மலைக்குள் கவிதைபாடி
மாயவலைக்குள் சிக்கித் தவிக்கும்
என்னருமைத் தாய் உறவுகள்!
தொப்புள் கொடியோ
தூண்டாமணிவிளக்கோ
எறிவதும் வெட்டிக் கொள்வதும்
நமது உடன்பிறப்புகள் தான்!
இன்னுமொரு நூற்றாண்டு
இல்லாமை ஒழிதல் வேண்டுமடா
என்றால் நம் சின்னப்பிள்ளை கூட
காறி உமிழும் கசந்த
வாந்திச் சிதறல்கள்!
பசுமையாய் பாரை படைக்கும்
என் மனிதக் கடவுள்கள்!
பானைக்குள் வரண்டு போகும்
சோற்றுப் பருக்கைகள்!
இருப்பதையும் தம்பிக்குக் கொடுத்துவிட்டு
அக்காள் தலையணைக்குள் எச்சில்
வரண்டுபோக தலையணை கூட
இரவில் காயும்!
பகல் ரொட்டித் துண்டு
இரவுச் சோறு என எல்லாமே
சமைக்க முடியாமல் அடுப்பளைக்குள்
ஓய்ந்து போகும் என் அம்மா!
அப்பாவுக்கு சாயச் விவப்புடன்
சீனிக்கு ஒரு ரொட்டித் துண்டு!
காலம் ஓடும்! எங்கள் பசிக்
கனவும் மாறும் என்று சொல்லியே
ஆண்டு இருநூறு கடந்;தாயிற்று!
உற்றவனும் கொற்றவனும்
உறங்கும் பஞ்சு மெத்தைகள்!
எங்கள் அறிப்புச் சொப்பணங்களுக்கு
அழியாப் பாய்கள்!
கந்தலும் உடையும் என்றால்
கிழிந்த பாயினுள் வரும்
கடுங் குளிரின் ஊடல்கள்!
மலையில் அட்டையும்
மடியில் சுமையயும்
தலையில் பாரமும்
ஒய்யாரமாயிருந்தாலும்
எங்கள் பிள்ளைகளும்
கல்விச்சாலை நோக்கிய பயணம்
இன்னொரு கூடைக் கனவுகளுடன்
வலம் வரும் நம்பிக்கைத் துளிர்கள்!
எங்கள் மலைகள் மட்;டுமல்ல
எங்கள் கனவுகளும் வானம் எட்டும்!
நாளை என்ற சொல்லே வேண்டாம்
எங்கள் வாழ்க்கை இன்றே தொடங்கட்டும்
உழைக்கும் வேர் ஓடிய கரங்களுக்கு
நம்பிக்கை வேர்கள் ஓட
அசுத்தக்காற்றுகள் வழிவிடட்டும்!
இயற்கை சுத்தக் காற்றுக்கள் எங்களை
ஈரமாக்கிக் கொண்டிருந்தாலும்
மனித நச்சுக்காற்றுக்கள் இன்னொரு
இந்திய போபாலை நினைவூட்டுகிறதே!
என்ன பாவஞ் செய்தோம்
இயற்கை அன்னையே! ஏன்
இந்தக் கொடுமை?
வாழ்வை வளமாக்க ஒரு
கூடைக் கனவுகளுடன்
தேசபக்தர்களின் வயிறுக்கான
போராட்டம்!
ஒரு எடுத்தாளப்பட வேண்டிய
வேதனப் போராட்டமல்லவா?
தலைவா ஒரு முறை இந்த
லயத்துக் காம்பறாக்களுக்குள்
ஒரே ஒரு நாளைக்கு உறங்கிப்பார்!
உனக்கும் பசிக்கும்........................!
உனக்குப் பசித்தால் எங்கள் வீட்டு
சாயச்சிவப்பும் எஞ்சிய ரொட்டித் துண்டும்
உனக்கும் கிடைக்கும்......
வருவாயா என் தலைவா?
No comments:
Post a Comment