மகா கலைஞன்





பெரியசாமிபிள்ளை லோகேஸ்வரன்

கோபாலனுக்கு அந்த வேசம் மிக அழகாகப் பொருந்தியிருந்தது. வசீகரமான அவனது தோற்றம்,அவனது நடிப்பு, கணீரென்ற குரலில் வரும் வாய்ப் பாட்டு எல்லாம் அந்த தோட்டத்தில் மட்டுமல்ல, தேயிலைத் தோட்டங்கள் உள்ள எல்லா இடங்களிலும் தனித்துவமாய்ப் பேசப்பட்டு வந்தது.

அர்ச்சுணன் தபசு நாடகத்தில் அவன் ஏற்கும் தோற்றம் நிஜ மகாபாரதத்தையே முன்னுக்குக் கொண்டுவந்து நிறுத்தும். மாசி மாத காமன் திருவிழாவில் மன்மதனாய் வரும் அவனது அழகே அழகு!

கலைக்காக தன்னை முழுமையாகவே அர்ப்பணித்திருந்த ஒரு மகா கலைஞன். எல்லா கலைஞனுக்கும் இருக்கும் ஏழ்மை இவனது வாழ்விலும் இல்லாமல் இல்லை. ஆனால், அடுத்தவனிடம் கையேந்தி வாழும் நிலையில் அவன் இல்லை. அரிதாரம் வாங்கிய பின்னால் தான் வயிற்றுக்கே கொஞ்சம் ஆகாரத்திற்காகவும் செலவழிக்கும் ஒரு உன்னதமான கலைஞன்.

இந்த சின்ன வயதிலேயும் அவனது மகா கெட்டித் தனத்தை மெச்சாதார் யார் இருக்கின்றார்கள்? நவராத்திரி,சிவராத்திரி விழாக்களில் இவனது வில்லுப்பாட்டிற்காக கூடும் கூட்டம் தான் எத்தனை? எத்தனை? சின்னஞ் சிறுசுகள் கூட ராத்திரி வேலையிலும் கண் விழித்து அந்த வில்லுப்பாட்iயும் கருத்தையும் நகைச்சுவையையும் ரசித்து அடுத்தநாள் பள்ளியிலே இவைகளை அசைபோடாத பிள்ளைகள் யார் இருக்கின்றார்கள்?

கோபாலன் அவனது மரக்கறித் தோட்டத்திலே பில்லைப் பிடுங்கிப் போட்டுக் கொண்டிருந்தான். வியர்வை அவனது உடலை அப்பிடியே நனைத்திருந்தது. இனி குளித்து துவட்டுவதற்கு ஒன்றுமில்லை.

கோபாலண்ணே.... கோபாலண்ணே................... குரல் வந்தப் பக்கம் திரும்பிப் பார்த்து தபால்காரச் சிறுவனின் குரல் என்று தெரிந்து கொண்டான்.

என்னாப்பா? என்னா? ஏதாவது தபால் வந்திருக்கா, என்று கேட்டவாறே அந்த கசங்கிய டவலை எடுத்துத் துடைத்துக் கொண்டு காண் வழியாக மேலேறி தோட்டத்து மூங்கில் கதவைத் திறந்து கொண்டு வந்தான்.

அண்ணே.... அமைச்சருகிட்ட இருந்து கடிதம் வந்திருக்கண்ணே.............. பாருங்க.... இப்ப இந்தியாவுல செம்மொழி மாநாட்டுக்கு நம்ம மலையகக் கலைஞரையும் அனுப்பி வக்கிறாங்களாம். ஒங்களுக்கும் சான்ஸ் கெடச்சிருக்கும்... ஒங்க தெறம இங்க யாருக்கு இருக்கு...................?

கோபாலன் மனதால் குளிர்ந்து போனான். கலைஞனுக்குப் பாராட்டைத் தவிர ஏது பெரிய பரிசு? அவன் அந்தக் கடிதத்தை வாங்கிப் பிரித்துப் பார்ப்பதற்குள் தபால்காரன் ஆர்வக் கோளாறினால் அப்பிடியே தலையை உள்ளே விட்டு....... என்னான்னே வெசயம்?.... னு கேட்டான்.


கோபாலன் சிரித்துக் கொண்டே வேறு ஒன்னுமில்லடா தம்பி... இந்த மொற சாகித்திய வெழாவுல எனக்கு விருது கொடுத்து கௌரவிக்கப் போறாங்களாம்.. நம்ம ஐயாவோட நெனைவுப் பரிசு இந்த மொற எனக்குன்னு சொல்லியிருக்காங்க.. அடுத்தமாசம் அஞ்சாந் தேதி மாத்தளையில வெழாவாம்.....அவனது மகிழ்சி உச்சந் தலையைத் தொட்டிருந்தது.


இப்போதெல்லாம் பணம் படைத்தவர்களுக்கும் பக்கத்திலிருப்பவர்களுக்கும் தானே விருது எல்லாம் கிடைக்கின்றது. இந் நிலையில் ஊரறிந்த ஒரு தோட்டத்திலேயே வாழ் நாளைக் கழிக்கும் நம்ம கோபாலனுக்கு விருது கிடைப்பது என்ன அவ்வளவு இலகுவான காரியமா?

மாத்தளை... இங்கிருந்து கண்டிக்குப் போய்..... அங்கிருந்து மாத்தளைக்குப் பஸ் எடுத்துப் போகணும்... காலைல அஞ்சு மணிக்குத் தான் மொத கண்டி பஸ் இருக்கு..... நம்ம தோட்டத்துல காலைல மூணு மணிக்கு எழுந்து பொறப்பட்டாதான் எப்புடியும் நாலற மணிக்காவது மஸ்கெலியா டவுனுக்குப் போய் சேர முடியும். அப்புறமா அங்க இருந்து கண்டி பஸ் எடுத்தா எப்புடியும் எட்டரை மணிக்கு போய் சேருவான். மாத்தளைக்குப் போக பத்தரை மணியாகிரும்.. ஆனா... பங்சன் காலைல ஒம்போது மணியின்னு போட்டிருக்கு..... என்னா செய்யலாம்?

கோபாலன் மனக்கண்ணிலேயே கணக்குப் பார்த்து.. இதெல்லாம் சரிவராது... மொதல் நாளே போகணும்.. என முடிவெடுத்தான்.

அண்ணே மாத்தளைக்கு எப்ப போறீங்க...... நானும் ஒங்களோட வரட்டா..... எனக்கு இந்த சாகித்திய வெழாவ பார்க்க ரொம்ப நாளா ஆச.... முடியமா அண்ணே..................... நானும் வாறனே.......

தபால்காரன் கெஞ்சலுடன் கேட்டான்.. சரி... சரி... வா போகலாம்... நாலாந் தேதி இங்க இருந்து பொறப்புட்டு மாத்தளை முத்துமாரியம்மன் கோவிலிலுல போய் தங்குவோம். ஆனா.. செலவுக்குகக் காசு தான் கையக்கடிக்குது...... அதப்பத்தி யோசிக்காதிங்க..... அதுக்கு நாங்க ஏற்பாடு பண்ணிட்டோம்னு சந்தோசமாச் சொன்னான் தபால்காரன்....

என்னப்பா... நான் யாருகிட்டயும் ஒதவி கேக்கலியே... போற வெசயத்தையும் ஒருத்தருகிட்டயும் சொல்லல.. அப்புறம் எப்புடி?

இந்த தோட்டத்துல உள்ள ஒருத்தருக்கு விருது கெடக்கதுனா நான் சும்மா இருப்பனா... நம்ம எளைஞர் கழகம்.கோயில் கமிட்டி. மாவட்டத் தலவர்மாருகிட்ட எல்லாம் சொல்லி ஏற்பாடு பண்ணியாச்சு.. நீங்க கவலப்படாம இருங்க.................

இரவு ஏழு மணியிருக்கும் அந்தத் தோட்டத்து இளைஞர்களெல்லாரும் சேர்ந்து கோபலன் வீட்டுக்கு வந்தனர். அண்ணே நாலைக்குக் காலைல கோவில் மண்டபத்திற்கு வந்திருங்க.... ஒங்களப் பாராட்டி செறப்பு செய்யப் போறோம்.....

அந்த வார்த்தையைக் கேட்ட கோபாலன் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வந்தது....... அவனது அம்மாவையும் அப்பாவையும் எண்ணி ஒரு கணம் சிந்தை கலங்கினான்.

என்னா அண்ணே ... நாங்கள்ளாம் ஒங்களுக்கு ஒதவி செய்யாம யாருக்கு செய்யப் போறோம்...? இளைஞர் கழகத்து மணியன் சொல்லிவிட்டு அனைவரையும் அழைத்துச் சென்றான்.

மறுநாள் அந்த கோவில் மண்டபத்தில் மினி சாகித்திய விழாவே நடந்தது. கோபாலன் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டான். பொற்கிழியாக ஐந்தாயிரம் ரூபா அந்த தோட்டத்து அனைத்துத் தரப்பினரின் நிதியாக வழங்கப்பட்டது.

மணியன் பேசினான்.... நம்ம அண்ணனுக்கு தலைவரோட பெயருல கெடக்கிற இந்த விருது ரொம்பப் பெரிசு.. அதனால நாங்க அண்ணன எங்க பிரெண்ட்ஸ் கொஞ்சபேரு சேர்ந்து வேன் பிடிச்சுக் கூட்டிக்கிட்டுப் போறோம்...... அண்ணன் திரும்பி வரயில எல்லாரும் ஆரத்தி தட்டெடுத்து அவருக்கு மரியாத செய்யனும்.. அந்தப் பொறுப்ப கோவில் கமிட்டி எடுத்துகிகட்டாங்க......................


இப்படி ஒரு ஊரே மகிழ்ச்சியால் திளைத்து கோபாலனை தாங்கு தாங்கென்று தாங்கி வழியனுப்பி வைத்தது.

எதிர்பார்த்தபடி கோபலனுக்கு இந்திய ஹைகமிசனரின் கரங்களிலிருந்து விருது, பொன்னாடை. பணமுடிச்சு என எல்லாவற்றையும் பெற்று மகிழ்வோடு வெளியே வந்தான.

அண்ணே...அண்ணே.... அந்த தபால்காரனின் குரல் வந்தது... என்னாப்பா....? கோபலன் கேட்கும் முன்னதாகவே அவன் சொன்னான்.... இநத்தியாவுல செம்மொழி மாநாட்டு வெலழாவுக்கு அனுப்புற அதிகாரி அவுருதாங்க... அவுர போய்க் கேட்டா நீங்களும் அந்த வெழாவுல ஒங்கட தெறமய காட்டலாம் அண்ணே.. வாங்க...வாங்க... அவன் கோபாலனிடமிருந்து பதிலை எதிர்பார்க்காமலே இழுத்துச் சென்றான்.....

ஐயா................. இவுரு கூத்துக் கலைஞரு......கோபாலு.... இப்ப வெழாவுல சாகித்திய விருது வாங்கினவரு..... இவர இந்தியாவுக்கு செம்மொழி மாநாட்டுக்கு அனுப்ப நீங்கதான் ஒதவி செய்யனும்......ஐயா!

அப்பிடியா..... சரி... நானும் யோசிச்சேன்... ஒங்கட பயோடட்டாவ அனுப்பி வைங்க... பாரக்கலாம்.. இது தான் என்னுட்டு அட்ரஸ்ஸு................

கோபாலன் மகிழ்ச்சியோடு வாங்கி வீடு வந்து கொம்பியுட்டர் கடைக்கிப் போயி பயோடட்டாவ அடிச்சி அனுப்பிவைத்தான். மாதம் ரெண்டாகியும் எந்தப் பதிலும் வரவில்லை.... கோபலன் யோசித்தே களைத்துப் போய் தபால்காரனின் பிடுங்கல் தாங்காமல் கலாசார அமைச்சுக்கே சென்றான்....

ஐயா... நான் மஸ்கெலியாவுல இருந்து வந்திருக்கிறேன்..... ஒங்கள சந்திக்கணும்.... என்ற போலனுடைய குரலைக் கேட்ட அதிகாரி ...
இருங்க பார்ப்போம்.......... ஒங்கட எப்ளிகேசனுக்கு என்னா நடந்திருக்குனு............

உள்ளே போன அதிகாரி.. ஏனையவர்களுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தார்.............. இத்தனைப் பாராட்டு... பத்திரிகைக் கட்டுரைகள்... விலாசம் உள்ள கோபாலனுக்கு வழங்க அந்த அதிகாரி மிகவும் பிரயத்தனப்பட்டார்....... ஆனால்..............

அந்த காரியாலயத்தினுள். கதைத்த அந்த விடயங்கள் அவனது மனதை வெகுவாகப் புண்படுத்தியது...............

தோட்டத்துல ஆடுற கலைஞற எல்லாம் இந்தியாவுக்கு அனுப்பி.............. நம்மட மானந் தாம் போகும்... அங்க .. பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வருவாங்க... இவுங்கள மாதிரி ஆளுங்கள அனுப்புனா நம்மட மரியாத. கௌரவம் எல்லாம் போயிடும்................ அதுனால நல்லா.படிச்ச யாரவது இருந்தா தேடிப்பிடிங்க..... மேடைக்கு அவுங்கதாங்க சரிவருவாங்க...................

கோபாலனும் தபால்காரனும் அந்த நல்ல அதிகாரியை திரும்பவும் சந்திக்காமலே விடைபெற்றுக் கொண்டார்கள். ஆடிய பாதமும் பாடிய வாயும் இனியும் அந்த தோட்டத்து மக்களுக்காக எல்லா கூத்துக்களையும் அரங்கேற்றும்........... எந்த நாகரீக மேடைக்காகவும் தான் இனி விலை போவதில்லை என்ற மனோதிடத்துடன் கோபாலன் அன்றாடம் உழைத்துக் களைத்துப் போன தொழிலாளர் உள்ளங்களுக்காக தனது கலைப்பணியைத் தொடர்ந்தான்................

முற்றும்.