Thursday, November 3, 2011

தெருக்கலைகள் ஏசி மண்டபத்தில்..........





மஸ்கெலியா பெ. லோகேஸ்வரன்


மஸ்கெலியா பகுதியிலுள்ள மொக்கா தோட்டம் எனும் அழகிய பசுமையான தேயிலைத் தோட்டம் களைகட்டியிருந்தது. தோட்டத்து பாட்டு வாத்தியார் மிகவும் சுறுசுறுப்பாக இங்கும் அங்குமாக தன்னந் தனியாக எல்லா விடங்களையும் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். மீண்டும் இருபது வயது குறைந்தது போல அவரது வேகம் குதிரையை மிஞ்சியிருந்தது.

அடுத்த நாள் அந்த கோவில் முற்றத்தில் மலையகக் கூத்துக்களின் சங்கமம் நிகழ்ச்சி அரங்கேற இருந்தது. தெருவிலே ஆடிப்பாடி மக்களை வசியப்படுத்தும் அந்தக் கலைகள் தற்போது ஓரே நாளில் ஓரே நேரத்தில் திறந்தவெளி அரங்கில் அமைக்கப்பட்ட மேடையில் அரங்கேறவிருக்கின்றது.

பாட்டு வாத்தியார் மிகவும் கவலைப்பட்டுக் கொள்வார். இப்போதெல்லாம் எங்கே இந்த சின்னஞ் சிறுசுகள் கூத்துக்களையும் கலைகளையும் மதிக்கிறார்கள்? எல்லாரும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கோடிக் கணக்கினில் பணத்தை சம்பாதிக்கும் நடிகர்களின் படங்களையும் இண்டர்நெட்டில் செட் செய்வதையுமே பொழுது போக்காகக் கொள்கின்றார்கள். இண்டர்நெட்டில் உள்ள நல்ல விடங்களைக் கூட அவர்களுக்குப் பார்க்க பொறுமையில்லை.

ஓரே இடத்தில் அப்படியே அமர்ந்து திண்பண்டங்களைச் சாப்பிட்டுக் கொண்டு உடலைப் பருத்துப் போக மட்டுமல்ல மரத்துப் போகவும் வைத்து டிவியையுயம் கம்பியூட்டரையும் கட்டிப் பிடித்துக் கொண்டு கண்களைக் களைத்துப் போகவிட்டு வாழும் மனிதர் கூட்டங்கள் என அடிக்கடி அவரது கூத்துக் கழக உறுப்பினர்களிடம் முறைப்பாடு செய்வதுண்டு.

அவரின் இந்த மின்சார உபகரணங்களுக்கான மாற்றுச் சிந்தனை தான் இந்த மலையகக் கூத்துக்களின் சங்கமம். நாளை இந்த ஐம்பவதாவது தள்ளாடும் வயதிலும் அரங்கேறும் மலையகக் கூத்துக்களின் சங்கமம்.

ஒரு ஆறேழு பெண் பிள்ளைகளுடன் பத்துப் பதினைந்து சிறுவர்கள்,இளைஞர்கள், பெரியவர் என அவரது கழக உறுப்பினர்கள் பாட்டு வாத்தியாரின் கொள்கைக்கு கொஞ்சம் ஒத்துப் போக் கூடியவர்கள்.

பொழுது சுறுசுறுப்பாய் விடிந்தது. நமது கழக உறுப்பினர்களும் வெகு சீக்கிரமாய் எழுந்து கோவில் முற்றத்தைக் கூட்டி அழகாக்கி வாழை மரம் கட்டி ஒலிபெருக்கி பொருத்தி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள்.

இரண்டு நாட்களாக கிரீடம், கை வலையம், மார்பு சட்டை என அனைத்தையும் செய்த உடற் களைப்பால் ரதி வேடமிட தயாராக இருந்த குமுதினி அசந்து போய் ஓரமாய் உட்கார்ந்திருந்தாள். மன்மதன் ரகு கொஞ்சம் வேகமாக அனைத்தையும் ஒட்டி முடிக்க பொன்னர் சங்கக் கூத்தில் நடிக்கும் பார்த்திபனை வேலை வாங்கிக் கொண்டிருந்தான்.

அர்ச்சுனன் தபசு கதாநாயகன் அவளுடைய ஒரு தலைக் காதலுக்கு உதவி செய்து கொண்டிருந்தான். வேப்பிலை நடனக்காரியுடன் ஒரு தலையாக ஓடும் பச்சைக் காதல். ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் வேப்ப மரத்தில் ஆஜானுபகவானாக விர்ரென்று ஏறிக் கொண்டிருந்தான்.

ஏய்... பார்த்தி... போதுமடா............. வேப்பிலை கையில் வைத்து ஆடத்தான்..... தைலம் செய்வதற்கு இல்லடா...... எறங்குடா..... கைய காலை ஒடச்சிக்காத..................... அவுங்க வருத்தப்படப் போறாங்க என்று நக்கலாகக் கத்தினான.; நாட்டார் பாடலின் பிரதான குரல் நாயகன் பத்மா. வேப்பிலை நடனக்காரி சுகுனா வெட்கித் தலை குணிந்தாள்.

மாலை ஐந்து மணிக்கு அந்த தோட்டத்து முக்கிய அதிதிகள் அனைவரும் சரியாக நேரத்திற்கு வந்து விட்டனர். ஆனால், பார்வையாளர்களாக பங்கு பெறும் பிள்ளைகளின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு ஐம்பது பேர் மட்டும் தான் வந்திருந்தார்கள்.



வழமையான குத்து விளக்கேற்றல் நிகழ்வோடு மேடை களைகட்டியிருந்தது. ஒலிபெருக்கி நிகழ்ச்சியை அந்த தோட்டத்து மக்கள் வீட்டிலிருந்து கேட்கும் வசதியை சோம்பேறிகளுக்குச் செய்து கொடுத்துக் கொண்டிருந்தது. பாட்டு வாத்தியார் களைத்துப் போயிருந்தார். மூச்சுவாங்கத் தொடங்கினாலும் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தார்.

அந்த சில்லென்ற குளிர்காற்று அவரது உடலுக்கு ஏற்காமல் தன்னையறிhமலே வீசிங் அவஸ்தை அவரை வாட்டியது. ஆனால், எப்படியும் இந்த நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என் திடசங்கற்பம் பூண்டிருந்தார். என்ன முயற்சி செய்தாலும் இறைவனது திருவிளையாடலில் தப்பிக்க முடியுமா என்ன?

பாட்டு வாத்தியார் அந்த மேடைக்குப் பின்னாலிருந்த மேசையில் நிரந்தரமாகவே கண்ணயர்ந்தார். வாத்தியாரய்யா... வாத்தியாரய்யா.... அடுத்த நிகழ்ச்சி ஆரம்பமாகப் போகுது... வாங்க..... கும்மியாட்டம் ரெடியாகிருச்சு.. அதற்கடுத்ததா கரகாட்டத்த போடுவோம் .... என்று அந்த அறிவிப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரமேஸ் கேட்டான்.

ஆனால் அந்தக் குரலைக் கேட்காமலேயே அந்த மேடையைப் பார்த்துக் கொண்டவாரே பாட்டு வாத்தியார்.... அவருடைய கண்களின் ஓரத்தில் ஒரு பக்கமாக..... வழியவந்த கண்ணீர்......................

அது ஆனந்தக் கண்ணீரா? இல்லை அழுகையா.................... அது அவருக்கே வெளிச்சம்............ ரமேஸ் தழுதழுத்த குரலில் அடுத்த நிகழ்ச்சியை அறிவித்து எல்லா நிகழ்ச்சியையும் முடித்தான்.. ரமேஸுக்கு குளிர் வந்திருச்சு................. குரல் மாறிருச்சுடா... அவனுடைய நண்பன் சொன்னதையும் அதனைப் பொருட்படுத்தவில்லை. இரவு ஒன்பது மணிக்கு நிகழ்ச்சி முடிவை எட்டியதும் அந்த ஒலிபெருக்கி பாட்டு வாத்தியாரின் மறைவையும் சோக கீதத்தையும் இசைத்தது.






ஊர் திரண்டது ஆயரக்க கணக்கினில் மக்கள் கூடினர். அந்த சங்கம மேடையில் பாட்டு வாத்தியார் அங்கவஸ்திரத்துடன் அழகாக கிடத்த வைக்கப்பட்டிருந்தார். அதிதிகளின் கையிலிருந'த மாலைகள் அவரது கழுத்தை நசுக்கிக் கொண்டிருந்தன. அந்த தோட்டத்து இளைஞர் அணி, கட்சி தலைவர்கள் என எல்லோரும் கூடி ஆக வேண்டிய வேலைகளைச் செய்து அதே மேடையில் அவருக்கு மரணத்தின் பின் துதிபாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொன்னாடை, மாலை என குவிந்து கிடந்தது.

ஊர் அழுதது. இப்படி ஒரு மனிதனை இனி பார்க்க முடியுமா? கூத்துக்காகவே வாழ்வை அர்ப்பனித் மனிதன்..... இனி யார் இப்படி ஒருவர் இந்த தோட்டத்திற்குக் கிடைக்கப் போகின்றார்கள்....? ஊர் கண்ணீர் அழுக புகழ் புராணம் பாடிக் கொண்டிருந்ததை அந்த பாட்டு வாத்தியார் கேட்கவா போகின்றார்? மலையகக் கூத்துக்களின் சங்கமம் திரட்டாத அந்த கூட்டம் அந்த பாட்டு வாத்தியாரின் மரணம் அழைப்பு இல்லாமலே கூட்டியிருந்தது. பாட்டுவாத்தியாரின் கனவுகளை அவரின் கழக உறுப்பினர்கள் அழகாகவே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அடுத்த அரங்க நிகழ்வில் டிக்கெட் வாங்க கியு வரிசையில் இளைய தலை முறையினர் கொழும்பு டவர் மண்டபத்தின் வாசலில் வெயிலையும் பொருட்படுத்தாது உள்ளே ஏசி மண்டபத்தில் பார்வையிட அவர்கள் காத்துக் கொண்டிருந்தனர்....

முற்றும்.