Sunday, May 15, 2011

புதிய சந்தா

- பெ.லோகேஸ்வரன் -
மேமலைப் பக்கம் அரசல் புரசலா வந்த சேதி அந்தத் தோட்டத்தையே ஒரு கலக்குக் கலக்கியது.
'அடியேய்!......................... அடியேய்......................................... நில்லுடி நானும் வாறேன்.............................'
குரல் வந்த பக்கம் கனகு மெதுவாய் திரும்பிப்பார்த்தள்.திரும்பிப் பார்த்தது அவளது தலைகள் மட்டும் தான்.கால்கள் அல்ல.
'வா.... வா... எனக்கு நிக்க ஏலாது. நீ சீக்கிரம் பின்னாடி வா'
அவள் தான் இந்த விடயத்தை போய் நடவடிக்கை எடுக்கப் போறதா ஒரு நினைப்பு! அவ்வளவு வேகம்
கனகுவின் கால்களுக்கு.புத்திக்கு மட்டும் என்ன?அது அதனை விட வேகமாகச் செல்கின்றது.
அலை மோதும் கூட்டம்.திருவிளாவிற்குக் கூட சில குடும்பம் குடும்பமாய் தான் போய் வரும்.ஆனால் இன்று வீட்டில் உள்ள நாய்,பூனை கூட வெளியில் தான்.அவ்வளவு அல்லோல கல்லோலம்!
'அப்படி என்ன?தலையா முழுகிருச்சு?எரும மாடு மாதிரி வந்து முட்டுற?கொஞ்சம் பாத்துப் போனா என்னா?'
'கோபிச்சுக்காத ஐயம்மா. போற அவசரத்துல கால் பட்டுறுச்சு.கோபிச்சுக்காத...'
சொல்லிக் கொண்டே மன்னிப்புக் கேட்ட குரல் மாயமாய் மறைந்தது.ஐயம்மா எப்போதும் யாராக இருந்தாலும் தெளிவாகப் பேசிவிடும் குணம் கொண்டவள்.
கனகுவும் ஐயம்மாவும் ஒன்றாய்ப் படித்தவர்கள்.படிப்பு என்றால் பெரிய படிப்பு.அந்தக் காலத்தில் அவர்களது படிப்பு தான் 'ஒசந்த படிப்பு'.ஒருவரல்ல!பலர் பாராட்டியிருக்கிறார்கள்.
1950 களில் இந்தப் படிப்பு தான் அவர்களை அந்தத் தோட்டத்தில் ஒரு 'யுனிவேர்சிட்டி'யாக பலருக்கு அடையாளம் காட்டியது.அவர்களது படிப்பில் தம்பி என்கிற தம்பிராஜாவும் முக்கியமானவன்.அவனும் அந்தத் தோட்டத்தில் ஜிப்பா வாத்தியாரிடம் படித்தவன்.
ஓடிய கால்கள் ஒரு இடத்தில் நின்றன.அந்த ஆற்றங்கரை இன்று 'குடிவிடுதல்' நிகழ்ச்சிக்காக நிரம்பியிருந்தது போல ஒரு பிரமிப்பு.ஆனால் அங்கு எந்த சமய நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை. முன்னாலிலிருந்தவர்களுக்கு மட்டுமே அங்கு என்ன நடக்கின்றது என்பது புரிந்த விடயம்.
'கனகு... எப்புடியாவுது சந்துல நொலஞ்சி போயிடு.ஓம் பின்னுக்கே நானும் வந்துடறேன்'
'சரி ஐயம்மா.நான் மொதல்ல போயிருறேன்.நீ பின்னுக்கே வந்துரு.....'
அந்தக் கூட்டத்தில் கனகுவும் ஐயம்மாவும் பாம்பினைவிட வேகமாக லாவகமாக உள்ளே நுழைந்தார்கள்.ஆர்வத்தில் வயதும் ஒரு தடையல்ல என்றிருந்தது அவர்களது கால்களுக்கு.
'ஐயோ! ஏம்புள்ளய கொண்ணுப் போட்டுட்டாங்களே! எப்புடி வேல செஞ்சி குடும்பத்தக் காப்பாத்துன புள்ள?இப்புடி அநியாயமா பாவிப் பயலுக கொழும்புல இருந்து பெட்டியில அனுப்பி வச்சிருக்காங்களே!
நாசமாப் போவானுக'
அந்தக் குரல் எட்டாங் கிளாசு வரை படித்து மாசாமாசம் ஐயாவீட்ல கைநிறைய காசு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கொழும்புக்கு அனுப்பிய ரமணியின் அம்மாவின் அழுகைக் குரல்.
'வள்ளியம்மா...... இங்க பாரு என்னா நடந்துச்சு? என்னாடி இந்தக் கோலம்? ரமணிப் புள்ளய கொழும்புக்கு அனுப்பாத .... அனுப்பாத....ன்னு தலையில அடிச்சுக்கிட்டேனே? கேட்டியா?'
'யார்? ஐயம்மாவ? பாருக்கா....... ஏம் புள்ளய? ரதி மாதிரி இருந்த புள்ளய சின்னாபின்னமாக்கி நாசமாக்கிப் புட்டானுங்க.கடசியில அதுவா கயித்துல தொங்கிருச்சுனு சொல்லி பெட்டியில அனுப்பிட்டானுங்க'
'வள்ளி....இப்புடியே பொலம்பிக்கிட்டிருந்தா என்னா செய்யிறது?அண்ணனக் கூப்பிட்டு நடக்கிற காரியத்த பாரு.....'
'ஆமாம்.பொனத்த வூட்டுக்கு கொண்டு பொற வேலயப் பாருங்கப்பா... வள்ளி தள்ளு.... தள்ளு......
வாங்கப்பா யாரு மரணக் கமிட்டி ஆளுங்கல்லாம் இங்க வாங்க.தூக்குங்க.....தூக்குங்க....................'
'ஐயோ!.....ஐயோ......! ரமணி..... ரமணின்னு ஆசையாக் கூப்பிட்டவங்கள்லாம் இப்பப் பொனம்னு கூப்பிடுறாங்களே! கடவுளே...... இந்தக் கொடுமய எல்லாம் ஏம்பா என்னப் பார்க்க வக்கிற? என்னிய கூப்பிட்டிருந்தா நான் வந்திருப்பனே!'
வள்ளியம்மா சும்மாவே பேண் பரட்டைத் தலையுடன் தான் இருப்பாள்.முடி ஆடிக் கொரு முறையும் அமாவாசைக்கொரு முறையும் தான் சீவுவாள்.இப்போது 'எலவு வீடு' வேறு .இனிமேல் அவள் தலையைச் சீவினாள் அது குதிரைக் கொம்பு தான்.
'கனகு...வா... எங்க நம்ம தம்பியக் கூப்பிடு...... இதுக்கு ஒரு முடிவு கட்டணும்.இந்தத் தோட்டத்துல மட்டும் இதோட ரெண்டு சாவு.அநியாயமா போச்சு.கேக்க நாதியில்லன்னு துப்பத்தவனுங்க செஞ்ச காரியத்த தட்டி கேக்கணும்..... ஆளுங்கள ஒன்னு சேத்து போராட்டம் நடத்தனும்.பொனத்த தெருவுல வச்சி ஆர்ப்பாட்டம் பண்ணினா தான் அடங்குவானுங்க...'
'ஆமாம்... ஆமாம்...இவுனுங்களுக்கு இந்த n மாற ஒரு பாடம் படிப்பிச்சாதான் சரிவரும்.தம்பி கடைக்கு போயிட்டானாம்.வந்தோன கதப்போங்கக்கா.....'
'அவனுக்கு போனிருக்கு தானே? யாருகிட்டயாவது சொல்லி தகவல் அனுப்பு! ஒடனே ஆரம்பிச்சா தான் சரி வரும்.தோட்டத் தலைவர்மாரு,எளைஞர் சங்க பொடியன்களயும் கூப்பிட்டு வெசயத்த பேசிப்புடுவோம். தம்பி வந்தோன்ன மத்தத பேசுவோம்'
'அது தாங்கக்கா சரி. அவுங்கள்கிட்ட பேச எல்லாத்தையும் மேட்டு லயத்து காம்பறாவுக்கு வறச் சொல்லிட்டேன்.அவுங்க வந்திருப்பாங்க... வாக்கா நாமலும் போவோம்'
அந்தத் தோட்டத்தில் எத்தனை தலைவர்மார் இருந்தாலும் கனகு அக்காவுக்கும் ஐயம்மா அக்காவுக்கும் ஒரு தனி மவுசு தான்.தோட்டத்துல அவுங்களும் இந்திய வழக்குப்படி 'பதினெட்டுப்பட்டி'க்குப் பொறுப்பான பெண் நாட்டாமைகள் தான்.ஆனால் அநியாயம்னு நினைத்தால் பெண் சிங்கங்கள் இரண்டும் பட்டையைக் கிளப்பி விடும்.தம்பி இந்த சிங்கங்களுக்கு அப்புறம் தான்.கொஞ்சம் நிதானமா யோசிக்கும் ஒருவன்.இரு பெண் சிங்கங்களும் தங்களுக்குள் பாசத்துடன் அக்கா என்றே பேசிக் கொள்ளும்.
ஒருவாறு கூட்டம் கூடியது.புரட்சித் தலைவிகள் போல் அவர்கள் முன்னால் நின்று ரமணியின் மரணம் குறித்து பேசத் தொடங்கினார்கள்.
'ஏம்பா... மாணிக்கம் ஒன்னுட்டு கூட்டாளி புறொக்கர் பொன்னம்பலம் எங்க? அவன் தானே வேலய்க்கு ரமணிய அனுப்புனது?...... அவன கூப்பிடு.....'
'அவன்தான் அக்கா கொழும்புக்குப் போயி காரியத்த பார்த்தது.அதுனால் தான் இவ்வளவு சீக்கிரமா 'பொடி' வந்திருச்சு.இல்hட்டி இப்போதய்க்கு எடுக்க முடியாதுன்னு சொன்னான்'
'ஏய்... மாணிக்கம்...... ஒத வாங்காத.... அவன் யாருடா ரமணிக்கு.. புள்ள செத்தோன யாருக்குடா
மொதல்ல சொல்லணும்? 'பொடிய' கொண்டு வர மட்டும் தோட்டத்துல யாருக்கும் என்னான்னு கூடத் தெரியாது.பொன்னம்பலம் இந்தத் தோட்டத்துல கால வச்சான்னா வெட்டாம விடமாட்டேன்..அவன இந்தப் பக்கம் வர வேணான்னு சொல்லு.... சரியா... கவ்வாத்து கத்தி ரெடியா இருக்கு..... சீவிப்புடுவேன்......
அவன...'
ரமணியின் தாய்மாமன் குரல் ஆக்ரோசமாய் எழுந்தது.போதாதற்கு அவனுக்கு 'சப்போர்ட்டாய்' இன்னொரு குரல் வந்தது.
'இப்புடி ஒரு பொழப்பு பொழக்கறதுக்கு நாண்டுகிட்டு சாவலாம்.சாராயம் சாப்பாடுன்னு காசு கெடச்சோன்ன அவரு தான் ஊருல பெரியாளு மாதிரி பேசி முடிப்பாரு.. அவன விடக் கூடாது'
'போன சாவுலயும் இப்புடித்தான்.அவன் அம்பதாயிரம் காசு வாங்கிக்கிட்டு எலவு வீட்டுக்கு இருபதாயிரத்த கொடுத்து வாயடச்சுட்டான்.'
'புள்ளங்கள கூட்டிப் போயி வேலன்னு சேத்துவுட்டுட்டு அவுங்க செத்தா எவ்வளவு தருவீங்கனு கேட்டுப் பேரம் பேசிட்டு வாரான்போல.அதுனாலதான் செத்தவொடன அவனுக்கு மட்டுந்தான் சேதி வருது'
கூட்டம் புறோக்கர் பொன்னம்பலத்தின்மீது தன் வசைமாரியைப் பொழியத் தொடங்கியது.
'பொன்னம்பலத்த இந்தப் பிரச்சின முடிஞ்சோன பாத்துக்குவோம்.இப்ப என்னா செய்யனும் அதப் பத்தி பேசுங்க'
'அக்கா...நாங்க நம்ம கட்சி தலைவருக்கும் எம்பீக்கெல்லாம் சொல்லிட்டோம்.அவுங்க வாறேனு சொல்லியிருக்காங்க'
கூட்டத்தில் நையாண்டி கந்தன் தன் வழமையான நையாண்டித் தனத்தை எடுத்து விட்டான்.
'எதுக்குப்பா? பொனத்த தூக்கவா?இல்லாட்டி பேப்பர்ல அறிக்கவுடவா?'
'கந்தன் அண்ணன் மரியாத கெட்டுப் போவும்.பாத்து சரியா?எங்க தலைவர பத்தி பேசாத சரியா?'
சட்டையைப் பிடிக்காத குறையாக அவன் கூறினான்.நையாண்டிக் கந்தன் இதற்கெல்லாம் அசருபவன் அல்ல.
'அது சரி 'இம்போர்ட்' அமைச்சருக்கெல்லாம் சொன்னா அவுங்களும் வந்து பேரு ஒன்னு போட்டுக்குவாங்களே!கங்காணி 'செக்றோல்' புத்தகத்தை கொண்டுவாய்யா?'
'அது எண்ணான்னே! 'இம்போர்ட் அமைச்சரு?'
'ஓ! அதுவா? அது அவுங்க கொழும்புல மட்டுந் தான் இருப்பாங்க!அவுங்க இந்த மாதிரி எலவு வூடு,கோயில் திருவிழா.எலக்சன் மாதிரி நேரத்துல வந்து கூட்டத்தோட நின்னு படம் பிடிச்சு பேப்பர்ல போட்டு விலாசித் தள்ளுவாங்க'
'அப்பிடியாண்ணே..... அண்ணன், இங்க பாருங்க.... மகளிர் அமைப்பு,சிறுவர் உரிமை அமைப்புன்னு கொஞ்ச பேரு கௌம்பி வந்துக்கிட்டிருக்காங்க.....'
' எங்க பார்ப்போம்... போன மொற இவுங்க நாள தான் பேப்பர்.றேடியோன்னு ஓரே பரபரப்பா இருந்திச்சு.
ஒரு வாரமா மவுசா பேசப்பட்டாங்க.அப்புறம் அடுத்த சாவு மஸ்கெலியா பக்கம்னு கேள்விப்பட்டதும் அங்க ஓடிப் போயி கொடிப் புடிச்சாங்க.ஆனா கடசியில வருசம் ரெண்டாச்சு.இன்னும் நெயாயம் கெடக்கிலன்னு ஒவ்வொரு எலவு வீடா போயி அவுங்க பங்குக்கு கோசம் எழுப்புறாங்க.அவுங்களாளயும் ஒன்னும் செய்ய முடியல'
'அதெல்லாம் கெடக்கட்டும் அண்ணே இங்க நாம கூடியிருக்கிறது ரமணி சாவுல உள்ள மர்மம் வெளிய வரணும்.அதுக்காக நாம 'ஸ்டிரைக்' அடிக்கணும்.எத்தன நாள் வேல போனாலும் நாம போராடனும்.நெயாயத்த பேசாம வுடக் கூடாது'
ஐயம்மாவின் குரலுக்கு கனகுவும் மண்டையை ஆட்டினாள்.தோட்டம் முழுவதும் போராட்டத்தில் குதிப்பதென தீர்மானித்தது.அந்த நேரத்தில் ஆட்டோ சத்தம் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
தம்பி என்கிற தம்பிராஜா அவ்விடத்திற்கு வந்தான்.அவன் வந்ததுமே கூட்டத்தில் ஒரு சலசலப்புத் தோன்றியது.அந்த சலசலப்பு எதிர்ப்புச் சலசலப்பு அல்ல!தம்பியின் பேச்சைக் கேட்கத்தான்.
'நான் வரும்போதே எல்லாத்தையும் கேள்விப்ட்டேன்!ரமணியின் சாவுக்கு நான் மன வருத்தமடையிறேன்.இவ்வளவு பேரு இருந்தும் நம்ம தோட்டத்துல இது ரெண்டாவது சாவுன்னு நெனக்கவே வெட்கமாயிருக்கு.நீங்கள்ளலாம் என்னா முடிவு செஞ்சீங்க?'
கனகுவும் ஐயம்மாவும் தோட்டத் தலைவர்களும் மகளிர் அமைப்புத் தலைவிகளும் சிறுவர் உரிமை அமைப்புகளும் வேறு சில தொண்டர் நிறுவனங்களும் தமது கருத்துக்களை தெளிவாக முன்வைத்தன. அனைத்தையும் கேட்ட தம்பி
'நீங்க சொல்றதெல்லாம் சரி தான்.ஆனா இப்ப நம்ம முன்னால உள்ள சந்தேகத்த பொலிஸ் மூலமா நீதவானுக்கு சொல்லுவம்.அப்புறமா செய்ய வேண்டிய அடக்க வேலைகளச் செய்வோம்'
'அதெல்லாம் முடியாது.பொனத்த நடுரோட்டுல வச்சி ஆர்ப்பாட்டம் செய்யனும்.அப்பதான் நாம யாருன்ன எல்லாத்துக்கம் தெரியும்'
'அது தான் சரி,கட்சித் தலைவரும் பத்து மணிக்கு வாறேன சொன்னார.அந்த நேரத்துல ரொட்டல வச்சி ஆர்ப்பாட்டம் செஞ்சா தலைவரும் வர்ற நாள பப்ளிசிட்டி கெடக்கும்'
ஆளுக்கால் 'பப்ளிசிட்டி' பற்றி பேசுவதை கூட்டத்தில் மௌனமாக பலர் அங்கலாய்ப்பதையும் காது கூசக் கேட்கக் கூடியதாக இருந்தது.தம்பியும் ஐயம்மாவும் கனகுவும் தனியாக கூடிக் கதைக்கச் சென்றனர்.அவர்கள் கலந்துரையாடிய பின்னர் ஒரு முடிவுக்கு வந்தனர்.
'அப்ப சரிங்க!தோட்டமே ஒன்னுகூடி போராடனும்னு சொல்லும்போது நாங்க குறுக்கால நிக்க விரும்பல. ஒங்க விருப்பப்படியே செய்ங்க.நாங்களும் கலந்துக்கிறோம்'
குறிப்பிட்டபடி போராட்டம் அடுத்த நாள் மிகவும் எதிர்பார்ப்புடன் அரங்கேறியது.அனைத்து ஊடகங்களும்
கூடிவிட்டன.அமைச்ர்களும் கூடி விட்டனர்.ஓரே போராட்டக் கோசங்கள்.எங்கும் அமைதியில்லாமல் இரக்க குணத்தில் கூடியிருந்தவர்களுடன் உப்புக்குச் சப்பாய் கூடியிருந்தவர்களும் பப்ளிசிட்டிக் கிரவுடும் படங்களுக்கு 'போஸ்' கொடுக்கத் தயாராக இருந்தன.இடையிடையே இதனை தடுத்து நிறுத்த அணைவரும் கையில் தண்டால் எடுத்தார்கள்.போராட்டம் திசை மாறத் தொடங்கியது. 'எலவுப் போராட்;டம்' பேப்பர் அறிக்கையை காரணங்காட்டி கட்சி சண்டையாக மாறியது.யார் யாரோ 'பொனத்தைக் கொண்டுவர உதவி செய்ததாக ஏலம் விட்டுக் கொண்டிருந்தார்கள்.
வள்ளியம்மா தன் பிள்ளை மரணத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேயிலை மலையில் தன் ஓரே செல்ல மகனுடன் காத்திருந்தாள்.ரமணியின் 'பொனம்' அந்த பாதையில் இப்போது பொலிசாரின் வான் நோக்கிய துப்பாக்கிச் சூட்டு வெடிகளுடன் அரசாங்க மரிதையோடு அநாதரவாய்க்கிடந்தது.நியாயம் கேட்க வந்த கூட்டம் சிதயிறிருந்தது.வள்ளியம்மா மகனுடன் ரமணியின் உடலைப் பார்த்துப் பார்த்து அழுதாள்.பொலிசுக்கு அவள் யார் என்று புரியவில்லை.அவளுக்கும் சில தர்ம அடிகள் கிடைத்தன. பிள்ளையைப் பெற்று ஒழுங்காக வளர்க்காமல் சிறிய வயதிலேயே வேலைக்கு அனுப்பி அவள் வாழ்வை காவு கொண்டதில் அவளுக்குத் தானே உயரிய பங்கு.எதையும் பேசாமல் வாங்கிக் கொண்டால்.மனம் மட்டுமல்ல உடலும் மரத்துப் போய்தானே இருந்தது அவளுக்கு?

ஒரு வாறாக தோட்டம் அடங்கிப்போனது.பொலிசாரின் உதவியுடன் ரமணியின் உடல் கோர்ட்டின் ஓடர் படி அந்த ஆலமரத்து மயானத்தில் புதைக்கப்பட்டது.ரமணி வெளியில் நடப்பது எதுவும் புரியாமல் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.வள்ளியம்மா இப்போது விசாரணை என்கிற பெயரில் பொலிசுக்கும் கோர்ட்டுக்கும் அலைகிறாள்.நீதி கேட்ட அனைவரும் ஒவ்வொருவராய் கழன்று போகத் தொடங்கினார்கள்.வள்ளியம்மா மகனுடன் பித்துப் பிடித்தவள் போல மகனுக்காக அவ்வப்போது வேலைக் சென்றாள்.
ஐயம்மா,கனகு,தம்பிக் குழு மீண்டும் கூடியது.அவர்கள் நிதானமாகப்பேசி முடிவு எடுத்தார்கள்.முதலில் நமது தோட்டத்தில் எத்தனை பிள்ளைகள் வெளியிடங்களில் வேலை செய்கிறார்கள்?அவர்கள் தொடர்ந்தும் படிப்பதற்கு என்ன பிரச்சினைஃ என்பதை சில படித்த இளைஞர்களின் உதவியுடன் திரட்டினார்கள்.ஒரு போயா தினம் அந்த கோயில் முற்றம் மீண்டும் கூடியது.நியாயம் கேட்டல்ல!இனி இவ்விதம் நடக்காமல் இருக்க மேற் கொள்ள வேண்டிய நடவடிக்ககைளுக்காக!.
தம்பியும் புதிய இளைஞர்களும் ஐயம்மாவும் கனகுவும் தோட்டத்து முன் மாதிரிக் குழு அமைத்திருப்பது பற்றி பேசினார்கள்.தோட்டத் தலைவர்கள்.மாவட்டத் தலைவர்கள் என பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஒரு வாறாக தோட்டத்துப் பொதுமக்கள் அனைவரும் தம்பியின் கூட்டணிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள்.இப்போது அந்தத் தோட்டத்தில் சுமார் நான்கு பெண் பிள்ளைகளும் மூன்று ஆண் பிள்ளைகளும் மீண்டும் பாடசாலை செல்லத் தொடங்கிவிட்டனர்.
தொழிலாளர்கள் மாதாந்தம் கட்சிகளுக்குச் சந்தா செலுத்துவதுபோல அந்தப் புதியக் கூட்டணிக்கு மாதம் இருபது ரூபாய் தருகிறார்கள்.வங்கிக் கணக்கு பேணப்பட்டு தோட்டத்தில் கல்வியை மட்டுமல்ல குடிநீர்,வாசிகசாலை,சிறிய படிக்கட்டடுகள் .மரண வீடுகள்,திருமண வீடுகள் என் அனைத்திற்கும் யாப்பு ஒன்றினூடாகச் சேவை செய்கிறார்கள்.
இப்போது அந்தத் தோட்டத்தில் எவரும் வெளியிடங்களுக்கு வேலை செய்யச் செல்வதில்லை.ரமணிக்காக அவனது தம்பிக்கு படிப்புச் செலவையும் முன்மாதிரிக்குழு ஏற்றுக்கொண்டது.ஆனால் இன்று வரை ரமணிக்கு நியாயம் கிடைத்ததாகத் தெரியவில்லை.ஆனால் இனிமேல் அப்படி நடக்காது என்பதற்கு இந்த முன்மாதிரிக் குழு ஒரு நம்பிக்கை தரும் விடயம்.வள்ளியம்மா மனம் குளிர்ந்து போனாள்.தம்பிக்கு அவள் நன்றியை வார்த்தைகளால் கூறவில்லை.மனம் முழுக்க தம்பியும் ஐயம்மாவும் கனகுவும் அந்த இளைஞர்களும் நிரம்பியிருந்தார்கள்.

No comments:

Post a Comment