'பெட்ணி' பெருமாள்




மஸ்கெலியா பெ.லோகேஸ்வரன்

'என்னடா வாழ்க்கை?..................... எத்தனை நாளைக்குத் தான் இந்தப் 'பெட்ணி' சாமான்களுடன் அல்லாடுவது? ஒரு பெட்டிக் கட வச்சிப் பொழச்சிக்கலாமுனாலும் இருக்குறதே ஒரு முழங் கட்ட: இதுல எங்க நிக்கிறதுக்கு எடங் கெடக்கப் போவுத?'
பெருமாளின் அந்த வார்த்தைகள் நிறம் மாறாதவை.அவன் அப்போது தான் அந்த வாழமலைத் தோட்டத்திற்கு வந்து அந்த தேயிலைப் பக்கமாயுள்ள ரோட்டுக் கல்லில் அமர்ந்திருந்தான். காலை ஆறு மணிக்கெல்லாம் அந்த எமல்டன் தோட்டத்து ஏற்றத்தில் ஏறி கால்கடுக்கச் சென்றவன் ஒண்பது மணிக்கெல்லாம் சென்றடைந்துவிட்டான். அங்கு அந்த லயத்தில் ஒவ்வொரு வீடாக 'பெட்ணி' சாமான்களை விற்று பழைய கடனை வசூல் செய்து புதிய கடனை எழுதிக் கொண்டு வந்தான்.
'என்னா.............. பெருமாள்? அசந்து ஒக்காந்துட்ட? எமல்டன் பக்கமா போயி வந்துட்டியா? எப்புடி யாவாரம் நடந்துச்சா?' அந்த வழியாக வந்த துணிமணிகளைக் கொண்டு வந்த ஏகாம்பரம் வினவிக் கொண்டான்.
'எங்கப்பா................... யாவாரம்.........................' சலித்துக் கொண்ட பெருமாளின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஏகாம்பரத்திற்கு 'அப்படின்னா இன்னக்கி நம்ம யாவாரமும் இருக்காதா.................' மனதிற்குள் அவன் ரொம்பவே யோசித்தான்.
'அப்ப சரி.............. பெருமாள்.நான் எமல்டன் பக்கமா போயிட்டு வாறேன்.............................' விடைபெற்றான் ஏகாம்பரம்.
பெருமாள் வியர்த்துவடிந்த அந்த வியர்வைத் துளிகளை கையால் துடைத்துவிட்டு அருகிலிருந்த ஓடையில் கையை அலம்பி முகம் கழுவி உணவுக்காகக் கொண்டு வந்த அந்த ரொட்டித் துண்டையும் சம்பலையும் கடித்துக் கொண்டான்.அவனது உழைப்பிற்கும் பசிக்கும் அந்த ரொட்டித் துண்டுகள் தான் தாக்குப் பிடிக்கும்.
உணவை உண்டவன் மீண்டும் தலையில் 'பெட்ணி' சாமான்களை சுமந்தபடி வாழமலைத் தோட்டத்தில் தனது வியாபாரத்தை ஆரம்பித்தான்.
'பெட்ணி..............பெட்ணி..........................பெட்ணி...............................பெட்ணி.....................................'
கூவிக் கூவியே அவன் வாய் வரண்டு போயிருந்தது. என்றாலும் 'இன்றைக்குள் கொறஞ்சது ஒரு ரெண்டாயிரமாவது தேடனும்.அப்ப தான் மக வினோதாவின் ஸ்கொலசிப் பரிட்ச செமினாருக்கு..... டெஸ்ட்டுக்கு........ பொத்தகம் வாங்க................. டியுசன் காசு கட்ட......................... எல்லாத்துக்கும் சரி வரும்.ஆனா இந்த வாரம் சாப்பாட்டுக்கு......................................... எப்புடியாவது ஒத்தக்கடயில பேசி கொஞ்சம் கடன் வாங்குனா தான் சமாளிக்க முடியும்.......................' என்று மனம் போன போக்கிலே பெருமாள் புலம்பிக் கொண்டான்.
அந்த வாழமலைத் தோட்டத்து மக்கள் மிகவும் நல்லவர்கள். 'பெட்ணி' சாமான்களான வளையல்,செயின்,மோதிரம்,பொட்டு,கயிறு என ஒரு ரெண்டாயிரத்துக்கு மேலாக வாங்கி அவன் நெஞ்சில் பாலை வார்த்தார்கள்.எமல்டன் வியாபாரத்தில் தேடிய எட்டுநூறும் அவன் கையில் இருந்தது. இன்னும் எமல்டன் தோட்டம், முள்ளுகாமம் தோட்டம்,மறே தோட்டம் என அஞ்சாறு தோட்டம் இருக்கும். எப்புடியும் ரெண்டு..............மூனு...................தேடிப்புடலாம்.............................' பெருமாள் தைரியமானான். கடவுள் அவன் மீது கொஞ்சம் கருணையுடையவனாகவே இருந்தான்.
பொழுது புலர்ந்தது.எல்லா தோட்டங்களையும் பெருமாள் ஒரு கை பார்த்துவிட்டான்.அடுத்த நாள் அந்த ஸ்கூல் பட்டியலுக்கு பணம் செலுத்தியது போக எஞ்சியதில் கொஞ்சம் சாப்பாட்டுச் சாமான்களையும் வாங்கிக் கொண்டான். மகள் வினோதா வகுப்பில் நல்ல கெட்டிக்காரி. டவுனுப் புள்ளகளோடப் போட்டிப் போட்டு முன்னுக்கு வந்திருவா! அவளோட அப்பா நான் வாறேனோன.............. அந்த வகுப்பு டீச்சர்,பிரின்சிபல் எல்லோரும் ரொம்பச் சந்தோசமா கதப்பாங்க! எனக்கு வினோதாவ நெனச்சா ரொம்ம பெரும!..............' அவன் மார் தட்டிக் கொள்வதில் நியாயம் இருக்கிறது தானே!
ஸ்கொலசிப் பரீட்சையும் வந்தது. மகள் வினோதாவிற்கு காலையிலேயே அந்த கொலணியிலுள்ள மாரியம்மன் கோவிலிலே பூசை செய்து அன்று ஆட்டோவில் அவளுக்குப் பயணம். வினோதா மிக்க மகிழ்ச்சியானாள். எப்படியாவது பரீட்சையில் சித்யெய்து எனது அப்பா,அம்மாவிற்குப் பெருமை தேடித் தருவேன். அவள் திடசங்கற்பம் பூண்டள்.
பெட்ணி பெருமாள் தனது நிறைவேறப் போவதையெண்ணி தனது குடும்பத்தாருடன் தலச் சுற்றுலாச் சென்றது போல அந்த ஸ்கூலின் வெளியே அமர்ந்து மகளின் பரீட்சைக்காக வேண்டிக் கொண்டிருந்தான். பரீட்சை முடிந்து வெளியே வந்தாள் வினோதா. அவளது முகத்தில் இப்போதே சாதித்துவிடடதாய் ஒரு பேரானந்தம்! அள்ளியணைத்துக் கொண்டான பெருமாள்;.
மாதம் மூன்றாகியது.பெறுபேறும் வெளியாகியது. வினோதா அந்த ஸ்கூலில் மட்டுமல்ல.அந்த மாவட்டத்திலேயும் மாகாணத்திலேயே முதல் மாணவியாக வந்தாள். மத்திய மாகாணக் கல்வி அமைச்சு, அட்டன் கல்விக் காரியாலயம்,அமைச்சர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்கள் என பாராட்டு மழைகள் அவளுக்குக் குவிந்தன.பாடசாலையிலும் அவளுக்கு விசேட பாராட்டு விழா நடைபெற்றது.அவள் ஜப்பான் நாட்டிற்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்தது.
'பெட்ணி' பெருமாளுக்கு ஓரே சந்தோசம்! அவளை ஜப்பானுக்கு அனுப்புவதற்கு முன்னதாக ஜனாதிபதியின் அலரி மாளிகை விருந்திலும் கலந்து கொண்டான்.தினமும் லயன்கள், சிறிய கட்டங்களை மட்டும் பார்த்த அவனுக்கு அந்த மாளிகை பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது!.
மகள் வினோதாவுடன் இலங்கையிலுள்ள ஏழு மாணவர்கள் ஜப்பான் பயணமானார்கள். வினோதா ஜப்பான் சென்று இன்றுடன் ஏழு நாட்களாகியது. அவளிடமிருந்து அவனது செல்ல அப்பாவிற்கு ஒரு கடிதம் வந்தது.
அன்புள்ள அப்பாவிற்கு............................
எனது இந்தப் பயணத்தில் பெரு மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன்.நமது வாழ்க்கையில் பிளேனைப் பற்றி படிக்க மட்டுந் தான் முடியும் என்று நினைத்தேன்.ஆனால் இவ்வளவு சீக்கிரமாக அதில் பயணம் செய்ய முடியும் என நினைக்கவில்லை.உலக வரைபடத்தில் ஜப்பானை கையால் அடையாளம் காட்டிய எனக்கு இன்று அந்த நாட்டில் மக்களையும் மண்ணையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.
அப்பப்பா. என்ன ஆச்சரியம்... எத்தனை உயர்ந்த கட்டடங்கள்......... எவ்வளவு அழகான இடங்கள்! விந்தை மிகு தொழிற்சாலைகள்! உழைக்கும் மக்கள்!சுறுசுறுப்பு என்றால் அதனை இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்! எவ்வளவு தூய்மை! நம் ஊரில் தோட்ப் புறங்களில் நடக்க முடியாமல் பாதைகளிலெல்லாம் அசிங்கம் செய்கிறோம். ஆனால் இவர்கள் எச்சில் துப்புவதைக் கூட எவ்வளவு நாகரிகமாகச் செய்கிறார்கள்?
அப்பா...... இந்த ஊருக்கு உங்களையும் அழைத்து வரமுடியாமல் போனதையிட்டு மிகவும் மனம் வருந்துகின்றேன்.இங்கு சுவரில் உள்ள நீளமான பெட்டியில் குழுகுழுக் காற்று ஜில்லென்று வீசுகிறது! நாம் அங்கு இயற்கையாக எவ்வளவு சுத்தமான காற்றைச் சுhவசிக்கின்றோம். இங் கு எல்லாம் தொழில் நுட்பத்தில் தான் பெருகிறார்கள். எனக்கு ஒரு ஆசையிருக்கிறது அப்பா.............. ஒரு நாள் நான் நன்றாகப் படித்து இன்னும் உயரிய இலட்சியங்களுக்காக கடுமையமாக உழைப்பேன்.அதற்கு நீங்களும் அம்மாவும் நிச்யம் துணையிருப்பீர்கள் என நினைக்கின்றேன். காலம் வெகு தொலைவில் இல்லை. நிச்சயம் அது நம்மைக் கை கூடி வரும். அப்போது ஜப்பான் என்ன? எத்தனையோ நாட்டிற்கு உங்களையும் அழைத்துச் செல்வேன்.
இப்படிக்குச் செல்ல மகள.;
வினோதா.
கடிதம் வாசித்த பெருமாள் அந்தப் 'பெட்ணி' சாமான் பெட்டியையே பார்த்துக் கொண்டிருந்தான். அது அவனுக்குத் தொழிலாகத் தெரியவில்லை. இந்தக் கருப்புசாமி,முனியாண்டி சாமி,வாட்டுமுனி சாமியைப் போல இன்னொரு சிறு தெய்வமாகவே பட்டது. அவன் கண்களில் உதிர்த்த ஆனந்தக் கண்ணீருக்கு விலை அவனது உழைப்பும் வினோதாவின் விடாமுயற்சியும் தான் என்றால் நாம்.......... .என்ன.......................... இல்லையென்றா சொல்லப் போகிறோம்............................
முற்றும்.