Monday, March 26, 2012

அழகிய(ல்) உலகம்




மஸ்கெலியா பெ.லோகேஸ்வரன்

உலகத்தை ஆண்டவன் எதற்காகப் படைத்திருப்பான் என்று யாரும் இதுவரை யோசித்திருப்பார்களோ தெரியவில்லை. ஒருவேளை அப்படி யோசித்திருந்தால் இந்த உலகத்தில் இன்று நாம் காணும் அடிமைத்தனம், அழிவுப்பாதை, அணுப்புரட்சி என்று எங்கும் நமக்காகப் படைக்கப்பட்டட இந்த அழகிய உலகம் அறிவுப் பாதையிலிருந்து அழிவுப் பாதைக்கு சென்றிருக்காது என்று நம்ப முடியும். பாருங்கள்! வியாபித்த இந்த உலகில் தான் எத்தனை பறந்த கடல்!அமைதியான மலைகள்!பசுமையான புற் தரைகள்! ஓடும் நீரோடைகள்! பாடும் பறவைகள் என கண்களுக்கு விருந்தளிக்கும் படைப்புகள்?

இறைவன் படைத்த இந்த உலகத்தை ஓருவேளை 'யாரும் அனுபவிக்க முடியாது' என்ற கட்டளையுடன் படைத்திருந்தால் நமது மனித குலத்தின் கதி என்னவாகியிருக்கும்? ஏன் இந்த வனஜீவராசிகளின் கதி தான் என்னவாகியிருக்கும்? அழகான உலகத்தைப் படைத்த இறைவன் உயிர் ஜீவராசிகளைப் படைக்கமலிருந்தால் இதனை யார் அனுபவித்திருப்பார்கள்? யாருக்கும் பயன்படாமலிருப்பதை விட உயிர்களுக்குப் பயன்படட்டுமே என்ற இறைவனின் நினைப்பபை தகர்த்தெறிந்த நாம் எங்கே பயணித்துக் கொண்டிருக்கின்றோம்?

அழகான உலகம் அழிய நாம் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோமே! இந்த உண்மை மனித அறிவியலின் உச்சமாய் கருதப்பட்டாலும் நாம் நம் சந்ததிக்கான வரட்சியான அழிவுப் பாதையை மட்டும் காட்டிவிட்டு கவலையில்லாமல் கண்ணயர்ந்து போய்விடப் போகிறோம் என்றாலும் எமக்கு எதனைப் பற்றியும் எந்தக் கவலையும் இல்லை! உலகில் இன்று வல்லமை பற்றி பேசுவோர் பலர் வானத்திலும் வாயினாலும் சவடால் காட்டி நிற்கின்றனர். அழிவுப் பாதைக்கு ஆயுதங்களை வான் வழியாகத் தூவும் மனிதனும் நம்மிடையே இருக்கின்றான். அபத்தமான வார்த்தைகளை வாய்க்கொழுப்பால் தூவும் மனிதனும் நம்மிடையே இருக்கின்றான். இந்த இருவரில் அறிவியலில் வல்லமையுள்ளவனும் அகங்காரத்தில் வல்லமையுள்ளவனும் மொத்தத்தில் மனித குலத்தின் எதிரிகள்! வக்கரத் தன்மையுள்ளவர்கள்!

உலகில் தூவுவதற்கு அழகான பொருள் வண்ணப் பூக்கள் தான்! அதற்கடுத்ததாக அழகான வார்த்தைகள் தான்! பூக்களைத் தூவிப் பாருங்கள்! அழகான நறுமனமும் கண்களுக்குக் கவர்ச்சி தரும் பூக்களுக்கு நிகரான அழகியல் ஸ்பரிசம் உள்ள படைப்பு, இந்த உலகில் வேறு என்ன இருக்கின்றது? இது இயற்கையால் நமக்குக் கிடைத்த அரிய பொக்கிசம்! ஆனால், மனுகுல வார்த்தைகள்? அது எவ்வளவு அழகானதோ அந்தளவிற்கு அபத்தமானது! சொல் என்பது பிரயோகிக்கும் மனிதனுக்கும் கேட்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்புகளில் தங்கியுள்ளது! அது அழகானதாகவோ ஆபத்தானதாகவோ
இருக்கலாம்.


இந்த அழகான உலகத்தில் நாம் எப்படி மனித மனங்களை வெல்லப் போகின்றோம் என்பதே இன்றைய அருகிவரும் மனிதநேயமுள்ள உயிர்களுக்குத் தேவையானதாக இருக்கின்றது. பரந்த இந்த உலகில் இந்தச் சின்னஞ்சிறிய தீவு! இதற்குள் எதற்கு இத்தனை பிளவுகளை நாம் தெரிந்தோ தெரியாமலோ விதைத்திருக்கின்றோம்? யார் விதைத்தார்கள்? எதற்காக விதைத்தார்கள்? அதன் விளைவுகள் என்ன என்பதை காலத்தின் கண்ணாடி நமக்கு உணர்த்தியிருக்கின்றது! அது வரலாறு என்றோ கறைபடிந்த அத்தியாயம் என்றோ இரு குலத்தாரும் எடுத்துரைத்தாலும் உண்மையில் உலகத்தில் மனித குலத்தின் அழகான: அமைதியான வசந்த வாழ்க்கையில் தோற்றுப் போனப் பக்கங்களாகவே அதனைப் பார்க்க முடியும்!

மானுடம் எதனை நோக்கிப் பயணிக்கின்றது என்பதை அதற்கென தனியான ஆய்வுக் களமோ பல்கலைக்கழகமோ வைத்து பட்டப்படிப்போ ஆய்வோ செய்ய வேண்டிய காலம் கனிந்தால் அது நமது நேர காலத்தை வீண் விரயமாக்குவதாகத்தானே அமையும்! மானுட குலப் பாதை நேர்த்தியானதாகவும் நியாயமானதாகவும் உண்மையானதாகவும் கட்டியெழுப்ப மதம், மொழி. குலம், இனம் என்பனவற்றுக்கப்பால் ஒரு அழகான உலகத்தை கட்டியெழுப்ப எதனை ஆயுதமாக்க எடுக்க வேண்டும்? அன்பை பலர் உலகத்தில் ஆயுதமாக எடுத்து வெற்றிப் பாதை சமைத்து விடிவையும் பெற்றுக்கொடுத்திருக்கும் சரித்திரத்தை நாம் வாசித்தறிந்திருக்கின்றோம்.

அன்பு வழியால் வந்து வெற்றிபெற்ற வரலாறுகளைக் அனுபவித்த கற்ற மனிதன் கூட இன்று உலகில் தனியாக்கப்பட்டும் தோற்றுப் போயும் இருக்கின்றான். ஆயுதமும் போருமே இலக்கணம் என்று வாழ்ந்த மனிதனும் கூட எதனையும் இறுதியில் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் சாவைத் தழுவிக் கொண்டிருக்கின்றான். அப்படியானால் இன்றைய உலக அழிவை தடுத்து நிறுத்தவும் ஜீவராசிகள் வாழும் அழகான உலகத்தை எப்படித் தான் கட்டியெழுப்ப முடியும்? இந்த வினாவுக்குத் தான் இன்றைய ஒவ்வொரு அறிஞனும் அறிவியலாளனும் தேட வேண்டிய விடை!

உலகம் அழகானது! எல்லையிருந்தாலும் மனிதனுக்கான அனைத்தையும் தரும் வல்லமையுள்ளது! பசுமையானது! கவர்ச்சிகரமானது! இந்த உலகில் எத்தனை நாடுகள் இருந்தாலும் நம் இலங்கையின் அழகிற்கும் வசீகரத்திற்கும் ஈடுஇணை உண்டோ? ஒரு நாட்டில் எல்லா கால குணங்களையும் சுமார் முப்பது கிலோமீற்றர் தூரத்திற்குள் அனுபவித்துக் கொள்ள முடியும் என்றால் அது நம் இலங்கையில் தானே முடியும்? நுவரெலியா சென்றால் குளிரையும் கண்டி சென்றால் மிதமான காலநிலையையும் அநுராதபுரம் சென்றால் வெப்பமான காலநிலையையும் அனுபவிக்க முடியும். கடற்கரையைக் காணச் செல்ல வேண்டு மென்றால் கொழும்பிற்கோ,திருகோணமலைக்கோ, மட்டக்களப்பிற்கோ செல்ல எவ்ளவு மணித்தியாலம் தான் பிடிக்கப் போகின்றது?

இந்த அழகிய இலங்கையைக் கட்டியெழுப்ப ஒரு அழகியல் உலகம் தேவை தானே! நாம் இந்த உலகில் உள்ள எல்லா பொருட்களையும் இயற்கையையும் பார்க்கின்றோம்! இரசிக்கின்றோம்!அனுபவிக்கின்றோம்! ஆனால், அதனை நேசிக்கின்றோமா? முதலில் மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த நேசித்தலும் இரசித்தலும் அழகியல் உணர்வுகள் சார்ந்தவை! இன்றைய இளம் பராயமாகிய மாணவ உலகத்திலிருந்து அழகியல் உலகம் கட்டியெழுப்பப்படல் வேண்டும். அதற்கு பாடத்திட்டமும் பாடசாலையும் கடினமாக உழைக்க வேண்டும். அதிகாரிகளாலும் ஆசிரியர்களாலும் மனித குல ஆர்வலர்களில் அழகியல்வாதிகளிடமிருந்தும் அவை உரிய முறையில் இளைய சமூகத்திற்குக் கிடைக்க வேண்டும்.

உயிர்களுடன் உறவாட இந்த அழகியல் அம்சமே உயரிய செல்வாக்கைச் செலுத்த முடியும். அது மனித உயிராக இருந்தாலும் சரி, இயற்கைiயாக இருந்தாலும் சரி அழகியல் உணர்வுகள் மிக ஆழமாகக் கட்டி எழுப்பப்படல் வேண்டும்! அழகியல் உணர்வுகளை வெறுமனே தொலைக்காட்சி, சினிமா உள்ளிட்ட அறிவியல் உபகரணங்களால் காட்சிப்படுத்துவதுமட்டுமின்றி முயற்சியுடன் கூடிய அழகியல் உணர்வுகளாகக் கட்டி எழுப்பப்படல் வேண்டும். வரைதல்.புனைதல்,நடனம்.சங்கீதம்,நாடகம்,நாட்டியம்,தோட்டம் செய்தல் உட்பட வாழ்வியல் கலைகள் அழகியல் அம்சங்களாகக் கட்டி எழுப்பப்படுவதன் மூலம் நமது இலங்கையை அழகியல் இலங்கையாக கட்டி எழுப்ப முடியும்!


வன்மமற்ற, அறிவியல் சார்ந்த ஆரோக்கியமான இலங்கையைக் கட்டி எழுப்பவும் உயிர்களை சமமானதாக மதிக்கவும் நேசிக்கவும் அழகியல் உணர்வுகள் தான் அடிப்படை இலக்கணமாக அமையும். இந்த அழகியலை உரிய முறையில் கட்டி எழுப்பி உலகில் நமது இலங்கை தலைநிமிர வழிவகை செய்ய கல்வித்திட்டத்தில் புதிய எண்ணக்கரு விதைக்கப்படுவது காலத்தின் அவசியமாகும்! ஆதற்கு அறிஞர்களதும் அரசியல்வாதிகளதும் கல்விமான்களதும் பாதை தெளிவானதாக இருக்க வேண்டும். வுpதைத்தால் நிச்சயம் அறுவடை ஆரோக்கியமானதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

எய்தியது.