மாடி வீடு கிடைக்குமா?


பெரியசாமிபிள்ளை லோகேஸ்வரன்


மேட்டு லயத்தில் அவசர அவசரமாக படுக்கைப் பாய்களைச் சுருட்டிக் கொண்டு தோட்டத்துக் காணியின் பக்கமாக அந்தக் குடும்பங்கள் விரைந்தோடிக் கொண்டிருந்தன. வானம் எங்கும் புகை மண்டலம் இஸ்டத்துக்குப் பரவியிருந்தது. எரிமலையின் நினைவுகளை அப் பிரதேசம் பயமுறுத்திக்கொண்டிருந்தது.

அம்மா.. அம்மா................ அந்தப் பிஞ்சின் அலறல் சத்தம் கேட்டு அயிலாண்டம், ஐயோ! காப்பாத்துங்க...... காப்பாத்துங்க..................... என்று கதறியது கூட அந்த மக்களின் இரைச்சலில் எவரின் காதுக்கும் எட்டவில்லை.

ராகினி ஐந்தாந் தரத்தில் படிக்கும் ஒரு தோட்டத்துப் பாடசாலை மாணவி. அந்த வகுப்பில் இயற்கையிலேயே படிப்பதில் மட்டுமல்ல பாடுவதிலும் ஆடுவதிலும் என தன் பெயரை அப் பாடசாலையில் நன்றாகவே பதிவு செய்த ஒரு கெட்டிக்காரி!

அந்த ராகினி... இப்போது இப்படி அலறுகிறாளே.... அந்தத் தாய் மட்டுமல்ல..... அந்த தேயிலைத் தோட்டமே மிகவும் வேதனையோடும் முயற்சியோடும் தேடினார்கள்............... ஆனால், ராகினி..................................

இந்தத் தீயில்..................... வரும் புகையில்;....................... அல்லோலகல்லோளப்படும் மக்கள் கூட்டத்தில்............. எப்படி? அவளிருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பது? மூச்சுத்திணறிய அந்த சூழலில் தோட்டத்து இளைஞர்கள் தண்ணீரை............... வாறியிறைத்து..................... தீயை அணைத்து.................. விடியற்காலையாகிவிட்டது.

சவக்காடு புதிய இடத்தில் எழுந்திருந்தது. எந்த தோட்ட நிர்வாகமும் அரசாங்கமும் அனுமதி வழங்காமலே சுமார் இரண்டு மணித்தியாலத்திற்குள் அந்தத் தோட்டத்திற்கு ஒரு புதிய சவக்காடு... வெள்ளோட்டத்திற்காக.... எரிப்புச் செலவின்றி ஊர்க் கிழவி இரண்டு பேரும் நொண்டிக் கிழவனும் ஊர் மக்கள் முன்னிலையில் யாருக்காகவோ உடன்கட்டை ஏறியிருந்தார்கள்.

இப்போதும் வெந்தும் வேகாத நிலையில் இன்னும் எத்தனை உயிர்கள் இருக்குமோ தெரியாது... அந்தத் தோட்டத்து தீ எழுந்த பிரதேசத்தை கண்களால் ஆய்வு செய்த விருந்தினர் கூட்டம் கதை அளந்து கொண்டிருந்தது. எங்கும் இளைஞர் நற் பணி மன்றங்கள், தொழிற்சங்கங்கள், மீடியா, உதவுவோர் என எல்லாமே அந்தத் தோட்டத்தை ஒரு நாளைக்கு தத்து எடுத்திருந்தன.

இரண்டு நாள் கழித்தால் எல்லாரையும் நாம் வலைபோட்டுத் தான் தேட வேண்டும்.... என்ற நாயகியம்மாளின் செய்தியை அங்கிருந்த மகளிர் சங்கம் ஆமோதித்துக் கொண்டிருந்தது.

பாணும் பருப்பும் தேநீரும் என யாரும் கேட்காமலே ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. தீயைப் பார்க்க வந்தவர்கள் ஆசுவாசமாக அமர்ந்து தீ எழுந்த வரலாறை சுயசரிதம் செய்து கொண்டு தேநீரைப் பருகி புதிய கதை எழுதிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால்... அந்த ................ மேட்டு லயத்தின் அலறல்களும் அவலங்களும் மனதிலிருந்து மறையாமல்................ அந்தத் தோட்டமே.......................... அவதியுற்றுக் கொண்டிருந்தது. எந்தக் குஞ்சு குலவானும் ஒரு துண்டுப் பானைக் கூட வாயில் வைக்கவில்லை. பித்துப் பிடித்த அந்த உள்ளங்கள் தங்களுடைய தாயுடனும் தந்தையுடனும் வேட்டிக்குள்ளும் சாரிக்குள்ளும் முக்கி முணகிப் புதைந்து போயிருந்தன.







அந்தப் பயம்... அந்த கொடூரம் இன்னும் அவர்கள் மனதிலிருந்து கொஞ்சமும் அகலவில்லை.


ராகினி..................... அந்த பிள்ளை.... அந்த ஊர் மக்கள் மனதினில் இன்னமும் தேடிக்கொண்டிருந்தன...... விடயத்தைக் கேள்விப்பட்ட அவள் ஸ்கூல் பிரின்சிபல், வாத்தியார்மாறெல்லாம் ராகினியைப் பற்றி விலாவாரியாகப் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்தார்கள்.....................

ஆனால் அவளின் சப்தமோ................ கூக்குரலோ அந்த நடுநிசியிலேயே அடங்கிப் போயிருந்தது யாருக்குத் தெரியும்....................?

மேட்டு லயத்தின் அருகில் உள்ள ஒரு பள்ளம்................ அங்கே தான்.......... ராகினி அமைதியாய்..........................

ஐயோ! ஐயோ! இங்க வந்துப் பாருங்க................................. ராகினி................ ராகினி....................

ஊர் முழுக்க ஒரு நொடியில் திரண்டிருந்தது. அந்தப் பள்ளத்தை தோட்டத்து சுப்பர்மேன்கள் உயிரைப் பணயம் வைத்து தாவிக் குதித்து இறங்கி...............

ராகினி......................... இன்னும் உயிருடன் தான் இருக்கின்றாள்................................ என்ற செய்தியைக் கேட்டு அந்த தோட்டம் இழப்புகளை மறந்து ஒரு உயிர் பிழைத்த சந்தோசத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது.......................

எப்படி.... ராகினி.. இந்தப் பள்ளத்தில்............................... அந்த உண்மை ரகசியம் என்ன............................

ஆம்! நாளை வரும் ஆசிரியர் தினத்திற்காக அவள் பள்ளி ஆசிரியர்களுக்காக வாங்கிய அந்தப் பேனாக்களுடன்..........................

பேனாவைக் காப்பாற்றி பள்ளத்தில் விழுந்த அந்த ராகினி................................
ஆசிரியர்கள் அவளது அன்பை நினைத்துக்; கண்ணீர் வடித்தார்கள்........................... ராகினியின் செயல் தோட்டத்தையே ஆச்சரியப்பட வைத்தது.

தோட்டத்திற்கு வந்திருந்த அரசியல்வாதி சொன்னார்.... இந்தப் புள்ளக்கி இந்த வாத்தியார்மாறெல்லாம் என்னா செய்யப் போறாங்க..... இதற்கு கைம்மாறு ஏது?

சொந்த அப்பா, அம்மாவை மறந்து ஆசிரியர்களுக்காக வாங்கிய பேனா... அந்தப் பிஞ்சின் கையில் எவ்வித காயமுமின்றி.... ஆனால் நினைவிழந்த அந்த ராகினி................... இனி அவள் வாழ்க்கை..... ஆசிரியர்கள் வைத்த கண் வாங்காமல் அவளைத் தங்கள் மடியில் சாய்த்திருந்தார்கள்................

வைத்தியசாலையில் ராகினி அடிக்கடி அந்தப் பள்ளிக் கூட ஆசிரியர்களால் போய் நலம் விசாரிக்கப்பட்டாள்.. அவள் ஒரு நாள் கண் விழித்தாள்... கண்கள் பல நாள் தூக்கத்திற்குப் பிறகு........................ கூசிய கண்களில் இருந்து மெல்லமாக................. கண்ணைத் திறந்து ......................

அம்மா................... என்னுட்டு ஸ்கூல் பேக்ல................ டீச்சருக்கு நான் செய்த கார்டு இருக்கு....................... இதோ.......... இந்தப் பேனா எல்லாம் இருக்கு............................. டீச்சர்ஸ் டேக்கு.................................. கொடுக்கனும்............................

ராகினி தன் கைப்பட செய்த வாழ்த்து அட்டையையும் அந்தப் பேனையையும் நினைத்துக் கொண்டிருந்தாள்.......................




அருகிலிருந்த ஆசிரிய உள்ளங்கள்...................... அப்படியே ........ ராகினியை கட்டி அணைத்து..............................

இந்தாங்க... டீச்சர்....................... என்னுட்டு டீச்ர்ஸ் டே வாழ்த்துக்கள்.............................

அந்த ஆசிரியர்களால் அழமுடியவில்லை....................... தோட்டம் மெய்சிலிர்த்துப் போனது................. அவள் இரண்டு மூன்று தினங்களுக்குள் வீட்டிற்கு .................. மன்னிக்வும்..................... அந்தப் புதிய கொட்டிலுக்குத் திரும்பினாள்.............

தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டன. எட்டடி காம்பரா வாழ்க்கை பறி போய் நட்டநடுவில் ஊண்றிய கொடிக் கம்பத்திலிருந்து இழுத்துக் கட்டப்பட்ட கூடாரத்திற்குள் இரண்டு இரண்டு குடும்பங்களாக இரண்டு வாரத்திற்கு மட்டும்.................... என்ற அறிவிப்புடன் குடியேற்றப்பட்டன.

வருடம் ஒன்றாகிவிட்டது.. புதிய மாடி வீடு கட்டித் தரப்பட இருப்பதால் தான் இந்த சுணக்கம். அந்தத் தோட்டத்தின் சந்தாவைப் பெறும் அரசியல் தொழிற் சங்கங்கள் கருத்துத் தெரிவித்தன.

அப்பா............. மாடி வீடு கிடைக்குமா? ஆமாம்மா................ நம்ம தலைவரு சொல்லிட்டாரு..... ரெண்டு வருசமானாலும் ஆகட்டும்.............நமக்கு மாடி வீடு கிடைக்கணும்......................

ராகினி சந்தோசப்பட்டாள். அவளுக்கு மாடி வீட்டுக் கனவு மனதெல்லாம் நிறைந்திருந்தது. மாடி வீட்டில்........................ அப்பா. அம்மாவுக்கொரு அறை........... தம்பிக்கொரு அறை.............. ஆ.............. எனக்கும் ஒரு அறை............................. அந்த அறை முழுக்க............... முழுக்க............ எனது புத்தகங்கள்,................... உடைகள்............... என்னுடைய டீச்சர் படம்..... அப்புறமா எங்க ஸ்கூலு........................... நவராத்திரி படம்...... நான் பரிசு வாங்கின படம்........... எங்க பிரின்சிபல் படம் எல்லாம் போட்டு........................

அது தான் எல்லாம் எரிஞ்சுப் போச்சே... நினைக்கும் போதே அவளுக்கு கண்ணீர் வந்தது.. ஆனால்.............. வரப்போவது மாடிவீடு............................. ராகினி சந்தோசத்தால் கனவு கண்டாள்......................... அவளது அறை இப்போது சுவர்க்கபுரியாக தெரிந்தது.......... அவளுடைய மாடிவீட்டு அறையில் இப்போது ராகினி படிக்கும் மேசையில் புத்தகக் கட்டுகளுடன் மேசை மின்விளக்கைப் போட்டு அந்த வெளிச்சத்தில் ஓ.எல் பரீட்சைக்காக படித்துக் கொண்டிருந்தாள். வகுப்பு டீச்சர்,பிரின்சிபல் எல்லாரும் வாங்கிக் கொடுத்த பாஸ்பேப்பர் புக்கெல்லாம் மேசை மீது நிறைந்து கிடந்தது.......................

திடீரென்று ஓவென்று பெய்த மழையில் அந்தக் கொட்டில் துவாரங்களில் தண்ணீர் கொட்டத் தொடங்கியது..................... ராகினியின் முகத்தில் விழுந்த நீர் அவளது கண்ணீரை கழுவியிருந்தது..........

திடுக்கிட்டு எழுந்த ராகினி................... ஐயோ................... புத்தகம்....புத்தகம்........................ டீச்சர், பிரின்சிபல் வாங்கிக் கொடுத்த பாஸ்பேப்பர் புக்கெல்லாம் போச்சு ....................... அம்மா நமக்கு எப்பம்மா இந்த மாடி வீடு வரும்..............................

அம்மா......... மாடி வீடு நமக்கு வேணாம்மா....... அந்தப் பழைய எட்டடி லயன் காம்பராவ செஞ்சி பழையபடி அப்பா. தம்பி நானு எல்லாம் சந்தோசமா இருக்க முடியுமா............... அம்மா............ டெஸ்ட்டுக்கு இன்னும் ஒரு மாசந்தாம்மா
இருக்கு............... அதுக்குள்ள.................... முடியுமா.............................

ராகினி இப்போது நிஜத்துக்காக யோசிக்கத் தொடங்கிவிட்டாள்..... அவள் மாயையில்லாத உலகத்திற்குத் தன்னைத் தயார்படுத்திவிட்டாள்.......................

முற்றும்.