழ வேண்டும்? அவன் தன்னையறியாமலே படுக்கையில் முகத்தைப் புதைத்து அழுதவாறே அப்படியே தூங்கிப் போனான். காதல் அவன் மனதை நசுக்கிப் பிழிந்தது.

காலம் ஓடியது. அவளுக்கு.... ஐந்து வருட காதல் வாழ்க்கையை அறுத்தாலும் அழகான ஆடம்பரமான அவள் நினைத்த வாகனம். வெளிநாட்டுப் பயணம்.... இப்படி எல்லாம் காலடியில் கொட்டிக் கிடக்கின்றது..... அவள் சந்தோசமாக இருக்கின்றாள்;.....

ஆனால் அவளை காதலித்த அவன்..... நீங்கள் நினைப்பது போல தாடி வளர்த்து... சிகரட் குடித்து.............. கென்சர் வந்து................ உருக்குலைந்து.................................. இப்படியெல்லாம் இல்லை.......

நிதானமான முடிவு அவனை இன்று நல்ல நிலையில் வைத்திருக்கின்றது............ அவன் அமைதியான .............. அழகான நாலு பேர் மெச்சும் வாழக்கை தான் வாழ்கின்றான்................

இருந்தாலும், ஏன் அவளுக்கு இப்படி ஒரு ஆசை.....................?

ஆண்கள் காதலிப்பதற்கு முன் மனம் நிரம்புகிறதோ இல்லையோ பணத்தை நிரப்பிக் கொள்ள வேண்டுமோ?

அப்படிப் பார்த்தால் அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...... என்ற பாடல் தான் நினைவுக்கு வருகின்றது.

எப்படியோ இந்தக் காதல் செத்துப் போனாலும் இரண்டு பக்கமும் இரண்டு பேரும் நன்றாகத் தான் இருக்கின்றார்கள். பிறகென்ன கதையை முடிக்கலாம் தானே என்று நீங்கள் நினைப்பது எனக்கு விளங்குகின்றது.

ஆனால்... அந்த இருவருமே நிஜ வாழ்க்கையில் சந்தித்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப்பார்த்தால் இப்படித்தான் கற்பனை(?) வந்தது...........

ச்சீ போடா..... நீ ரொம்ப மோசம்.................. கொஞ்சமாவது என்மீது உண்மையான அன்பு இருந்தால் என்னை விட்டுவிட்டுப் போயிருப்பாயா? எத்ததனை நாட்கள் உனக்காக... உன் அழகான அந்த அன்பிற்காக... ஏங்கிப் போயிருக்கின்றேன் தெரியுமா? அவள் சிணுங்கிக் கொண்டே அவனைப் பார்த்தாள்..

உனக்கென்ன ...... பணம்... மாடி வீடு.............. பிளைட்டுன்னு வாழ்க்கை ஜாலியா தானே இருக்குது........... பிறகு எதற்கு? இந்த பொய்யான கோபம்.....................?

அட போடா.............. அங்க..... எல்லாம் இருக்குது...... என் வீட்டுக் காரனைத் தாண்டா தேட வேண்டியிருக்கு................. அவனுக்கு போதை தலைக்கேறினா அவ்வளவு தாண்டா... கேட்டா............. இருக்கு அனுபவிக்கிறேன்னு சொல்றான்......... ஆனா அவன் என்ன அடிக்க மாட்டான்.. எப்போ பார்த்தாலும் பிரெண்டோட பார்ட்டி. அது இதுன்னு................ ராhத்திரி பத்து பண்ணிரண்டு மணிக்கு தான் வருவான்... சிலவேளை அதுவும் இல்லடா...............................

எனக்கு டீவி, இண்டர்நெட்.மூனு புள்ளங்கோளட வாழ்க்கைப் போகுது.....................

அதகை; கேட்ட அவனுக்குச் சிரிப்பு வந்தது...... ச்சீ .. எவ்வளவு மடையன் நான்............. தேவையில்லாம தலையணையை நனைச்சிப்புட்டேனே...............

சரி... சிரி இனி யோசிச்சு என்னா ஆகப்போகுது....? அவன் அவளிடம் சொன்னான்...........

அதுவும் சரிதானடா....... நீ கொஞ்சம் வீட்டுப் பக்கமா வந்துட்டுப் போடா....................... எனக்கு செத்துப் போன அந்தக் காதல் வேணும்டா................. வருவியா............................. அவள் கேட்டுவிட்டு அந்த பதினைந்து வருட காலத்திற்கு முந்தைய காதலை எண்ணி தலை குணிந்து ............... பழையபடி தரையில் பெருவிரலால் கோலம் போட்டு................ அந்த இடத்தை மறுபடியும் அலங்கோலப்படுத்தியிருந்தாள்.....

அவள் தலை நிமிர்ந்தாளோ தெரியாது..................... அவன் நூறடி தூரத்திற்குச் சென்றுவிட்டான்................ அவனுக்கு நிறைய வேலையிருக்கிறது. அவனது உழைப்பு தானே அவனை இன்று உயர்த்தியிருக்கின்றது........ தொடுவானா அந்தத் துன்பத்தை மீண்டும்...........................................

முற்றும்!

குப்பிலாம்பும் குடிலும்...................








- பெரியசாமி பிள்ளை லோகேஸ்வரன் -


அந்தத் தோட்டம் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தது. எங்கும் நிசப்பதம். ஆள் அரவம் இல்லாத ஒரு அமைதி! சில்லென்ற காற்று மட்டும் நம் உடலின் தோளைத் துளைத்துக் கொண்டு உள்ளே செல்லும் ஒரு அலாதியான இன்பம் கலந்த துன்பம்.....

அந்த மண் மேட்டிலுள்ள வங்கியில் ( நிலப்பகுதி) ஒரு குடில். நாலா புறமும் இயற்கையை அப்படியே ஆராய்ச்சிக்காக வாரி வழங்கும் ஒரு குடில். அந்தக் குடிலுக்கென்ன ஒரு முப்பது அல்லது முப்பத்தைந்து வயதிருக்கும்.........................

மண்னெண்ணெய் லாம்பு கொஞ்சம் கண் சிமிட்டி அவ்வப்போது காற்றின் திசையை கப்பலோட்டிக்குக் காட்டுவதைப் போல காற்றோடு சல்லாபித்துக் கொண்டு இருக்கும்..... ஊர் உறங்கினாலும் அந்தக் குடிசையில் இரவு நேரங்களிலும் குப்பிலாம்பு தூங்காமல் விழித்துக் கொண்டிருக்கும். அந்த லாம்புக்கொரு ஆசை! ஆம், எப்படியாவது இந்தத் தோட்டத்தில்...... இல்லை... இல்லை...... இந்த மலையகத்தில் ஏ.எல் வரை படித்த ஒருத்தரை உருவாக்கிவிட வேண்டும் என்று அது ஒற்றைக் காலில் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தது.

வெள்ளைக்காரன் கொண்டு வந்து இங்கு விட்டுவிட்டுப் போய் என்ன..... ஒரு நூற்றைம்பது ஆண்டிருக்கும்.... இந்தக் குடிலும் அந்த குப்பி லாம்பும் இயற்கையின் சீற்றங்களைத் தாங்கிக் கொண்டு படித்தவனுக்காக ....... ஏங்கிக் கொண்டிருந்தது.

குப்பிலாம்பு அடிக்கடி சொல்லும்... ஷஎன்னடா..... எப்படியாவது நம்ம காலத்திலேயே ஒரு படித்தவனை இந்த தோட்டத்தில் உருவாக்கிவிட வேண்டும். எனக்கும் வயதாகிக் கொண்டு போகின்றது... என் கண் மூடுவதற்குள் என் கனவு நிறைவேற நீ உதவ உதவவேண்டும்.... என்றது.

ஷகவலைப்படதே... உன்னுடைய இயலாத நிலையிலும் நீ எப்படி.......................

இந்த மழையிலும் வெயிலிலும் தாக்குப் பிடித்து இந்தக் குடும்பத்திற்காக உழைக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்..... நானும் இப்போ: அப்போ என்று தான் இருக்கின்றேன். எத்தனை முறை இந்த காற்று என்னோடு சல்லாபித்துக் கொண்டிருந்தது.

ஆனால்............ அந்தக் காற்று என்ன நினைத்தததோ தெரியவில்லை...... ஆடி மாத்தில் என் நெஞ்சையோ நடுநடுங்க வைத்துவிட்டது. அப்படி என்னதான் கோபமோ..... என் மீது இந்தக் காற்றுக்கு?

நாமெல்லாம் ஒத்துழைத்தால் தானே உன்னுடைய இந்தக் கனவு மெய்யாகும்.... அதை நான் அதற்குச் சொல்லக் கூட முடியாமல் என் மூச்சை அடக்க அது துடியாய்த் துடித்தது போல இருந்தது....

ஷஉண்மைதான்... அந்த ஆடி மாதக் காற்றில் குளிர் ஜொரம் வராலிருக்க எத்தனைப் எனக்குள் தான் போராட்டங்கள்? என்னை எத்தனை கவனமாகப் இந்த வீட்டு கிழவன் சுற்றி வர மதில் அமைத்துக் காபப்பாற்றியிருக்கின்றான். அந்த நன்றி விசுவாசத்திற்காகவாவது....... நான் கண் மூடும் முன்னால்;....... என் படித்தவன் கனவு நிறைவேறியாகிவிட வேண்டும்....?

உனக்கு மட்டுமா இந்த சோதனை... படித்தவனுக்குத் தான் சோதனை வைப்பார்கள்.... ஆனால் உனக்கும் எனக்கும் இந்த காற்றும் மழையும் வைக்கும் சோதனை?

என்கிற பரீட்சையை எழுதி நமது கம்பீரத்தை அடிக்கடி சோதித்துக் கொள்வதைப் பார்க்கும் போது இந்த நூற்றாண்டின் மாபெரும் நினைவுச் சின்னங்களாக நம்மை யுனெஸ்கோவில் நிறைவேற்றுவார்களோ தெரியாது...................

அந்தக் குடிலும் தன் வேதனையை புலம்பியது.

ஏய்... குப்பிலாம்பே............ எப்படி உனக்கு இப்படி ஒரு சிந்தை வந்தது?.....

குடிலுக்கு எப்போதே கேட்கத் தோன்றிய ஒரு வினா. இன்று தான் கொஞ்சம் ஆசுவாசமாகக் கதைக்க வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. ஏன் தெரியுமா? இது கோடை விடுமுறைக் காலம். எந்தக் காற்றும் மழையும் அவ்வளவு சீக்கிரமாக இவர்களை அண்டுவதில்லை.....

ஓ! அதுவா.... அந்த திண்ணையில் உட்கார்ந்திருக்கிறானே....... அந்த கோட்டுக் கிழவன்! அவன் தான் என் லட்சியத்தின் மூலகர்த்தா. இந்தத் தோட்டத்தில் பாட்டு மாஸ்டர் அவன் தான். இந்த மலையகப் பிரதேசத்தில் இந்த காலத்திலெல்லாம் அப்படி ஒன்றும் இலகுவாக பட்டம் கிடைக்காது. ஆனால் இவனுக்கு மாஸ்டர் பட்டம் படிக்காலே கிடைத்துவிட்டது.


இந்தக் கோட்டுக் கிழவன் மார்கழிப் பஜனை பாடியும் கோவில்களிலும் ஆயம்மா காம்பறாவில் சின்னதுகளுக்கு கதையும் பாட்டும் சொல்லிக் கொடுத்தும் ஊர்ப்பிள்ளைகள் கொடுத்த ஒரு மகா பட்டம்! இந்தப் பட்டம் தான் இவனை ஒரு லட்சிப்புருசனாக்கியது! எப்படியும் தனது மகனை படித்து ஆளாக்க வேண்டும் என்பது இவனது எண்ணம்!

ஆனால் அந்த ஆசைக்கு வந்தது ஒரு சோகம்! பாழாய்போன காலராவால் அவன் லட்சியம் எல்லாம் சிதறிப்போனது. அவன் மகன் இறந்து போனான்.இருந்தாலும்.......... அவனுடைய வீட்டிலுள்ள பொம்பிள்ளைப் பிள்ளையயைப் படிக்க வைக்கும் அளவிற்கு அவனுக்கு காலம் வாய்ப்பளிக்கவில்லை. அந்த சிந்தனை மாற்றத்திற்கு எந்த தலைவனும் வித்திடவில்லை. பாரதி பாடலைப் பாடினாலும் கோட்டுக் கிழவனின் பாட்டு மாஸ்டர் மூளைக்கு அவ்வளவு எளிதாக இது எட்டவில்லை.....

அப்படியா.....? பிறகு இந்த வீட்டில் இதோ கண் அயராமல் படித்துக் கொண்டிருக்கின்றானே... இந்தச் சுப்பிரமணி............. இவனுக்கு எப்படி இந்த ஞானம்? யார் இவன்?

குடில் குப்பிலாம்புவிடம் கேட்டது.

இவன், இந்த கோட்டுக்கிழவனின் பேராண்டி........... அதான் பேரன்! இவன் சின்ன வயசிலேயே கோட்டுக் கிழவனின் லட்சிய மூட்டையைத் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கின்றான். இவனுக்கும் படிப்பு என்பது யாரும் சொல்லித்தராமலேயே வந்த ஆசை! இந்த ஆசை கோட்டுக்கிழவனின் லட்சியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது........!

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை அடிக்கடி நான் கேட்பேன். இரவு வேளைகளில் அந்தக் கோட்டுக் கிழவன் தன் பேராண்டிக்கு வெள்ளைக்காரனால் அழைத்து வந்த வரலாறைச் சொல்லியிருக்கின்றான்.

அவனும் அந்த ஆதிலெட்சுமி கப்பலில் வந்த ஒருத்தனாம்! ஆயிரக்கனக்கானவர்களை ஏற்றிக்கொண்டு அடிமைப் பயணத்தை அழகாக அரங்கேற்றிய ஆதிலெட்சுமிக் கப்பல்! வரும் வழியிலேயே பல உயிர்களை பசியாலும் காலரா போன்ற நோய்களாலும் கொடூரமாக இயற்கையே கொன்ற பரிதாபக் காட்சியை நேரில் கண்ட ஒரு மனிதன்...

மன்னாரிலிருந்து வரும்போதே இதற்கு மேலும் இந்தப் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு பயணத்தைத் தொடர முடியாது என்று காட்டில் தவிக்கப்பவிடப்பட்ட ஒருவன் தான் இந்தக் கோட்டுக் கிழவன்;

மனதின் ரணங்களில் இனி எந்தத் துன்பத்திற்கும் தாக்குப் பிடிக்கக் கூடிய ஒருவன்! அவன் ஆசையை அவனுடைய பேராண்டிக்குச் சொல்லும் போதெல்லாம் என் கண்களில் நீர் வடியும்... எப்படியாவது .... இந்தப் பேராண்டிக்கு நான் உதவியாக இருந்து படிப்பதற்கு உதவி செய்ய எண்ணினேன்...... அந்தக் கோட்டுக்கிழவனுடைய லட்சியங்களுக்காக நானும் கைகோர்த்துக் கொள்ள எண்ணித்தான் இந்த வயசான காலத்திலும் இப்படி....... கஸ்டம் பாராமல் உழைக்கின்றேன் என்றது குப்பிலாம்பு!

பேராண்டி.... நேரம் பண்ணிரண்டாச்சு....... படுத்துக்கப்பா............ காலையில எழும்பிப் படிக்கலாம்..... என்ற கோட்டுக் கிழவனுடைய வார்த்தை கேட்ட பிறகு தான் சுப்பிரமணிக்கு மணி பண்ணிரண்டாகியதே தெரிந்தது.

தாத்தா... நாளைக்கு பத்தாவது பரீட்சை ஆரம்பமாகுது.. மறக்காம எழுப்பிவிடுங்க....... சுப்பிரமணியின் அந்த வார்த்தை கோட்டுக் கிழவனின் கண்களில் கண்ணீரைத் தந்தது.

நீ இருக்கிறவரைக்கும் தான் எனக்கு ஆறுதல்... காலையில் திரும்பவும் உன்னைத்தானே நான் பற்றவைத்து என் லட்சியங்களை கரைசேர்க்க வேண்டும்...... கோட்டுக்கிழவன் அந்தக் குப்பிலாம்பிடம் சென்று அதனை மெதுவாக அணைத்து விட்டு துடைத்தான்.
குப்பிலாம்பு தொடர்ந்து ஒளியைத் தந்து உஸ்ணத்திற்கு மத்தியில் சிமினி இல்லாமல் உழைத்து உழைத்து களைத்துப் போய் அமைதியாய் அதுவும் உறங்கிக் கொண்டது..

மறுநாள் பொழுது புலர்ந்தது. நேரம் ஐந்திருக்கும். விடியற்காலையில் படிப்பது சுப்பிரமணிக்கு எப்போதும் புத்துணர்ச்சியைத் தந்தது. சந்தோசமாகப் படித்து ... அந்தப் பத்து நாளும் அவன் பரீட்சையில் நன்கு தேறியிருந்தான். அன்று கோட்டுக்கிழவனின் தவம் அந்தப் பாடசாலையை நோக்கியே இருந்தது. ரிசல்ட் வருகிறது.............. அந்த பள்ளிக்கூட அதிபரின் செய்தியோடு பள்ளிக்கூட சுவரை ஆழமாக இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தான் கோட்டுக் கிழவன்..... அவன் எண்ணம் நிறைவேற அந்த அதிபரின் வாய் திறக்கவேண்டுமே!

பாட்டு மாஸ்டர்.... இங்கே வாயா.... உன்னுட்டு சுப்பிரமணி பாஸ் பண்ணிட்டான்................... உன்னுட்டு ஆசயெல்லாம் நிறைவேறிப் போச்சு....... இனி அவன ஏ.எல் படிக்க வைக்க இந்த ஸ்கூலு சரிவராது... டவுனு ஸ்கூலுக்குப் போக வேண்டும்....... யாரையாவது பிடிச்சு படிக்க வை.........


அப்போது தான் அந்த கோட்டுக் கிழவனுக்கு...... யாரையாவது பிடிச்சுப் படிக்க வை.... என்ற வார்த்தை அவனது ஏழ்மையை மனதிற்குள் கொண்டு வந்தது.....

பேராண்டி பாஸ் பண்ணிய சந்தோசம் வேறு.......... அதனால் வரும் ஆனந்தக் கண்ணீர் வேறு...... அதோடு கலந்து வறுமையின் ஏக்கக் கண்ணீரும் வேறு.... இரண்டும் கலந்து....... உஸ்ணமாயிருந்த அந்தக் கண்ணீர் அவன் நெஞ்சைத் தொட்டது. ஆனால் அவன் அழவில்லை! கண்ணீர் யார் உகுத்தார்களோ தெரியாது ......... அந்த நரைத்த முடியை அப்படியே நனைத்திருந்தது.

ஐயா... என்னுட்டுப் பேராண்டி.... டெஸ்ட்ல பாஸ் பண்ணிட்டான்... அவன டவுனு ஸ்கூல்ல சேர்க்க நீங்க தான் ஒதவனும்... எப்புடியாவுது ஒதவி செய்ங்க...... நான் கொஞ்சங் கொஞ்சமா கடன கட்டிப்புடுறேன்....................

இப்படி அந்தக் கோட்டுக்கிழவன் ஏறாத படி யில்லை.... இறங்காத இடமில்லை...........

ஆனால்.... எந்தப் பரோபகாரிக்கும் அந்தக் காலத்தில் கல்வியின் அருமை புரிந்திருக்கவில்லை.... அந்தத் தோட்டத்து துரை கொஞ்சம் கொப்பி புத்தகம் வாங்கிக் கொடுத்து பாராட்டினார். அவன் படித்த ஸ்கூல் வாத்தியார்மாறெல்லாம் சேர்ந்து அவனுக்கு டவுனு ஸ்கூலில் படிக்க வசதி செய்து கொடுத்தனர்... ஆனால்..... மாதா மாதம்... வரும் செலவுக்கு...................... கோட்டுக் கிழவன் தைரியத்தைக் கைவிடவில்லை.......

அடுத்த ஊர் சங்கத் தலைவரிடம் தன் கதையைக் கூறி உதவி கேட்டான் கோட்டுக் கிழவன். தினந்தோறும் நடக்கும் விடயங்களை குப்பிலாம்பும் குடிலும் கேட்டு கண்ணீர் வடிக்காத நாளில்லை...... அவர்கள் கதை அதுகளுக்குத் தானே முழுமையாகப் புரியும்.....?

எபப்டியோ அந்த ரெண்டு வருசமும் அவனுடைய கெட்டிக்காரத் தனத்தால் புதுப் பள்ளியிலும் நல்ல மாணவன் என்ற பெயருடன் படிப்பை முடித்தான்....... மீண்டும் ரிசல்ட் வந்தது............... அவன் எதிர்பார்த்தது போலவே அந்த ஊரில் படித்தவன் என்ற பட்டத்தைப் பெற்றான்.................


இது கோட்டுக் கிழவன் தனக்குக் கிடைத்த பாட்டு மாஸ்டர் பட்டத்தை விட மிகப் பெரியதாக நினைத்து அவனது லட்சியம் நிறைவேறியதாக எண்ணினான்....

ஆனால் சுப்பிரமணி இப்போது தான்... தனது பல்கலைக் கழக கனவை நிறைவேற்ற அடியெடுத்து வைத்தான்... அவனுக்கு அது தான் முதற்படி.............. இனி தான் அவன் முதலாந்தரத்தில் சேர்ந்து படிப்பதைப் போல ஒரு எண்ணம்... அதற்கு உதவிகள் அவனுக்கு நிறையவே கிடைத்தன... பொருளாதாரம் அவனை இங்கு கழுத்தைப் பிடிக்கவில்லை...............


கோட்டுக்கிழவன் பேராண்டி பாஸ் பண்ணிய நினைவுகளுடனும் அவனுக்குக் கிடைத்த பாராட்டுக்ளையும் அசைபோட்டுக் கொண்டு அந்தக் குப்பிலாம்புடன் திண்ணையில் அமைதியாய் கண்களில் நிஜமாகவே ஆனந்தக் கண்ணீருடன் அந்தச் சுருட்டுப் பாயுடன் குடிலின் கூரையையே பாரத்துக் கொண்டிருந்தான்.......

அந்த மார்கழி மாதக் காற்றும் என்னவோ கொஞ்சம் அதிகமாய்த் தான் இருந்தது. குடிலின் ரெட்டும் கிழிந்து அந்தக் கூரையின் கண்கள் திறந்து கொண்டன. குப்பிலாம்பு முணுக்... முணுக்கென்று எரிந்து கொண்டிருந்தது...... குடிலும் குப்பிலாம்பும் அந்தக் கிழவழைனயே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தன. அவனுடைய சந்தோசத்தில் அவைகளுக்கும் பங்கு உண்டு தானே.........

கிழவன் விட்டத்தைப் பார்த்தபடியே அயர்ந்துவிட்டான். இனி அவன் எழப் போவதில்லை...... குப்பிலாம்பும் அப்படியே வயதின் அசதியால்; ........ கொஞ்சம் கொஞ்சமாக கண்ணை மூடிக் கொண்டிருந்தது..................... அந்த இத்துப்போன கூரை மரங்களும் வளையத் தொடங்கின................ ஒரு மூன்றாம் பரம்பரையின் கனவு நிறைவேறிய நிலையில் அந்த நினைவுச் சின்னங்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கின....................


சுப்பிரமணி இப்போது பேராதனைப் பல்கலைக்கழக அக்பர் மண்டத்தின் மின்சாரத்துடன் தனது படிப்பைத் தொடர்ந்தான்... இப்போது அவன் உண்மையிலேயே படித்தவன் ஆகிவிட்டான்..... பட்டங்களால் மட்டுமல்ல... இந்த மண்ணுக்குச் சேவையாற்றுவதிலும் தான்..........

முற்றும்.

Wednesday, September 14, 2011

மனங்களின் சங்கமிப்பில்.......................................







அந்த மாலை நேரத் தென்றல் காற்று இதமாய் வீசிக் கொண்டிருந்தது.உயர்ந்த கருங்கற் பாறையில் ருவான்வெலிசாய பௌத்த பிக்குகள் தியானத்தையும் மதக் கடமைகளையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தனர் அப் போது மணி ஆறிருக்கும். செவ்வானம் மெல் மெல்ல தனது உடம்பிற்கு கருமைச் சாயம் பூசிக் கொண்டிருந்தது. வானம் அமைதியாய் உறங்கத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தது.
அந்த மயான அமைதியைக் குலைக்கும் வகையில் வந்த வெடிச் சத்தங்களும் வேட்டுச் சத்தங்களும் சூழலை வெகுவாக மாற்றியிருந்தது.வானம் இருட்டாமல் மழை பொழியாமல் இடியும் மின்னலும் காதுகளைப் பிழந்தன! அமைதிச் சம்பிரதாயங்களில் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்த பௌத்த மதகுருமார் சற்றே ஆடிப் போய்விட்டனர். பிரார்த்தனைகளும் தியானங்களும் தம் கடமையை இழந்திருந்தன.
'ஐயோ! காப்பாத்துங்க!காப்பாத்துங்க!' குரல் வந்த பக்கம் அந்த பௌத்த மதகுருமார் அனைவரும் பார்த்தனர்.ஆனால் அந்தச் சூழலில் அனைவரும் எதனையும் செய்ய முடியாத நிலையில் அனைவரும் தம் இருப்பிடங்களை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
ஒரு கரம் அந்தப் பிஞ்சின் கரம் பற்றியது. அந்தக் கரங்களுக்கு வயது அறுபதிருக்கும். 'எண்ட, துவே! மொக்கத உனே?' அந்தப் பாசை அந்த பிஞ்சுக்கு சிங்களம் என்று தெரியும். ஆனால் அதற்கு அவள் பதில் சொல்ல முடியவில்லை.
'ஐயோ! சுடுறாங்க..... சுடுறாங்க............ என்னக் காப்பாத்துங்க.............' இது மட்டுமே அந்தக் குழந்தையின் கதறலாக இருந்தது. சுமார் பத்து வயது தான் இருக்கும் அந்தச்சிறுமிக்கு.......! அவள் இந்த மரணங்களை மட்டும் தான் பார்த்திருக்கின்றாள். ஆனால்,ஏன்? இப்படி எல்லாம் நடக்கிறது? என்பதை அவள் இதுவரை தெரிந்து கொள்ளவில்லை.
'துவ, மம மொக்கத கரண்ண ஓனே! ஒயா,மகேத் எக்க எண்ட மம எக்கரங் யன்னங்..........'
இந்தச் செய்தி அவளுக்கு விளங்கியதே தெரியாது. ஆனால் அந்த வயோதிப மதகுருவின் கரங்கள் தன் பிஞ்சுக் கரங்களை இறுகப் பற்றி அழைத்ததை மட்டும் உணர்ந்தாள். அழைத்தவர் யார் என்றெல்லாம் யோசிக்காமல் அவள் அந்த மதகுருவின் பின்னால் சென்றால். அங்கு அவளுக்கு உணவுகளை வழங்கி அவளை 'பயவென்ன எப்பா. அப்பி இன்னவானேத.............' எனக் கூறி அவளுக்கு சமாதானம் செய்தனர்.களைப்பு அவளையறியாமலே தூங்க வைத்தது.
பொழுது விடிந்தது. அந்தச்சிறுமி எழுந்து 'அம்மா.............அப்பா....................' என்று அழத் தொடங்கினால். அங்கிருந்த மதகுருமாருக்கு என்ன செவய்வதென்று புரியவில்லை. அப்போது அந்த மடாலயத்தின் பெரிய ஆமதுரு அவர்களைப் பார்த்து 'மே லமாயட்ட சிங்கள தன்னே! ஏனிசா அப்பி கியன்னக்க எயாட்ட தேருங் கண்ட அமாரு. அப்பி கிறிஸ்து பள்ளிய பாதர்ட்ட மே கெல்ல கென கியல பார தெமு! லமயிட்டத் எயாகென கியண்ட புளுவங்! அனித் எக்க,பாதர்ட்ட பாசாவ துணக்ம தன்னவா!'
'ஒவ் ஏக்க ஒந்த அதாசக ஆமதுருனே. அப்பி ஏம கறமு!' அந்த வயோதிப மதகுரு அந்தச் சிறுமியை அழைத்துக் கொண்டு கிறிஸ்தவ தேவாலயத்திற்குச் சென்றார். பாதை எங்கும் சிதறடிக்கப்பட்ட உடைகளும் வாகனங்களும் உடைமைகளும் ஏன் மனித உயிர்கள் மட்டுமன்றி ஆடு.மாடு ,கோழி,நாய் என எல்லாமே இறந்தும் குற்றுயிரும் குலையுயிருமாய் சிதறிக் கிடந்தன.
அந்தக் கிராம மக்கள் சிங்களவர்,தமிழர்,கிறிஸ்தவர்,இஸ்லாமியர் என எல்லோரும் ஒன்றாக இருந்தனர். அங்கு அரச சிப்பாய்களுடன் மக்கள் ஒண்றிணைந்துச் செயற்பட்டார்கள் என்பது தான் தகவல்! அதனால் அந்தக்கிராமம் வேறோடு அழிக்கப்பட்டிருந்தது.
'மொனவத ஆமதுருன்னே? லமயித் ஏக்க எவில்ல இண்ணே! ' பாதர் முகத்திலும் கையிலும் சில பண்டேஜூகளுடன் அவரை வரவேற்றார். ' ஈய வெச்ச சித்தவல்வளிங் மட்டத் பொடி துவாலயக் உணா! ஏக்க தமாய். அந்த வயோதிப ஆமதுருவிற்கு கண்கணள் கலங்கின. ' என்னக் கொடுமை.... இதெல்லாம் எப்போது நிற்கப் போகிறதோ?' அவர் தன் மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டு வந்த காரியத்தை சொன்னார்.
'ஏமத.... ஒயா யண்ட... மங் பலாகண்ணங்....... புளுவங்னங் எயாகே தாத்தலா,அம்மலா இன்னவதா கியழ ஒயல பழல பார தென்னங்.............' விடைபெற்றுக் கொண்ட அந்த ஆமதுரு சென்று ஒரு அரை மணித்தியாலம் கூட இருக்காது. இரண்டு மூன்று வெடிச் சத்தங்கள்! ஆம், அந்த வN யாதிப ஆமதுரு எவ்வித அலறலுமின்றி அங்கு இறந்து போயிருந்தார். உதவி செய்ய வந்தவருக்கு சன்மாணம்! பாவம்! ............ அந்த பாதரும் அந்தச் சிறுமியும் அதைக் கேட்டு மனம் நொந்தனர்.
'ஐயோ.என்னால் தானே அந்தச் சாமி இறந்து போட்டது.......' உலகமறியா அவள் வேதனைப்பட்டாள். பாதர் அவளுடைய குடும்பத்தை தேடி அழைந்தார். ஆனால் அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது புரியவில்லை. காலம் ஓடியது. ஊர் அமைதியாக மாறும் என்ற நம்பிக்கை இல்லை!.
பாதர் அன்று நடைபெற்ற சண்டையில் இரும்புத்துகள் ஒன்று கண்களுக்குள் சென்றதில் அது புறையாக மாறி அவரது உயிரைக் மெது மெதுவாகக் குடித்துக் கொண்டிருந்தது. அவர் மரணம் அந்தச் சிறுமியை மிகவும் பாதித்தது.
'முதலில என்னட அப்பா...அம்மா...தம்பி... எல்லாம் செத்துப் போட்டினம்! பிறகு உதவ வந்த சிங்களச் சாமியும் செத்துப் போட்டது..... கடசியில என்னோட இருந்த பாதரும் செத்துப் போட்டார்.... நான் ஒரு துரதிஸ்டவாளி..... என்ன நினைக்கையில எனக்கே வெறுப்பா இருக்குது.....! அவள் ஏன் பிறந்தோம்? என ஒரு கணம் சிந்தித்தாள்.
ஆனால், அவள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை.அந்த வீதி வழியே அவளது பயணம் தொடர்ந்தது.அப்போது நேரம் அண்ணளவாக மணி 3.50 இருக்கும். அந்த ஜாயாவின் பாதை முடுக்கிலுள்ள பள்ளியில் பாங்கு ஓதும் சத்தம் ஒலிபெருக்கியில் அவள் காதை இரம்மியமாகச் சென்றடைந்தது.
சிறுமி 'குமுதா' மனம் போன போக்கில் சென்றவளுக்கு அந்த வீட்டு ஜன்னலில் தொலைக்காட்சியிலிருந்து 'ஒன்றே குலமென்று பாடுவோம்...ஒருவனே தேவன் என்று ஆடுவோம்.....' ஒலித்ததைக் கேட்டாள்.
அவளுடைய பாடசாலை ஞாபகம் வந்தது. அந்தப் பாடலுக்கு அவள் ஆடிய நடனத்தை அவளை அறியாமலே தாளம் போட்டு நடனம் ஆடினாள். அந்த தொழுகை முடிந்து வெளியே வந்த ஆதம் பாவா இதனைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது வீட்டிலிருந்து வந்த பாடலுக்குத் தான் குமுதா ஆடிக் கொண்டிருந்தாள். அருகில் வந்த ஆதம் பாவா.............................
'என்னாம்மா. டி.வி பார்க்கணுமா? வாங்கப் புள்ள ..... இங்க வந்து ஒக்காந்து பாருங்க.....'
சந்தோசத்துடன் குமுதா துள்ளிக் குதித்து சென்று டி.வி பார்த்தாள்.அந்தச் சின்னஞ்சிசிறிய சிறுமியின் முகத்தில் தான் எவ்வளவு ஆனந்தம்? ஆதம் பாவா அவளது மகிழ்ச்சியைக் கண்டு தனது பிள்ளையின் மகிழ்சியாகவே பார்த்தார்.
ஆதம்பாவா வீட்டில் அவரும் அவரது மனைவி பாயிசா உம்மாவும் மட்டுந் தான். அவர்களுடைய பிள்ளைகள் எல்லாரும் கட்டிக் கொடுத்து வெளிநாட்டிலும் கம்பளையிலும் வாழ்கின்றார்கள். ஆதம்பாவா குமுதாவின் பக்கம் திரும்பி
'புள்ள.......ஒண்ட அப்பா........ அம்மா ...............எங்க புள்ள..................ஒங்கட வீடு கிட்டவா?'
ஆதம்பாவாவின் கேள்விக்கு குமுதா பதில் சொல்லவில்லை. அவளிடமிருந்த அந்த சந்தோசம் சிறிது நொடியிலேயே காணாமல் போயிருந்தது. வாடிய முகம் மெல்லமாய் கண்ணீரை உதிர்த்தது.
ஆதம்பாவா அனுபவசாலி. எதையும் சொல்லிப் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. அந்தக் கண்ணீருக்குப் பிறகு குமுதா கண்ணீர் சிந்தக் கூடாதது என்ற எண்ணம் அவரிடம் நிறையவே இருந்தது.
'மக...... இது ஒன்னோட வீடு .... இங்க தாராளமா இருக்கலாம்.... உம்மாவும் ஒன்ன நல்ல பார்த்துக்குவா............'
'அப்ப.... இனி ஒங்கள நான் எப்பிடிக் கூப்பிடோனும்...' அந்தப் பிஞ்ச கள்ளங் கபடமின்றி கேட்டது.
'மக இனி என்ன வாப்பானு கூப்பிடு............அவுங்கள உம்மானு கூப்பிடு.......' இதுவரை அம்மா.... அப்பா...என கூப்பிட்டுப் பழகிப் போன குமுதா இப்போது உம்மா....வாப்பாவிற்கு மாற அடியெடுத்தாள். அந்த முஸ்லிம் தெருவில் சில மக்கள் ஆதம்பாவாவை பாராட்டினார்கள். ஆனால் இஸ்லாமியப் பற்றுமிக்க சிலர் ஆதம்பவாவைக் கண்டித்தனர்.
'பாவா........ இந்துப்; புள்ளய வூட்ல வச்சிட்டு எப்புடி நாம குர் ஆன் ஓதுறது.... அதோட அவுங்களால நம்ம எந்த நிம்மதியுமில்லாம இருக்கிறோம். தமிழாளுங்கவுட்டு புள்ளய நாம வளக்கணுமா....அப்புடின்னா...... அந்த புள்ளய இஸ்லாத்துக்கு மாத்திப் புடனும் சரியா....'
ஆதம்பாவா எதுவும் பேசாமல் மௌனமாயிருந்தார் அவரால் அந்த வினாக்களுக்கு பதிலை உடனடியாகச் சொல்ல முடியவில்லை.குமுதாவிடமும் தன் மனைவியிடமும் பேசிவிட்டு பள்ளிக்குச் சொல்வதாக அவர் சொல்லி விட்டு அவர்களை அனுப்பி வைத்தார்.
அந்த வெறாந்தாவில் மாலை ஐந்து மணிக்கு மூவரும் தேநீர் பருகி பலகாரம் உண்டு மகிழ்ந்தனர். அப்போது ஆதம்பாவா குமுதாவிடம் மெதுவாகத் தலையைத் தடவி
'மக.......... நான் ஒங்கள எங்கட சமயத்துக்கு மாத்தி பேரு வைக்கலாமுனு இருக்கேன். ஒங்களுக்கு அதுல விருப்பமா?'
வாப்பாவின் கேள்வி குமுதாவை யோசிக்க வைத்தது. உம்மாவும் தனது பங்கிற்கு மக 'இந்த ஊருல உள்ளவங்களோட நாம வாழனும்னா அவுங்களயும் கொஞ்சம் அனுசரித்துப் போகணும். ஒங்கள எங்கட மதத்துக்கு மாத்தி நல்லா படிக்க வக்கிறம்.எதிர்காலத்துல அது ஒங்களுக்கு நல்லது மக...'
குமுதாவைப் பிரிந்து விடக் கூடாது என்ற ஆசை அவர்கள் இருவரின் மனதிலேயேயும் குடிகொண்டிருந்தது.
'வாப்பா.............. உம்மா................. இனி நான் ஒங்கட புள்ளத்தானே! பேரு மாத்தினாலும் ஒங்கட அல்லாவத்தானே இப்ப நான் கும்பிடுறேன்.அதுல எனக்கு பிரச்சின இல்ல. என்னுட் டு பேரு............................அவள் தடுமாறினாள்.
வாப்பா. இந்த பேரு மட்டுந்தான எங்கட குடும்ப நெனவா இருக்கு.வீடு, காணி,சொத்து... அப்பா,அம்மா..........தம்பி.. எல்லாரையும் இழந்திட்டேன். எனக்காக இந்தப் பேரை மட்டும் மாத்தச் சொல்லாதீங்க..... அவள் மிகவும் வினயமாக அவர்களிடம் கேட்டாள்.

ஆதம்பாவாவின் இளகிய மனம் கண்ணீர் வடித்தது. பாயிசா உம்மாவின் கரங்கள் குமுதாவின் தலையை அவளையறியாமலேயே வருடிக் கொடுத்தது. நிலைமை ஆதம்பாவாவிற்குப் புரிந்தாலும் அந்த இஸ்லாத்துப் பிரியர்களுக்குப் புரிய வைப்பது எப்படி? என்ற சிந்தனை மட்டுமே அவர் மனதில் ஓடியது................
'என்ன............ பாவா........ அந்தத் தமிழுப் புள்ளயப் பத்தி என்ன முடிவு செஞ்சீங்க? நாளக்கி வெள்ளிக் கெழம.... பள்ளிக்கு வரும்போது முடிவ சொல்லனும்.................... ஙாபகம் இருக்கட்டும்...............' அந்த இஸ்லாத்து உலமாச் சபையின் கண்டிப்பான உத்தரவு அவருக்கு கொஞ்சம் பயத்தை உண்டு பண்ணியது.
யாரும் சொல்லாமலேயே கதிரவன் தன் கடமையைச் செய்தான்.பொழுது புலர்ந்தது. பாயிசா உம்மா பள்ளிக்குப் புறப்படும் தனது கணவனுக்கு தொப்பியை எடுத்துக் கொடுத்தாள். பள்ளி பிரார்த்தனைக்குத் தயாராகவிருந்தது. ஆதம்பாவா யாரிடமும் எது பற்றியும் கதைக்காமல் பிரார்தனையில் ஈடுபட்டார்.அவரது அந்தப் பிரார்த்தனை முழுக்க குமுதாவின் எதிர்காலம் பற்றியே நினைத்திருந்தது.
'அல்லா........... ஒருநாளும்............... யாரையும் கைவிடமாட்டான்............' என்ற எண்ணம் அவரை தைரியமாக்கியது. பிரார்த்தனையின் பின் அங்கு நடைபெற்ற மௌவியின் சொற்பொழிவு அவரை மேலும் நம்பிக்கை கொள்ள வைத்தது. அந்த இஸ்லாத்துப் பிரியர்களின் உருவங்களை அவர் கண்கள் தேடின. ஆனால், அவர்கள் இவரின் பதிலுக்காகக் காத்திருப்பது போலவே தேடிக் கொண்டிருந்தனர்.
' தம்பிப் புள்ளங்களா........... அவ இஸ்லாத்துக்கு எப்பவோ வந்துட்டா.............. பாயிசா உம்மாவோட தூ ஆப் பிரார்தனை எல்லாம் செய்றா....... வேணுமினா வந்து வூட்ல அவளோட குர்ஆன் ஓதுற அழக நீங்க பார்க்கலாம்' என்றார். அதன்படி மாலை ஐந்து மணியிருக்கும். ஆத்பாவாவின் வீட்டு முற்றத்தில் கூடியிருந்த இளைஞர் கூட்த்திற்கு ஆச்சரியமளித்தது. ஆம்! குமுதா............... தலையில் துண்டைப்போட்டு முகத்தை மூடி உம்மா பாயிசாவோடு பிரார்த்தiனியில் ஈடுபட்டிருந்த அழகு அவளை முழு இஸ்லாமியப் பெண்ணாகவே காட்டியது. இளைஞர்கள் விடைபெற்றுக் கொண்டனர்.
அவளை பாடசாலைக்கு அனுப்ப ஆதம்காவா ஆயத்தமானார். குமுதாவை ழைத்துக் கொண்டு அந்தப் பாடசாலை வளவை அடைந்தார். என்ன, பாவா பேத்தியா? ஆளு நல்ல வளந்துட்டாப் போல இருக்கு.............. அந்தத் தலைமை வாத்தியின் குரல்! 'ஆமாம். எனது பேத்தி தான். கொஞ்ச நாளா படிப்ப உட்டுட்டா. அதுனால நீங்க ஸ்கூலுல சேர்த்து ஒதவணும்..'
'சரி............புள்ளவுட்டு பேத் சரட்டிபிக்கேட்.............. பழய ஸ்கூலு துண்டு எவ்வாத்தயும் தாங்க..................' என்ற அதிபரின் குரல் கேட்டு ஆதம்பாவா ஒரு கணம் ஸ்தம்பித்துவிட்டார். ஆதம்பாவா மெல்லமாக திரும்பி ' மக................... வாப்பாவுக்கு ஒரு கூல் டிறிங் வாங்கிட்டு வாங்க............. தாகமா இருக்கு! பகத்துல உள்ள ஸ்கூலு கெண்டீன்ல வாங்குங்க........... ' என்றவர் தனது சட்டைப் பiயிலிருந்து காசை எடுத்துக் கொடுத்தார்.
அவள் வரும் முன்னதாகவே குமுதவைப் பற்றிய விளக்கம் கேட்டு அதிபர் உண்மை நிலையை அறிந்து கொண்டார். அப்பாடசாலையின் சட்டப்படி இஸ்லாமியப் பிள்ளைகளுக்கு மட்டுமே படிக்க முடியும். ஆனால், இளம் பிஞ்சுகளின் மனதில் இப்படி இளம்பராயத்திலேயே நஞ்சை விதைக்கக் கூடாது என்ற கொள்ளை உடையவர் அந்த அதிபர். அத்துடன் அரசாங்கமும் யுத்தத்தினால் பாதிக்கப்பட் பிள்ளைகளுக்கு அவர்கள் தற்போது தங்கியுள்ள இடத்திலேயே கல்வி கற்கலாம் என்ற விடயமும் அவருக்குத் தெரியும். அதனால் அப் பாடசாலையின் அதிபர் குமுதாவை மகிழ்ச்சியுடன் பாடசாலையில் சேர்த்துக் கொண்டார். சக மாணவிகளின் அன்பும் ஆசிரியர்களின் அரவணைப்பும் அவளை கால ஓட்டத்தில் உயர் தர வகுப்பு வரை சித்தியடையச் செய்திருந்தது.
குமுதா................... இப்போது இஸ்லாமிய நற் பணி மன்றத்தின் மூலமாகவும் ஆதம்பாவாவின் குடும்பத்தாராலும் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று பட்டதாரியானாள். அவளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வேலை கிடைத்தது. கை நிறையச் சம்பளம். யாரும் இல்லை நிலையில் அவள் ஆயிரமாயிரம் பயணிகளுக்கு அவள் பராமரிப்புத் தயாயானாள். தனது சம்பளத்தில் தனது தேவைக்குப் போக ஆதம்பாவாவின் வீட்டிற்கு அனைத்தையும் அனுப்பி வைத்தாய் . ஆதம்பாவாவின் ஹஜ்ஜுக் கடமைக்கு அவள் மூல காரணமாயிருந்தாள்.
ஹஜ்ஜுக் கடமைகளை நிறைவேற்றிய ஆதம்பாவாவும் பாயிசா உம்மாவும் அந்த கட்டுநாயக்க விமான நிலையத்தில் துபாய் பிளைட்டில் வருவதாக தொலைபேசியில் அறிவித்தார்கள். அவர்கள் இவரது மனதிலும் குமுதா முழுக்க நிறைந்திருந்தாள்;.
அன்றைய தலைப்புச் செய்தியில் ' இராணுவம் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகத் தீவிர முனைப்புடன் செயற்படுகின்றன. இன்னும் இரு வாரங்களில் இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஓரினமாக வாழக் கூடிய சூழல் உருவாகும்...' என்ற ஜனாதிபதியின் தமிழ் குரல் கேட்டு குமுதா மனம் மகிழ்ந்தாள்.
'ச்.சீ.................. இந்த யுத்தம்................. என்னக் கொடுமை......... எத்தனை பேர் கை, கால்களை இழந்து உயிரை இழந்து உறவுகளை இழந்து வாழ இடமில்லாமல்..............' குமுதா அந்தச் சூழலை அறவே வெறுத்தாள். அவள் யுத்தம் முடியும் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள். அவள் எதிர்பார்த்த மாதிரி யுத்த நிறைவுச் செய்தியை பாதுகாப்புச் செலாளர் ஜனாதிபதிக்குத் தெரிவிக்கும் காட்சி அனைவரையும் மகிழ வைத்தது.
குமுதா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். நாட்கள் ஓடின. நமது சொந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்குச் சென்ற சனங்கள் நாடு திரும்பிக் கொண்டிருந்தன. குமுதா அவர்கள் அனைவரையும் தனது சக ஊழியர்களோடு சேர்த்து கவனித்து வரவேற்றாள். ஒரு நாள் அந்த பயணிகளில் ஒரு தாயின் கவலை தோய்ந்த முகத்தில் நரைத்த முடிகளுடன் கிழடு தட்டிய வார்த்தைகளுடன் 'அம்மா................... கொங்சம் தலை வலியா இருக்கு............ இந்தப் பையில மருந்திருக்கு எடுத்துக் கொடு;ம்மா........' என்ற குரல் கேட்டு குமுதா மருந்தை எடுக்கப் பையை திறந்த போது அந்தப் பையில் தனது தாயின் இளமைப் படத்துடன் தற்காலிக பாஸ்போரட் இருந்தது.
குமுதா அவளது தாயை அடையாளம் கண்டு கொண்டு கட்டிப் பிடித்து அழுதாள். அப்பா கைகளிரண்டும் இல்லாமலும் தம்பி கைப்பிடியுடன் இருப்பதைக் கண்டு அழுதாள். ஆனால், அவர்கள் உயிரோடிருப்தையிட்டு மகிழ்ச்சி அடைந்தவளாய் அரவணைத்துக் கொண்டாள்.
துபாய் பிளைட்டும் திரு;சி பிளைட்டும் தரையிறங்கின. ஆதம்பாவாவின் வரவை குமுதாவின் குடும்பமே ஆவலோடு எதிர்பார்த்தது. இரு குடும்பங்களும் சந்தித்து சுகம் விசாரித்து ஆரத் தழுவிக் கொண்டன. குமுதா அவர்கள் இருவரையும் கொழும்பிலேயே இருக்குமாறு வேண்டினாள். பெருசுகள் இதற்குச் சம்மதிக்குமா என்ன? 'நம்ம சொந்தக் காணியில் வேலை செய்வது போல் வராது! இந்தப் பட்டணம் எல்லாம் நமக்குச் சரிபட்டு வராது' ஆதம்பாவாவும் குமுதாவின் அப்பாவும் ஒரு மித்த குரலில் சொல்லி விட்டு முப்பது வருடங்களுக்குப் பிறகு ஒரு முஸ்லீம் குடும்பமும் தமிழ் குடும்பமும் யாழ்தேவி இரயிலில் நயினை பௌத்த மதகுருவோடு பயணத்தை மகிழ்வுடன் தொடங்கியது!
முற்றும்.



Sunday, May 15, 2011

சட்டைப் பொத்தான்

இடம் பாரதி தமிழ் வித்தியாலயம்.இரண்டு பெரிய மலைகள்.நடுவே மவுசாகலை நீர்த் தேக்க சிறிய குடா ஒன்று.பாடசாலை அமர்ந்திருப்பதோ ஒரு மலை மேடு.அருகே சில உயர் வகுப்பினரின் சவங்களை எறிக்கும் தற்காலிக பொட்டல்.அடிக்கடி காடாகும் அந்தக் காடு. காற்று. அங்கு நேரடியாக வீசித் தொலைக்கும் . வெயிலென்றால் மண்ணை வாறிக் கொண்டு வரும். மழை என்றால் எப்போதும் அறிவிக்காத சூறாவளி தான் அந்தப் பாடசாலைக்கு. காற்றை நேசித்துக் கொள்ளும் மனங்களுக்குக் கூட வெறுப்பைத் தரும் அந்தக் காற்று.வெயிற் காலத்தில் எவ்வளவு தான் அழகாக நேர்த்தியாக வந்தாலும் தலையைப் பரட்டையாக்கி கண்களை தண்ணி அடித்தது போல் சிவப்பாகிவிடும் அந்தக் காற்று .அங்கு ஆண்கள் தலையை கட்டையாக வெட்டி விட்டால் தலைக்கும் சுகம்.பார்ப்பவருக்கும் கொஞ்சம் அழகாக இருக்கும்.
பெண்களுக்கு அது கொடுமை.எப்போதும் தூசி படிந்து தலைமயிர் மண்ணிறமாக பறந்து விரிந்து தம் இஸ்டம்போல ஆடிக் கூத்தடிக்கும் அந்த முடிகள்.
அன்று காலை 7.30 மணியிருக்கும் அந்தப் பாடசாலை அதிபரின் தலைமையில் காலைக் கூட்டம் ஆரம்பமாகியது.மாணவர்கள் அமைதியாக வரிசையாக வந்து நின்று கூட்டத்திற்குத் தயாராகினார்கள்.ஒவ்வொரு வகுப்பு ஆண்களும் பெண்களுமாக அவர்கள் நின்றது காலைக் குளிரில் சூரிய ஒளியைப் பெறுவதற்காகத் தான் இருக்கும்.இருந்தாலும் கொஞ்சம் சொல்வதைக் கேட்டுக் கொள்வார்கள்.
பாடசாலையின் காலைச் சுறுசுறுப்பு எப்போதும் ஒரு வேகந்தான்.ஆனால் அலட்டல் இருக்காது.ஒரு பயமுறுத்தல் இருக்காது.அதிபர் ஒரு பெண்மணி என்பதால் அங்கு மாணவர்களை மிரட்டுவது கிடையாது. ஒருவேளை தேவையில்லாமலட மாணவர்கள் கண்டிக்கப்பட்டாலோ பயமுறுத்தப்பட்டாலோ அவர்களுத வரவு காணாமல் போய்விடும்.ஏனென்றால் அங்கு தான் மாணவர்கள் பாடசாலை நாட்களில் கூட கிட்டியடிப்பதும் கிரிக்கெற் விளையாடுவதும் ஆற்றில் மீன் பிடிப்பதும் சிவனொளிபாத மலை சீசனில் கற்கண்டு,பழங்கள்,மற்றும் விற்பனைக்கான பொருட்களை அவர்கள் கூவி விற்றுத் திரிவதைக் காண முடியும்.இப்படி உள்ள ஒரு இடத்தில் அடக்குமுறை.சர்வாதிகாரம் எல்லாம் செல்லாது.அப்பா,அம்மாவே அங்கு பிள்ளளைகளை வளர்ப்பதில் சிலர் அக்கறை காட்டமாட்டார்கள்.
'ஐயோ!அம்மா...... லேட்டாகிருச்சு. ஓடுடா.... ஓடுடா....................'
குரல் வந்த பக்கம் அந்தக் கூட்டத்தின் பின் புறத்தில் நின்று கொண்டிருந்த ஆசிரியைகளின் காதுகளில் பட்டது.மெதுவாக பார்த்த அவர்களைப் பார்த்து
'டேய்! ஆந்தக்கண்ணு பார்த்திருச்சுடா... தெரியாம மத்தப் பக்கமா ஓடு....'
அதைப் பார்த்த ஆசிரியைகள்
'சேர், அந்தப் பக்கமா ரெண்டு பையன்கள் ஓடுறான்கள்.. வேகமாப் போயி புடிங்க....'
ஆசிரியை கமலி எப்போதும் சுறுப்பானவர்.ஆனால் இந்த விடயத்தில் ஏதோ சாதித்து விட்டது போல அந்த ஆசரியரை பின் தொர்ந்து அவரும் விரட்டத் தொடங்கினார்.
'டேய், நில்லுங்கடா. எத்தனை முறை சொல்றது.காலையில எங்களயும் ஓடிப் புடிச்சு விளையாட வக்கிறீங்க'
கூட்டத்துல ஒரு குரல் ஒலித்தது.
'ஓடுங்கடி.... ஓடுங்க....... எங்கள வெளயாடக் கேட்டா உடுறதுல்ல தானே! இப்ப ஓடுங்கடி... ஓடுங்க......
மூச்சு வாங்குதுல்ல..... '
அந்தக் குறும்புக்கார மாணவியின் நையாண்டி மாணவனுக்கல்ல.அந்த ஆசிரியர்களுக்கு! தங்களை விளையாட விடாத ஏக்கம் அந்தப் பிஞ்சு மனதுக்கு.கடவுளே அவர்களை பழிவாங்குவதாக அவளுக்கு ஒரு நினைப்பு.
காலைக் கூட்டம் சலசலத்துப் போனது.அதிபர் முதல் அனைவருக்கும் காலைப் பொழுதில் இப்படி ஏதாவதொரு நிகழ்ச்சி அங்கு திட்டமிடாமலே அரங்கேறும்.வேலி இல்லாத பாடசாலை.இதில் மதிலை எங்கு நினைப்பது? பெரிய பரப்பு!காணி அபகரிப்பு வேறு!அடுத்த வீட்டு காண்களில் வடியும் அசிங்கமும் அந்தப் பாடசாலைக்கு எப்போதும் ஒரு தொந்தரவு தான்.
'அம்மாடா! டேய் இங்க வாங்கடா....... ஒங்கள எத்தன முறை சொல்றது,ஆசிரியை கமலி அவர்களைப் பிடித்து விட்டார்.ஏமாற்றத்துடன் திரும்பிய ஆசிரியரின் முகத்தை சாதனைக் கமலி பெருமிதத்துடன் பார்த்தது.
'சேர், இந்த முறை இவங்கள அவுங்க அப்ப,அம்மாவ வர சொல்லி பேசனும். வாங்க பிரின்சிபல்ட்ட சொல்லி முடிவெடுப்போம்.'
'ஆமா டீச்சர், இவுங்கள இப்படியே உட்டுட்டா எல்லப் புள்ளங்களும் பழகிடுவாங்க'
பிசுபிசுத்துப் போன அந்தக் காலைக் கூட்டம் இன்று மட்டுமல்ல.பல நாட்களில் அப்பிடித்தான்.ஏனென்றால் அந்த்ப் பாடசாலை அமைப்பு அப்படி.எதையும் மறைத்துச் செய்ய முடியாது. திறந்த வெளியில் ஒரு கட்டடம்.
'என்னா டீச்சர்?காலையிலேயே இதப் பார்த்தா காலைக் கூட்டம். மத்த வேலையெல்லாம் வீணாப் போயிடுமே.....'
ஆசிரியை கமலி ஒன்றும் பேசவில்லை.ஆனால் அவள் பார்வை மட்டும் அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது.
'சரி.. டீச்சர்... இவுங்கள நான் விசாரிக்கிறேன்...'
அதிபர் அந்த இரு மாணவர்களையும் நோட்டமிட்டார். அந்த இரு மாணவர்களது பாடசாலை சீருடைகள் மிகவும் அழுக்கடைந்திருந்தன.காற் சட்டைகள் பின்பக்கம் கிழிந்து வானத்தைப் பார்க்கும் அளவுக்கு வட்டமிட்டிருந்தது. போதாக் குறைக்கு காற் சட்டை சிப்புகளுக்கு அருகில் இன்னொரு சிப்பு தைக்க வேண்டிய நிலையில் தாழ்பாளும் கதவுகளும் இல்லாமல் ஒரு காற் சட்டை. தலை மயிர் அந்த தோட்டத்து பற்றைக் காடுகளை வெட்டிச் சாய்த்தாற் போல் எசகுபிசகாக அலங்கோலமாகக் காட்சியளித்தது.சட்டையின் கைகள் இரண்டும் கசங்கிப் போயிருந்தன.சட்டையிலுள்ள சேப்பு அங்கு மிங்குமாக பட்டம் விட்டுக் கொண்டிருந்தது.சட்டைக் கதவுகளின் பொத்தான்கள் சிதறடிக்கப்பட்டிருந்தன. மாறி மாறி சட்டையின் கதவுகள் தாழ்பாளிடப்பட்டிருந்தன.பின் பக்கத்தில் 'இன்னும் அவன் பயிற்சியில் இருப்பதற்கான அடையாளங்களாக 'எல்;;' போர்ட் பல தொங்கின.அத்தனைக் கிழிசல்கள்.'
'ஏனடா இப்படி வருகிறாய்... ஸ்கூலுக்கு எப்படி வறனும்னு எத்தனை முறை சொல்லியும் கோட்கிறாய் இல்லை.நீ அண்ணா சிலை அருகில் இருந்து தானே வாற? உன்னுடைய அப்பா மலையாண்டி தானே?'
'ஆமா மெடம்!அங்க இருந்து தான் வாறேன்.என்னா செய்யனும் டீச்சர்?'
அவனது கேள்வியில் எவ்வித பயமுமிருப்பதாகத் தெரியவில்லை.அவன் நிதானமாகவே இருந்தான்.நிர்வாகம் தான் ஏதோ சாதித்து விடலாம் என்ற நப்பாசையில் நாவில் எச்சிலை ஊறவிட்டுக் கொண்டிருந்தன. கமலிக்கு பெரும் சந்தோசம்!நூறு மீட்டர் ஓடிப் பிடிக்கப்பட்டவனல்லவா அவன்?ஆனால் ஏதும் நடக்கப்போவதில்லை என்பதை கமலியின் சக ஆசிரியை அர்ச்சனா நன்கறிந்திருந்தாள்.
அவள் அத்தோட்டத்தில் வசிப்பவள்.நாலும் தெரிந்தவள். ஒவ்வொரு வீட்டு விலாசமும் தன் கைப் பைக்குள் அவளுக்கு!மாயாண்டி? அவன் பெயரைச் சொன்னாலே அதிரும் அந்த ஊர்.இத்தனைக்கும் ஒல்லிக் குஞ்சு!சட்டைக்கும் சாரத்துக்கும் போர்த்திய ஒரு கத்தரி வெருளி!அச்சுக் குலையாமல் தலையை சீவிப் போர்த்தி எண்ணை வடிய விட்டு மீசை முறுக்கிய முகம்.எழும்புகளின் பள்ளத் திட்டுகளில் போர்த்தப்பட்ட தசைப் பொதிகள்.அந்த ஊரில் மவுசாகலை நீர்தேக்கம் வற்றும்போது பாலம் பாலமாக வெடிக்கும் சகதி மண் திட்டுகள் மீள் பிரதி எடுத்தது போல அவனது முகம்.இந்த முகம் மட்டுமே அவனது மூலதனம்.அதற்கு அவனுக்கு பலம் சேர்த்தது போல பலரையும் அதட்டும் குரல்!
இது போது மல்லவா? அந்த ஊரில் அவன் வில்லனாயிருப்பதற்கு? அங்கு யார் தான் அவ்வளவு தடிப்பமாக இருந்து விடப் போகிறார்கள்?
அதிபரின் காரியாலயம் முன்னாள் ஒரு சலசலப்பு.ஏதோ நடக்கப் போகிறது என்பது மட்டும் தெளிவாகியது.
'மேடம்....................... மேடம்................................... நான் வரலாமா?
அந்த அதட்டல் குரலுடன் அவன் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான்.அவன் கொஞ்சம் இங்கிதம் தெரிந்தவன். அதனால் தான் 'நான் வரலாமா?' என்ற வினா.
'வாங்க! வாங்க.........! உட்காருங்க'
'மேடம் எனக்கு உட்கார நேரமில்ல!தலய்க்கு மேல வேல கெடக்குது.....என்னா என்னுட்டு மகன் ராகுல கண்டபடி அடிச்சி ஏசினீங்களாமே.அவனுட்டு சட்டைய கிழிச்சி பொத்தான பிச்சி .................................... பாருங்க! ஒங்க டீச்சர் லெச்சனத்த!புள்ளங்கள இப்படியா போட்டு அடிக்கிறது?நெஞ்சுல எல்லாம் காயம் வேற!டீச்சர் என்னா அவனோட மல்லுக்கட்டுணாங்களா?
அவன் ஆக்ரோசமாய் ஓரேயடியாய் கமலி ஆசிரியை மீது தூக்கிப்போட்டான் ஒரு பெரிய வெடிகுண்டு.
அவன் தனது கோணத்தை அழகாகத் திட்டமிட் டு சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு அதனை மாற்றும் அளவிற்கு அவன் பேச்சுக் கொடுத்தான்.அதிபர் ஒன்றும் சொல்ல முடியாமல் திகைத்துப் போனார்.
நூற்றுக் கணக்கான மாணவர்கள் கூடியிருக்குமிடம்.திறந்த வெளி.மேட்டு லயன்களிலிருந்து பார்த்தால் அந்தப் பாடசாலையைப் பார்;க்கப் பூதக் கண்ணாடி தேவையில்லை.அவ்வளவு தெளிவாகத் தெரியும் தூரம் தான்.பிகு எப்படி? நியாயமாகச் சிந்திக்கும் மக்களும் அங்கில்லாமல் இல்லை.ஆனால் மாயாண்டி முன்னால் அது எல்லாம் செல்லுமா?
' ஐயா! இப்படியெல்லாம் பேசக் கூடாது. இது ஸ்கூல்'
'இது ஸ்கூல் மாதிரியா நடக்குது?நான் பொலிசுக்குப் போவேன்.கல்வியமைச்சர் எங்களோட ஆளு!ஒங்க எல்லாத்தயும் உண்டு இல்லன்னு பண்ணீர்றேன்.அது பொம்பள டீச்சர்னு பாக்கிறன். இல்லாட்டி இப்பவே வெட்டி சாச்சிருவேன்'
'ஐயா.நீங்க நினைக்கிறது தப்பு!அவன் தினமும் இப்படித் தான் வருவான் சட்டையெல்லாம் கிழிஞ்சு தான் இருக்கும்.நானும் பாரத்திருக்கிறேன்'
'மேடம்... எனக்கும் தெரியும்.... அவனுட்டு சட்டையும் கழிசானும் கிழிஞ்சி தான் இருந்துச்சு!ஆனா சட்டைப் பொத்தான் நல்லாதன் இருந்துச்சு.அவன மல்லுக்கட்டாட்டி எப்புடி அது கழடும்...?'
தர்க்கரீதியான அவனது கேள்வியில் திக்கு முக்காடிப்போனது பாடசாலை நிர்வாகம்.ஒரு மெல்லிய அழுகைச் சத்தம் அங்கு எழத் தொடங்கியது.
'அழாதீங்க கமலி.. தொழிலுக்கு வந்தா இதெல்லாம் சகஜம்.நாம சமாளிப்போம். கவலைப்படாதீங்க'
எந்த ஆறுதலும் கமலி டீச்சரை ஆறுதல்படுத்துவதாகத் தெரியவில்லை. சுமார் பத்து வருடம் மறே மேற் பிரிவுப் பாடசாலைக்கு தினந்தோறும் பஸ்ஸில் சென்று பிறகு ஏழு மைல் நடந்து சென்று மாலை வீடு திரும்பும் போது மாலை ஆறு மணியாகிவிடும். இப்போது மீண்டும் இடமாற்றமா? மாயாண்டி இப்போது மத்திய மாகாண கல்வி அமைச்சராகவே தெரிந்தான். இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட அவள் அவன் கால்களில் விழுந்து விடலாமா என்று தோன்றியது.அவனுக்கு அமைச்சரிடம் உள்ள செல்வாக்கை அர்ச்சனா டீச்சர் அடிக்கடி ஞாபகப்படுத்தி காப்பாற்றுவது போல் பயமுறுத்திக் கொண்டிருந்தாள்.
'ஐயா .உங்க பிள்ளை நல்லதுக்கு தான் ஒங்கள கூப்பிட்டோம்.அவனப் பிடிக்கும் போது சட்டப் பொத்தான் கழன்டிருச்சு.நம்புங்க' என்றாள் பாவமாக!
'ஆனா டீச்சர்!என்னுட்டு மகன் நீங்க கையப் புடிச்சு இழுத்துட்டு வந்ததா சொல்றான்!சட்டப் பொத்தான பிச்சதா சொல்றான். அது பொய்யா' மாயாண்டி தன் மகன் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருப்பது தெரிந்தது.
'சரி ஐயா! நான் என்னா செய்யனும்..?'
'என்னா செய்யனுமா,இருக்கறது கவனம்'
'மன்னிச்சுக்குங்க ஐயா! இனிமே இப்படி நடக்காது'
'அப்ப நடந்தது உண்மையா'
தப்பிப்பதற்கு அவள் கேட்ட மண்ணிப்பு அவளுக்கே வில்லங்கமாய்ப் போனது.திருதிருவென முழித்தது அவளது கண்கள்.அதிபர் ஆசிரியைகள் பக்கமாகத் திரும்பினார்.
'டீச்சர்மாறெல்லாம் வகுப்புக்கு போங்க.பிறகு கூப்பிடுறேன்'
ஆசிரியர் கூட்டம் மெல்லக் கலைந்து வகுப்பறைக்கும் மரத்தினடிக்கும் சென்று இவ்விடயம் தொடர்பாக அலசத் தொடங்கியது.எதுவித சலனமோ கவலையோ இல்லாமல் மாணவர்கள் வகுப்பறைகளில் சப்தமிட்டுக் கொண்டிருந்தனர்.
'ஐயா.இந்தப் பிரச்சினை இனிமே வராம நான் பார்த்துக்கிறேன்.உங்க பிள்ளைக்கு சட்டை ஒன்னும் காற் சட்டையும் வாங்கித் தாறோம்.இத பெருசு படுத்தாதிங்க.விட்டுருங்க'
'ஏம் புள்ளைக்கு யாரும் உடுப்பு வாங்கிக் கொடுக்கத் தேவயில்ல.எனக்கு நியாயம் தான் கெடைக்கணும்'
'சரி ஐயா.இத நான் கல்வி அதிகாரிகிட்ட சொல்லி ஒங்களுக்கு தீர்வு எடுத்துத் தாறேன்.கொஞ்சம் பொறுங்க'
'அந்த டீச்சர் இங்க இருக்கக் கூடாது.என்னுட்டு கௌரவம் என்னாகிறது?அவள அனுப்பிப்புடுங்க சரியா'
'சரி.அத நான் பார்த்துக்கிறன்.நீங்க யோசிக்காம போயிட்டு வாங்க'
மாயாண்டி கோபத்துடன் வெளியேறினான்.
அதிபர் அவ்வாசிரியையுடன் கலந்துரையாடி அவளை அட்டன் கல்விக் காரியாலயத்திலும் அவள் பிரதிநிதித்துவம் செய்யும் மலையக ஆசிரிய ஒன்றியத்திடமும் சொல்லி அவளுக்குப் பொருத்தமான ஒரு பாடசாலையை பெற்றுக் கொடுத்தார். ஆனால் இன்றுவரை அப் பாடசாலைக்கு ஒரு புதிய ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை. ராகுலுடன் வந்த மற்ற மாணவன் விசாரிக்கப்படவே இல்லை.அர்ச்சனாவுக்கு ஒரு சந்தோசம்.இனி அந்தப் பாடசாலையில் கமலி டீச்சர் இல்லை.பாவம் மாணவர்கள்.கமலி டீச்சர் வகுப்பு இப்போது நிரந்தரமாகவே சப்தமிடும் ஒரு வகு

புதிய சந்தா

- பெ.லோகேஸ்வரன் -
மேமலைப் பக்கம் அரசல் புரசலா வந்த சேதி அந்தத் தோட்டத்தையே ஒரு கலக்குக் கலக்கியது.
'அடியேய்!......................... அடியேய்......................................... நில்லுடி நானும் வாறேன்.............................'
குரல் வந்த பக்கம் கனகு மெதுவாய் திரும்பிப்பார்த்தள்.திரும்பிப் பார்த்தது அவளது தலைகள் மட்டும் தான்.கால்கள் அல்ல.
'வா.... வா... எனக்கு நிக்க ஏலாது. நீ சீக்கிரம் பின்னாடி வா'
அவள் தான் இந்த விடயத்தை போய் நடவடிக்கை எடுக்கப் போறதா ஒரு நினைப்பு! அவ்வளவு வேகம்
கனகுவின் கால்களுக்கு.புத்திக்கு மட்டும் என்ன?அது அதனை விட வேகமாகச் செல்கின்றது.
அலை மோதும் கூட்டம்.திருவிளாவிற்குக் கூட சில குடும்பம் குடும்பமாய் தான் போய் வரும்.ஆனால் இன்று வீட்டில் உள்ள நாய்,பூனை கூட வெளியில் தான்.அவ்வளவு அல்லோல கல்லோலம்!
'அப்படி என்ன?தலையா முழுகிருச்சு?எரும மாடு மாதிரி வந்து முட்டுற?கொஞ்சம் பாத்துப் போனா என்னா?'
'கோபிச்சுக்காத ஐயம்மா. போற அவசரத்துல கால் பட்டுறுச்சு.கோபிச்சுக்காத...'
சொல்லிக் கொண்டே மன்னிப்புக் கேட்ட குரல் மாயமாய் மறைந்தது.ஐயம்மா எப்போதும் யாராக இருந்தாலும் தெளிவாகப் பேசிவிடும் குணம் கொண்டவள்.
கனகுவும் ஐயம்மாவும் ஒன்றாய்ப் படித்தவர்கள்.படிப்பு என்றால் பெரிய படிப்பு.அந்தக் காலத்தில் அவர்களது படிப்பு தான் 'ஒசந்த படிப்பு'.ஒருவரல்ல!பலர் பாராட்டியிருக்கிறார்கள்.
1950 களில் இந்தப் படிப்பு தான் அவர்களை அந்தத் தோட்டத்தில் ஒரு 'யுனிவேர்சிட்டி'யாக பலருக்கு அடையாளம் காட்டியது.அவர்களது படிப்பில் தம்பி என்கிற தம்பிராஜாவும் முக்கியமானவன்.அவனும் அந்தத் தோட்டத்தில் ஜிப்பா வாத்தியாரிடம் படித்தவன்.
ஓடிய கால்கள் ஒரு இடத்தில் நின்றன.அந்த ஆற்றங்கரை இன்று 'குடிவிடுதல்' நிகழ்ச்சிக்காக நிரம்பியிருந்தது போல ஒரு பிரமிப்பு.ஆனால் அங்கு எந்த சமய நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை. முன்னாலிலிருந்தவர்களுக்கு மட்டுமே அங்கு என்ன நடக்கின்றது என்பது புரிந்த விடயம்.
'கனகு... எப்புடியாவுது சந்துல நொலஞ்சி போயிடு.ஓம் பின்னுக்கே நானும் வந்துடறேன்'
'சரி ஐயம்மா.நான் மொதல்ல போயிருறேன்.நீ பின்னுக்கே வந்துரு.....'
அந்தக் கூட்டத்தில் கனகுவும் ஐயம்மாவும் பாம்பினைவிட வேகமாக லாவகமாக உள்ளே நுழைந்தார்கள்.ஆர்வத்தில் வயதும் ஒரு தடையல்ல என்றிருந்தது அவர்களது கால்களுக்கு.
'ஐயோ! ஏம்புள்ளய கொண்ணுப் போட்டுட்டாங்களே! எப்புடி வேல செஞ்சி குடும்பத்தக் காப்பாத்துன புள்ள?இப்புடி அநியாயமா பாவிப் பயலுக கொழும்புல இருந்து பெட்டியில அனுப்பி வச்சிருக்காங்களே!
நாசமாப் போவானுக'
அந்தக் குரல் எட்டாங் கிளாசு வரை படித்து மாசாமாசம் ஐயாவீட்ல கைநிறைய காசு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கொழும்புக்கு அனுப்பிய ரமணியின் அம்மாவின் அழுகைக் குரல்.
'வள்ளியம்மா...... இங்க பாரு என்னா நடந்துச்சு? என்னாடி இந்தக் கோலம்? ரமணிப் புள்ளய கொழும்புக்கு அனுப்பாத .... அனுப்பாத....ன்னு தலையில அடிச்சுக்கிட்டேனே? கேட்டியா?'
'யார்? ஐயம்மாவ? பாருக்கா....... ஏம் புள்ளய? ரதி மாதிரி இருந்த புள்ளய சின்னாபின்னமாக்கி நாசமாக்கிப் புட்டானுங்க.கடசியில அதுவா கயித்துல தொங்கிருச்சுனு சொல்லி பெட்டியில அனுப்பிட்டானுங்க'
'வள்ளி....இப்புடியே பொலம்பிக்கிட்டிருந்தா என்னா செய்யிறது?அண்ணனக் கூப்பிட்டு நடக்கிற காரியத்த பாரு.....'
'ஆமாம்.பொனத்த வூட்டுக்கு கொண்டு பொற வேலயப் பாருங்கப்பா... வள்ளி தள்ளு.... தள்ளு......
வாங்கப்பா யாரு மரணக் கமிட்டி ஆளுங்கல்லாம் இங்க வாங்க.தூக்குங்க.....தூக்குங்க....................'
'ஐயோ!.....ஐயோ......! ரமணி..... ரமணின்னு ஆசையாக் கூப்பிட்டவங்கள்லாம் இப்பப் பொனம்னு கூப்பிடுறாங்களே! கடவுளே...... இந்தக் கொடுமய எல்லாம் ஏம்பா என்னப் பார்க்க வக்கிற? என்னிய கூப்பிட்டிருந்தா நான் வந்திருப்பனே!'
வள்ளியம்மா சும்மாவே பேண் பரட்டைத் தலையுடன் தான் இருப்பாள்.முடி ஆடிக் கொரு முறையும் அமாவாசைக்கொரு முறையும் தான் சீவுவாள்.இப்போது 'எலவு வீடு' வேறு .இனிமேல் அவள் தலையைச் சீவினாள் அது குதிரைக் கொம்பு தான்.
'கனகு...வா... எங்க நம்ம தம்பியக் கூப்பிடு...... இதுக்கு ஒரு முடிவு கட்டணும்.இந்தத் தோட்டத்துல மட்டும் இதோட ரெண்டு சாவு.அநியாயமா போச்சு.கேக்க நாதியில்லன்னு துப்பத்தவனுங்க செஞ்ச காரியத்த தட்டி கேக்கணும்..... ஆளுங்கள ஒன்னு சேத்து போராட்டம் நடத்தனும்.பொனத்த தெருவுல வச்சி ஆர்ப்பாட்டம் பண்ணினா தான் அடங்குவானுங்க...'
'ஆமாம்... ஆமாம்...இவுனுங்களுக்கு இந்த n மாற ஒரு பாடம் படிப்பிச்சாதான் சரிவரும்.தம்பி கடைக்கு போயிட்டானாம்.வந்தோன கதப்போங்கக்கா.....'
'அவனுக்கு போனிருக்கு தானே? யாருகிட்டயாவது சொல்லி தகவல் அனுப்பு! ஒடனே ஆரம்பிச்சா தான் சரி வரும்.தோட்டத் தலைவர்மாரு,எளைஞர் சங்க பொடியன்களயும் கூப்பிட்டு வெசயத்த பேசிப்புடுவோம். தம்பி வந்தோன்ன மத்தத பேசுவோம்'
'அது தாங்கக்கா சரி. அவுங்கள்கிட்ட பேச எல்லாத்தையும் மேட்டு லயத்து காம்பறாவுக்கு வறச் சொல்லிட்டேன்.அவுங்க வந்திருப்பாங்க... வாக்கா நாமலும் போவோம்'
அந்தத் தோட்டத்தில் எத்தனை தலைவர்மார் இருந்தாலும் கனகு அக்காவுக்கும் ஐயம்மா அக்காவுக்கும் ஒரு தனி மவுசு தான்.தோட்டத்துல அவுங்களும் இந்திய வழக்குப்படி 'பதினெட்டுப்பட்டி'க்குப் பொறுப்பான பெண் நாட்டாமைகள் தான்.ஆனால் அநியாயம்னு நினைத்தால் பெண் சிங்கங்கள் இரண்டும் பட்டையைக் கிளப்பி விடும்.தம்பி இந்த சிங்கங்களுக்கு அப்புறம் தான்.கொஞ்சம் நிதானமா யோசிக்கும் ஒருவன்.இரு பெண் சிங்கங்களும் தங்களுக்குள் பாசத்துடன் அக்கா என்றே பேசிக் கொள்ளும்.
ஒருவாறு கூட்டம் கூடியது.புரட்சித் தலைவிகள் போல் அவர்கள் முன்னால் நின்று ரமணியின் மரணம் குறித்து பேசத் தொடங்கினார்கள்.
'ஏம்பா... மாணிக்கம் ஒன்னுட்டு கூட்டாளி புறொக்கர் பொன்னம்பலம் எங்க? அவன் தானே வேலய்க்கு ரமணிய அனுப்புனது?...... அவன கூப்பிடு.....'
'அவன்தான் அக்கா கொழும்புக்குப் போயி காரியத்த பார்த்தது.அதுனால் தான் இவ்வளவு சீக்கிரமா 'பொடி' வந்திருச்சு.இல்hட்டி இப்போதய்க்கு எடுக்க முடியாதுன்னு சொன்னான்'
'ஏய்... மாணிக்கம்...... ஒத வாங்காத.... அவன் யாருடா ரமணிக்கு.. புள்ள செத்தோன யாருக்குடா
மொதல்ல சொல்லணும்? 'பொடிய' கொண்டு வர மட்டும் தோட்டத்துல யாருக்கும் என்னான்னு கூடத் தெரியாது.பொன்னம்பலம் இந்தத் தோட்டத்துல கால வச்சான்னா வெட்டாம விடமாட்டேன்..அவன இந்தப் பக்கம் வர வேணான்னு சொல்லு.... சரியா... கவ்வாத்து கத்தி ரெடியா இருக்கு..... சீவிப்புடுவேன்......
அவன...'
ரமணியின் தாய்மாமன் குரல் ஆக்ரோசமாய் எழுந்தது.போதாதற்கு அவனுக்கு 'சப்போர்ட்டாய்' இன்னொரு குரல் வந்தது.
'இப்புடி ஒரு பொழப்பு பொழக்கறதுக்கு நாண்டுகிட்டு சாவலாம்.சாராயம் சாப்பாடுன்னு காசு கெடச்சோன்ன அவரு தான் ஊருல பெரியாளு மாதிரி பேசி முடிப்பாரு.. அவன விடக் கூடாது'
'போன சாவுலயும் இப்புடித்தான்.அவன் அம்பதாயிரம் காசு வாங்கிக்கிட்டு எலவு வீட்டுக்கு இருபதாயிரத்த கொடுத்து வாயடச்சுட்டான்.'
'புள்ளங்கள கூட்டிப் போயி வேலன்னு சேத்துவுட்டுட்டு அவுங்க செத்தா எவ்வளவு தருவீங்கனு கேட்டுப் பேரம் பேசிட்டு வாரான்போல.அதுனாலதான் செத்தவொடன அவனுக்கு மட்டுந்தான் சேதி வருது'
கூட்டம் புறோக்கர் பொன்னம்பலத்தின்மீது தன் வசைமாரியைப் பொழியத் தொடங்கியது.
'பொன்னம்பலத்த இந்தப் பிரச்சின முடிஞ்சோன பாத்துக்குவோம்.இப்ப என்னா செய்யனும் அதப் பத்தி பேசுங்க'
'அக்கா...நாங்க நம்ம கட்சி தலைவருக்கும் எம்பீக்கெல்லாம் சொல்லிட்டோம்.அவுங்க வாறேனு சொல்லியிருக்காங்க'
கூட்டத்தில் நையாண்டி கந்தன் தன் வழமையான நையாண்டித் தனத்தை எடுத்து விட்டான்.
'எதுக்குப்பா? பொனத்த தூக்கவா?இல்லாட்டி பேப்பர்ல அறிக்கவுடவா?'
'கந்தன் அண்ணன் மரியாத கெட்டுப் போவும்.பாத்து சரியா?எங்க தலைவர பத்தி பேசாத சரியா?'
சட்டையைப் பிடிக்காத குறையாக அவன் கூறினான்.நையாண்டிக் கந்தன் இதற்கெல்லாம் அசருபவன் அல்ல.
'அது சரி 'இம்போர்ட்' அமைச்சருக்கெல்லாம் சொன்னா அவுங்களும் வந்து பேரு ஒன்னு போட்டுக்குவாங்களே!கங்காணி 'செக்றோல்' புத்தகத்தை கொண்டுவாய்யா?'
'அது எண்ணான்னே! 'இம்போர்ட் அமைச்சரு?'
'ஓ! அதுவா? அது அவுங்க கொழும்புல மட்டுந் தான் இருப்பாங்க!அவுங்க இந்த மாதிரி எலவு வூடு,கோயில் திருவிழா.எலக்சன் மாதிரி நேரத்துல வந்து கூட்டத்தோட நின்னு படம் பிடிச்சு பேப்பர்ல போட்டு விலாசித் தள்ளுவாங்க'
'அப்பிடியாண்ணே..... அண்ணன், இங்க பாருங்க.... மகளிர் அமைப்பு,சிறுவர் உரிமை அமைப்புன்னு கொஞ்ச பேரு கௌம்பி வந்துக்கிட்டிருக்காங்க.....'
' எங்க பார்ப்போம்... போன மொற இவுங்க நாள தான் பேப்பர்.றேடியோன்னு ஓரே பரபரப்பா இருந்திச்சு.
ஒரு வாரமா மவுசா பேசப்பட்டாங்க.அப்புறம் அடுத்த சாவு மஸ்கெலியா பக்கம்னு கேள்விப்பட்டதும் அங்க ஓடிப் போயி கொடிப் புடிச்சாங்க.ஆனா கடசியில வருசம் ரெண்டாச்சு.இன்னும் நெயாயம் கெடக்கிலன்னு ஒவ்வொரு எலவு வீடா போயி அவுங்க பங்குக்கு கோசம் எழுப்புறாங்க.அவுங்களாளயும் ஒன்னும் செய்ய முடியல'
'அதெல்லாம் கெடக்கட்டும் அண்ணே இங்க நாம கூடியிருக்கிறது ரமணி சாவுல உள்ள மர்மம் வெளிய வரணும்.அதுக்காக நாம 'ஸ்டிரைக்' அடிக்கணும்.எத்தன நாள் வேல போனாலும் நாம போராடனும்.நெயாயத்த பேசாம வுடக் கூடாது'
ஐயம்மாவின் குரலுக்கு கனகுவும் மண்டையை ஆட்டினாள்.தோட்டம் முழுவதும் போராட்டத்தில் குதிப்பதென தீர்மானித்தது.அந்த நேரத்தில் ஆட்டோ சத்தம் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
தம்பி என்கிற தம்பிராஜா அவ்விடத்திற்கு வந்தான்.அவன் வந்ததுமே கூட்டத்தில் ஒரு சலசலப்புத் தோன்றியது.அந்த சலசலப்பு எதிர்ப்புச் சலசலப்பு அல்ல!தம்பியின் பேச்சைக் கேட்கத்தான்.
'நான் வரும்போதே எல்லாத்தையும் கேள்விப்ட்டேன்!ரமணியின் சாவுக்கு நான் மன வருத்தமடையிறேன்.இவ்வளவு பேரு இருந்தும் நம்ம தோட்டத்துல இது ரெண்டாவது சாவுன்னு நெனக்கவே வெட்கமாயிருக்கு.நீங்கள்ளலாம் என்னா முடிவு செஞ்சீங்க?'
கனகுவும் ஐயம்மாவும் தோட்டத் தலைவர்களும் மகளிர் அமைப்புத் தலைவிகளும் சிறுவர் உரிமை அமைப்புகளும் வேறு சில தொண்டர் நிறுவனங்களும் தமது கருத்துக்களை தெளிவாக முன்வைத்தன. அனைத்தையும் கேட்ட தம்பி
'நீங்க சொல்றதெல்லாம் சரி தான்.ஆனா இப்ப நம்ம முன்னால உள்ள சந்தேகத்த பொலிஸ் மூலமா நீதவானுக்கு சொல்லுவம்.அப்புறமா செய்ய வேண்டிய அடக்க வேலைகளச் செய்வோம்'
'அதெல்லாம் முடியாது.பொனத்த நடுரோட்டுல வச்சி ஆர்ப்பாட்டம் செய்யனும்.அப்பதான் நாம யாருன்ன எல்லாத்துக்கம் தெரியும்'
'அது தான் சரி,கட்சித் தலைவரும் பத்து மணிக்கு வாறேன சொன்னார.அந்த நேரத்துல ரொட்டல வச்சி ஆர்ப்பாட்டம் செஞ்சா தலைவரும் வர்ற நாள பப்ளிசிட்டி கெடக்கும்'
ஆளுக்கால் 'பப்ளிசிட்டி' பற்றி பேசுவதை கூட்டத்தில் மௌனமாக பலர் அங்கலாய்ப்பதையும் காது கூசக் கேட்கக் கூடியதாக இருந்தது.தம்பியும் ஐயம்மாவும் கனகுவும் தனியாக கூடிக் கதைக்கச் சென்றனர்.அவர்கள் கலந்துரையாடிய பின்னர் ஒரு முடிவுக்கு வந்தனர்.
'அப்ப சரிங்க!தோட்டமே ஒன்னுகூடி போராடனும்னு சொல்லும்போது நாங்க குறுக்கால நிக்க விரும்பல. ஒங்க விருப்பப்படியே செய்ங்க.நாங்களும் கலந்துக்கிறோம்'
குறிப்பிட்டபடி போராட்டம் அடுத்த நாள் மிகவும் எதிர்பார்ப்புடன் அரங்கேறியது.அனைத்து ஊடகங்களும்
கூடிவிட்டன.அமைச்ர்களும் கூடி விட்டனர்.ஓரே போராட்டக் கோசங்கள்.எங்கும் அமைதியில்லாமல் இரக்க குணத்தில் கூடியிருந்தவர்களுடன் உப்புக்குச் சப்பாய் கூடியிருந்தவர்களும் பப்ளிசிட்டிக் கிரவுடும் படங்களுக்கு 'போஸ்' கொடுக்கத் தயாராக இருந்தன.இடையிடையே இதனை தடுத்து நிறுத்த அணைவரும் கையில் தண்டால் எடுத்தார்கள்.போராட்டம் திசை மாறத் தொடங்கியது. 'எலவுப் போராட்;டம்' பேப்பர் அறிக்கையை காரணங்காட்டி கட்சி சண்டையாக மாறியது.யார் யாரோ 'பொனத்தைக் கொண்டுவர உதவி செய்ததாக ஏலம் விட்டுக் கொண்டிருந்தார்கள்.
வள்ளியம்மா தன் பிள்ளை மரணத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேயிலை மலையில் தன் ஓரே செல்ல மகனுடன் காத்திருந்தாள்.ரமணியின் 'பொனம்' அந்த பாதையில் இப்போது பொலிசாரின் வான் நோக்கிய துப்பாக்கிச் சூட்டு வெடிகளுடன் அரசாங்க மரிதையோடு அநாதரவாய்க்கிடந்தது.நியாயம் கேட்க வந்த கூட்டம் சிதயிறிருந்தது.வள்ளியம்மா மகனுடன் ரமணியின் உடலைப் பார்த்துப் பார்த்து அழுதாள்.பொலிசுக்கு அவள் யார் என்று புரியவில்லை.அவளுக்கும் சில தர்ம அடிகள் கிடைத்தன. பிள்ளையைப் பெற்று ஒழுங்காக வளர்க்காமல் சிறிய வயதிலேயே வேலைக்கு அனுப்பி அவள் வாழ்வை காவு கொண்டதில் அவளுக்குத் தானே உயரிய பங்கு.எதையும் பேசாமல் வாங்கிக் கொண்டால்.மனம் மட்டுமல்ல உடலும் மரத்துப் போய்தானே இருந்தது அவளுக்கு?

ஒரு வாறாக தோட்டம் அடங்கிப்போனது.பொலிசாரின் உதவியுடன் ரமணியின் உடல் கோர்ட்டின் ஓடர் படி அந்த ஆலமரத்து மயானத்தில் புதைக்கப்பட்டது.ரமணி வெளியில் நடப்பது எதுவும் புரியாமல் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.வள்ளியம்மா இப்போது விசாரணை என்கிற பெயரில் பொலிசுக்கும் கோர்ட்டுக்கும் அலைகிறாள்.நீதி கேட்ட அனைவரும் ஒவ்வொருவராய் கழன்று போகத் தொடங்கினார்கள்.வள்ளியம்மா மகனுடன் பித்துப் பிடித்தவள் போல மகனுக்காக அவ்வப்போது வேலைக் சென்றாள்.
ஐயம்மா,கனகு,தம்பிக் குழு மீண்டும் கூடியது.அவர்கள் நிதானமாகப்பேசி முடிவு எடுத்தார்கள்.முதலில் நமது தோட்டத்தில் எத்தனை பிள்ளைகள் வெளியிடங்களில் வேலை செய்கிறார்கள்?அவர்கள் தொடர்ந்தும் படிப்பதற்கு என்ன பிரச்சினைஃ என்பதை சில படித்த இளைஞர்களின் உதவியுடன் திரட்டினார்கள்.ஒரு போயா தினம் அந்த கோயில் முற்றம் மீண்டும் கூடியது.நியாயம் கேட்டல்ல!இனி இவ்விதம் நடக்காமல் இருக்க மேற் கொள்ள வேண்டிய நடவடிக்ககைளுக்காக!.
தம்பியும் புதிய இளைஞர்களும் ஐயம்மாவும் கனகுவும் தோட்டத்து முன் மாதிரிக் குழு அமைத்திருப்பது பற்றி பேசினார்கள்.தோட்டத் தலைவர்கள்.மாவட்டத் தலைவர்கள் என பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஒரு வாறாக தோட்டத்துப் பொதுமக்கள் அனைவரும் தம்பியின் கூட்டணிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள்.இப்போது அந்தத் தோட்டத்தில் சுமார் நான்கு பெண் பிள்ளைகளும் மூன்று ஆண் பிள்ளைகளும் மீண்டும் பாடசாலை செல்லத் தொடங்கிவிட்டனர்.
தொழிலாளர்கள் மாதாந்தம் கட்சிகளுக்குச் சந்தா செலுத்துவதுபோல அந்தப் புதியக் கூட்டணிக்கு மாதம் இருபது ரூபாய் தருகிறார்கள்.வங்கிக் கணக்கு பேணப்பட்டு தோட்டத்தில் கல்வியை மட்டுமல்ல குடிநீர்,வாசிகசாலை,சிறிய படிக்கட்டடுகள் .மரண வீடுகள்,திருமண வீடுகள் என் அனைத்திற்கும் யாப்பு ஒன்றினூடாகச் சேவை செய்கிறார்கள்.
இப்போது அந்தத் தோட்டத்தில் எவரும் வெளியிடங்களுக்கு வேலை செய்யச் செல்வதில்லை.ரமணிக்காக அவனது தம்பிக்கு படிப்புச் செலவையும் முன்மாதிரிக்குழு ஏற்றுக்கொண்டது.ஆனால் இன்று வரை ரமணிக்கு நியாயம் கிடைத்ததாகத் தெரியவில்லை.ஆனால் இனிமேல் அப்படி நடக்காது என்பதற்கு இந்த முன்மாதிரிக் குழு ஒரு நம்பிக்கை தரும் விடயம்.வள்ளியம்மா மனம் குளிர்ந்து போனாள்.தம்பிக்கு அவள் நன்றியை வார்த்தைகளால் கூறவில்லை.மனம் முழுக்க தம்பியும் ஐயம்மாவும் கனகுவும் அந்த இளைஞர்களும் நிரம்பியிருந்தார்கள்.

ஒரு துளிப் பனிக் காதல்

மஸ்கெலியா பெ.லோகேஸ்வரன்

------------------------------------------------------------------------------------
அந்தப் பனி மலைக் காற்று இதமாயிருந்தது. அப்போதெல்லாம் அனந்துவுக்கு அந்த பனி மலைப் பிரதேசத்தில் தன் காதல் துளிர்விடப் போகின்றது என்பது அனந்துவுக்குத் தெரியாது. அனந்து அவ்வளவு அழகானவல்ல.ஆனால் யாரும் அவனைப் பார்த்து வெறுக்கும் அளவிற்கு வசீகரமற்றவனுமல்ல!
அனந்து இளம் வயதிலேயே கலைகளில் ஆர்வம் உள்ளவன்.இசையும் பாடலும் அவனுக்கு இரு கண்கள் மாதிரி. அவன் பாடலில் இலக்கணம் கற்றவன் அல்ல! கேள்வி ஞானம் அவனது வித்தையை தேசிய ரீதியில் பிரசித்தி பெறச் செய்திருந்தது.
கொஞ்சம் கறுப்பு! கொஞ்சம் குள்ளம்! ஆனாலும் வசீகரக் குரலால் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு வலம் வந்தான் அனந்து. அவன் பாதங்கள் இப்போது அந்தப் பனி மலைப்பிரதேசத்தில் காலடி வைத்தது. சில்லென்று வந்த தென்றலும் பனியும் அவனை முத்தமிட்டுச் சென்றது. அவன் அந்தத் தேயிலைக் காட்டின் வழியாகச் சென்று அதன் ஸ்பரிசங்களை நுகர்ந்து சென்றான். அவன் கால்கள் போன வேகம் அவனுக்குத் தெரியாது.
அனந்து அந்த பூந்தோட்டத்தை அண்மித்தான். விதவிதமான ரோஜாக்கள்.பூக்கள்,செடிகள்,இயற்கை அமைப்புகள் என அவனுக்கு அந்த நூரளைப் பூந்தோட்டம் மனதுக்கு இனிமையத் தந்து கொண்டிருந்தது.
மெலிய பனித் துளிகள் ரோஜா இதழ்களை வருடிக் கொண்டன.சூரியன் தனது மெல்லிய இளங்கதிரை மெல்லமாய் விசிறத் தொடங்கினான். அனந்துவுக்கு அந்தச் சூழல் அழகாகப் பிடித்திருந்து. தன்னையும் அறியாமல் இதமாய் அவன் அந்தப் புல் வெளியில் அமர்ந்து பாடத் தொடங்கினான்.
வருவோரையும் போவோரையும் மெல்லமாய் நின்று கேட்கத்தூண்டியது. அந்தக் கூட்த்தில் தான் அவனின் குரலில் மயங்கிப் போயிருந்தாள் அபி. அனந்துவுக்கு அபியைப்பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை.
அபி! அவள் இள வயதிலேயே கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவள். அதே நேரம் நல்ல கெட்டிக்காரி.படிப்பிலும் சரி, கை வேலைகளிலும் சரி அவளுக்கு நிகர் அவள் தாள். ஆனால் குடும்ப ஒழுக்கத்தை அவள் எப்போதும் மீறியதில்லை. வீட்டின் செல்லப்பிள்ளை. ஆனால் அப்பாவின் கண்டிப்புக்கு மட்டும் குறைவிருக்காது.
அபி. அனந்துவை நெருங்கினால்.டீவியிலும் வானொலியிலும் பத்திரிகையிலும் அவன் குரல் கேட்டும் படத்தைப் பார்த்தும் பழகியிருந்ததால் அனந்து அவளுக்கு அந்நியனாய்ப்படவில்லை. ஏதோ ஒரு துணிச்சலுடன் அபி தன் விருப்பத்தைக் கொட்டித் தீர்தாள் அனந்துவிடம். அவனும் அதனை ஏற்றுக் கொண்டான். எல்லா மேடைப் பாடகனைப் போல அனந்து பெண்கள் விடயத்தில் மோசமானவனல்ல. அபியும் அனந்துவும் அந்தப் பனிமலைப் பிரதேசத்தில் அந்தஸ்து,ஜாதி வரம்புகளை உடைத்தெறிந்து காதலை வளர்த்து திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள்.
ரோஜாப் பூக்களின் பனித் துளிகள் மெல்மாய் உருகி இலைகளின் மீது படியத் தொடங்கின. அனந்து,அபி இருவரது உணர்வுகளும் பார்க்கிறவர்களை வியப்பிலாழ்த்தின. யார் கண் பட்டதோ தெரியாது. அந்தச் செய்தி கேட்டு அந்தத் தோட்டத்து மக்கள் வாய் புலம்பி நின்றனர். ஏன் தெரியுமா? அபியின் சடலம் அந்த ஆற்றங்கரையில் ஒதுங்கியது தான்!
'யாரு செஞ்ச கொடுமடா இது? இப்புடி இந்தப் புள் செத்துக் கிடக்குதே!' புலம்பல்கள் ஓயவில்லை. அம்மா..............அம்மா ........................ எழும்பி வாம்மா.............. எனக்குப் பசிக்குது................................... அந்த பிஞ்சின் குரல் கேட்க நாதியற்றுப் போனால் அபி! அனந்து பேச முடியாது வாயடைத்துப் போனான். அபி ஏன் இறந்தாள்? அவளுக்குள் அப்படி என்ன பிரச்சினை தான் இருந்தது? ஊரில் எவருக்கும் புரியவி;ல்லை.
அபியின் மூன்று வயது மகள் தனித்துப் போனாள்.அவளுக்கு எதுவுமே புரியவில்லை.அனந்துவின் பாடல்களில் மட்டும் முகாரியின் இசை நெஞ்சை வருடிக் கொண்டிருந்தது. அவனது செல்ல மகள் ஒரு துளிப் பனிக் காதலின் சின்னமல்லவா? இருந்தும் அவன் அபியின் கவலையில் மகள் அக்சயாவை மறந்து போயிருந்தான்.
அந்தப் பிஞ்சு வயசிலேயே அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளில் அவளுக்கான உணவையும் உடையையும் பிச்சையாகப் பெற்றுக் கொண்டாள். அக்சயா உண்மையல் ஒரு இளம் தேவதை! அவளை எப்படியாவது வீட்டில் வளர்த்தால் சம்பளமில்லாத வேலைக்காரி! அந்த தோட்டத்து பெட்டிக் கடை முதலாளி பாசமாய் அரவணைப்பது போல அரவணைத்துக் n காண்டான்.
அக்சயா தான் யார் என்று புரியாமலே அந்த வீட்டின் நிரந்தர வேலைக்காரியானாள்;. வயது பதினெட்டாகியும் மழைக்குக் கூட ஒதுங்காத பாவியானாள். இப்போது பெட்டிக் கடை முதலாளிக்கு பணக்; கஸ்டம் வேறு! அக்சயா வெளிநாட்டு வேலைக்காரியானாள்.
வருடம் இரண்டு கடந்தது! அக்சயாவின் சவம் நாளைக்கு பிலேனில வருதாம்! இதுதான் அந்தத்
தோட்டத்தின் புதிய செய்தி! ஊர் பழையபடி பினதத்தத் தொடங்கியது! அக்சயாவின் சவம் நாளை புதைக்கிறார்களாம! கோர்ட்ல எறிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்களாம். அந்த ரோஜாவின் பனித்துகள் இலையிலிருந்து கீழே கண்ணீராய் விழுந்தது! மதியமாகி இரவாகியது.ரோஜாவும் தனது இதழ்களை அக்சயாவிற்காக ஒவ்வொரு இதழாய் உதிரர்க்கத் தொடங்கியது! அக்சயா எந்தப் பூவையும் சூடாமல் அமைதியாக அந்தப் பனி மலைப் பிரதேசத்தில் தனது நிரந்தரப் படுக்கையை அரவணைத்துக் கொண்டாள்......................!

தொழுவமும் தோஹா கட்டாரும்

மஸ்கெலிய பெ.லோகேஸ்வரன்

(யாவும் அனுபவக் கற்பனைகள்)

அந்த மார்கழிப் பனிக்காற்றில் விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் சந்ராவின் மாட்டுத் தொழுவம் பொலிவாயிருந்தது. தொழுவத்தின் முற்றத்தில் மாட்டுச் சாணம் தெளித்து மாக்கோலமிட்டு வாசலில் சாணப்பிள்ளையார் கொழுவிருக்க பறங்கிப்பூவின் அழகோடு அமைதியாய் விழாக் கோலமிட்டிருந்தது அந்தப் பகுதியில் அது கோவிலாகவே தென்பட்டது. அத்தனை தூய்மை!
சந்ரா வேலை என்று வந்து விட்டால் விடியாற்காலை எல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டல்ல! கடமை என்று வந்தாள் அவளுக்கு நிகர்; அவள் தான். அந்தக் காலைப் பனியில் ஆற்றுத் தண்ணீரை அள்ளி கொண்டு வந்து வீடுவாசல் கழுவி, திண்ணை மெழுகி,அடுப்பு மெழுகி அண்டாகுண்டா,சருவமெல்லாம் தண்ணீர் நிரப்பி வீட்டிலுள்ள துணிகளை எல்லாம் துவைத்து நீராடி இறைவனுக்கு விளக்கேற்றி அப்பப்பா! எத்தனை வேலைகள் சந்ராவிற்கு!ஒரு மாதாந்த பில் கட்டாத மெசின் சந்ரா! ஓய்வு என்பது அவளுக்கு எப்போதும் கிட்டியதுமில்லை. அதனை அவள் எதிர்பார்ப்பதுமில்லை! காலச் சக்கரம் அவள் கால்களுக்கும் கைகளுக்கும் சக்கரமிட்டு அலங்காரம் பண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தது.
சந்ரா இப்போதெல்லாம் ஓரேயடியாக அலுததுக் கொள்வாள். அவள் அலுத்துக் கொள்வதிலும் நியாயமில்லாமல் இல்லை.
'ச்சீ................... என்னடா இந்த வாழ்க்கை. எந்த நாளும் இந்த ஆட்டோடும் மாட்டோடும் போலராட வேண்டியிருக்குது. வீட்ல ஒரு டீ.வி இருக்கா, றேடியோ பெட்டி இருக்கா? போன வருசம் வாங்கின அந்த சின்ன றேடியோ பெட்டி இன்னும் அடகுக் கடயில பாடிக்கிட்டிருக்கு! அவன் வீட்டு திண்ணயில, அடுப்படியில, படுக்கயிலனு ஒவ்வொரு எடத்துக்கும் எத்தன றேடியோ பெட்டி, எத்தன டீ.வி! அடுக்க முடியாம அவன் திண்டாடுறான். நாம இங்க சேதிய கே;கிறதுனா கூட அடுத்தவன் தகவல் சொல்ல வேண்டியிருக்கு!'
அவளது முகம் சினத்திலும் வெறுப்பிலும் களையிழந்திருந்தது. அந்த வெறுப்பிலும் நியாமில்லாமல் இல்லை. அவளது உணர்வுகள் அடுத்தவர்களுக்கு வேண்டுமானால் கேளிக்கையாக இருக்கலாம். ஆனால் சந்ராவிற்கு................!
'என்னாங்க? இப்புடியோ தெனமும் மாட்டுக்கு புல் அறுத்தும் கோழிக்கு தீணி போட்டும் நீங்களும் நானும் காலத்த ஓட்ட முடியுமா?' அவள் ஆதங்கப்பட்டுக் கொண்டாள்.
ஏழைகளின் வாழ்வில் எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் காலம் தந்த பரிசல்லவா? இதில் சந்ரா மட்டும் விதிவிலக்காக முடியுமா என்ன?
'இங்கபாரு புள்ள.. இந்தத் தோட்டத்துல ஆடு மாடுனு வளர்க்கிற நம்மலப் பார்த்து எத்தனப் பேரு பொறாமப் படுறாங்க தெரியுமா? ஆனா நீ......... இதுவும் பத்தலனு இன்னும் ஆசப்படுற.......................... இருக்கிறதவுட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசப்படுதுல என்ன நெயாயம்?'
சந்ராவின் கணவன் நிதானமானவன். எதனையும் தீர்க்க தரிசனத்துடன் யோசிப்பான். சந்ராவிற்கும் அவனுக்கும் மாட்டுச் சாண வாசனைகள் எல்லாம் பழகிப் போன ஒன்று. அவர்களுக்கு பெரும்பாலும் தங்கள் மீது அடிக்கும் எந்த வாசனையுமோ எந்த நாற்றமோ அவர்களுக்குப் புரிவதில்லை! அந்தளவிற்கு உழைப்பையும் அவர்களையும் பிரிக்க முடியாது! ஆனால் வருவாய் போதுமானதாக இல்லை. பிள்ளைகளோ மூன்று தான். அவர்களது படிப்பிற்குப் பணம் தேவையல்லவா?
சந்ரா தீர்க்கமாக தனது வெளிநாட்டு மோகத்தை அவளது கணவன் வேலுசாமியிடம் தெரிவித்தான். வேலுசாமிக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை.கூழோ கஞ்சோ எல்லாரும் ஓரிடத்தில் வாழ்ந்து சந்தோசமாயிருக்க வேண்டும் என் நினைப்பவன் அவன்!ஆனால் சந்ராவின் இந்துப் புதிய டாம்பீர வாழ்க்கை மோகத்திற்கு அவன் விரும்பியோ விரும்பாமலோ தலைவணங்கிப்போக வேண்டிய கட்டாயம்.
வேலுசாமி தலையாட்டிப் பொம்மையானான். அன்று திங்கட்கிழமை சந்ராவின் டோஹா கட்டாருக்கான பயணச் சீட்டு ஏஜென்டு மொகிதீனால் வழங்கப்பட்டது. வீட்டில் தடபுடலான விருந்து! அவளுக்கும் பிரியாவிடை வைபவம் நடைபெற்றது! சந்ராh தனது பிள்ளைகளையும் கணவன் வேலுசாமியையும் மறந்து புதிய பயணம், எதிர்கால வாழ்க்கைபற்றி கனவு காணத் தொடங்கினாள். புதன் கிழமையும் வந்தது. அவள் கொழும்பு கட்டுநாயக்க விமானத்தில் பல வெளிநாட்டு வேலைக்காரிகள் வரிசையில் பயணமானாள்.
வருடம் இரண்டோடியது! அவளது இலங்கை வருகை ஊர்ஜிதம் செய்யப்பட்டது. வேலுசாமி அயருக்கு வாகனத்தைப் பிடித்துக் கொண்டு கட்டுநாயக்கவிற்கு பயணமானான். அவனது மனதில் இன்னமும் பழைய சந்ரா குடி கொண்டிருந்தாள். ஆனால்................. வந்த சந்ரா.................... அவனால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை................... அத்தனை மேக்கப்புடன் அழகாய் சிங்காரித்து கண்ணாடியணிந்து டிறவுசருடன் குதிக்கால் பாதணியுடன் .................... நடிகை தோற்றுப் போனாள்..................... சந்ரா! அத்தனைப் பேரழகியானாள்!
வேலுசாமி அன்று தான் வெள்ளைச் சாரத்துடன்........ அயண் பண்ணிய சட்டையுடன்............... அந்த தோட்டமே அவனை நக்கலடித்து அனுப்பியிருந்தது. சந்ரா அந்த தோட்டத்திற்கு வந்தாள். வீட்டில் ஏக தடபுடல்................! தோட்டமே அவளை வேடிக்கை பாரத்தது! அன்றைய பொழுது கழிந்தது.
இரவு வந்தது............. வேலுச்சாமி தனது ஆசை மனைவியை கொஞ்சம் அளவுக்கதிகமாகவே நேசித்து................ அன்று தான் திருமணமாகி முதலிரவுக்குக் காத்திருந்தவன் போல் வெட்கப்பட்டு அந்தப் படுக்கையறையை அடைந்தான். ஆனால்........ அவன் அருகே வந்ததும் சந்ராவிற்கு ஏகப்பட்ட கோபம்...................
'ச்சீ....... என்ன .................... இப்புடிச் சாண நாத்தம்............ ஐயோ.........கொமட்டுது ...................... வெளிய போ....................'
சந்ராவின் இந்தத் திடீர்பாய்ச்சல் அவனை வெட்கித் தலை குனிய வைத்தது. பொழுது விடிந்தது. வீட்டில் ஓரே கலேபரம்! வேலுசாமியை விவாகரத்து செய்ய சந்ரா திடசங்கற்பமாயிருந்தாள்! ஆனால் தோட்டத்து மக்கள் ஒன்று கூடி சந்ராவிற்கு எடுத்துச் சொல்லி அவளது மனதை மாற்றினார்கள். ஆனால், சந்ரா மீண்டும் டோஹா கட்டாருக்குப் பயணமானாள். அவளுக்கு இந்த தோட்டத்து தொழுவத்து வாழ்க்கையைவிட டோஹா கட்டார் வாழ்க்கைப் பிடித்துப் போயிருந்தது! போனவள் இன்று பதில் ஏதும் இல்லாமல் காணாமல் போயிருந்திருந்தாள்.. ஆனால்....... வேலுசாமி மட்டும் சந்ராவிற்காக ஒரு நப்பாசையுடன் வீடு, வாழ்க்கை, நடை, உடை, பாவனைகளை மாற்றி 'டடா..மம்மி...........கம் இயருக்கு............ மாறியிருந்தான்.......... ஆனால்...... சந்ராவின் தொலைந்த விலாசத்தைத் தான் அவனால் இன்று வரை கண்டு பிடிக்க முடியவில்லை!.
முற்றும்.