Friday, October 7, 2011

குப்பிலாம்பும் குடிலும்...................








- பெரியசாமி பிள்ளை லோகேஸ்வரன் -


அந்தத் தோட்டம் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தது. எங்கும் நிசப்பதம். ஆள் அரவம் இல்லாத ஒரு அமைதி! சில்லென்ற காற்று மட்டும் நம் உடலின் தோளைத் துளைத்துக் கொண்டு உள்ளே செல்லும் ஒரு அலாதியான இன்பம் கலந்த துன்பம்.....

அந்த மண் மேட்டிலுள்ள வங்கியில் ( நிலப்பகுதி) ஒரு குடில். நாலா புறமும் இயற்கையை அப்படியே ஆராய்ச்சிக்காக வாரி வழங்கும் ஒரு குடில். அந்தக் குடிலுக்கென்ன ஒரு முப்பது அல்லது முப்பத்தைந்து வயதிருக்கும்.........................

மண்னெண்ணெய் லாம்பு கொஞ்சம் கண் சிமிட்டி அவ்வப்போது காற்றின் திசையை கப்பலோட்டிக்குக் காட்டுவதைப் போல காற்றோடு சல்லாபித்துக் கொண்டு இருக்கும்..... ஊர் உறங்கினாலும் அந்தக் குடிசையில் இரவு நேரங்களிலும் குப்பிலாம்பு தூங்காமல் விழித்துக் கொண்டிருக்கும். அந்த லாம்புக்கொரு ஆசை! ஆம், எப்படியாவது இந்தத் தோட்டத்தில்...... இல்லை... இல்லை...... இந்த மலையகத்தில் ஏ.எல் வரை படித்த ஒருத்தரை உருவாக்கிவிட வேண்டும் என்று அது ஒற்றைக் காலில் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தது.

வெள்ளைக்காரன் கொண்டு வந்து இங்கு விட்டுவிட்டுப் போய் என்ன..... ஒரு நூற்றைம்பது ஆண்டிருக்கும்.... இந்தக் குடிலும் அந்த குப்பி லாம்பும் இயற்கையின் சீற்றங்களைத் தாங்கிக் கொண்டு படித்தவனுக்காக ....... ஏங்கிக் கொண்டிருந்தது.

குப்பிலாம்பு அடிக்கடி சொல்லும்... ஷஎன்னடா..... எப்படியாவது நம்ம காலத்திலேயே ஒரு படித்தவனை இந்த தோட்டத்தில் உருவாக்கிவிட வேண்டும். எனக்கும் வயதாகிக் கொண்டு போகின்றது... என் கண் மூடுவதற்குள் என் கனவு நிறைவேற நீ உதவ உதவவேண்டும்.... என்றது.

ஷகவலைப்படதே... உன்னுடைய இயலாத நிலையிலும் நீ எப்படி.......................

இந்த மழையிலும் வெயிலிலும் தாக்குப் பிடித்து இந்தக் குடும்பத்திற்காக உழைக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்..... நானும் இப்போ: அப்போ என்று தான் இருக்கின்றேன். எத்தனை முறை இந்த காற்று என்னோடு சல்லாபித்துக் கொண்டிருந்தது.

ஆனால்............ அந்தக் காற்று என்ன நினைத்தததோ தெரியவில்லை...... ஆடி மாத்தில் என் நெஞ்சையோ நடுநடுங்க வைத்துவிட்டது. அப்படி என்னதான் கோபமோ..... என் மீது இந்தக் காற்றுக்கு?

நாமெல்லாம் ஒத்துழைத்தால் தானே உன்னுடைய இந்தக் கனவு மெய்யாகும்.... அதை நான் அதற்குச் சொல்லக் கூட முடியாமல் என் மூச்சை அடக்க அது துடியாய்த் துடித்தது போல இருந்தது....

ஷஉண்மைதான்... அந்த ஆடி மாதக் காற்றில் குளிர் ஜொரம் வராலிருக்க எத்தனைப் எனக்குள் தான் போராட்டங்கள்? என்னை எத்தனை கவனமாகப் இந்த வீட்டு கிழவன் சுற்றி வர மதில் அமைத்துக் காபப்பாற்றியிருக்கின்றான். அந்த நன்றி விசுவாசத்திற்காகவாவது....... நான் கண் மூடும் முன்னால்;....... என் படித்தவன் கனவு நிறைவேறியாகிவிட வேண்டும்....?

உனக்கு மட்டுமா இந்த சோதனை... படித்தவனுக்குத் தான் சோதனை வைப்பார்கள்.... ஆனால் உனக்கும் எனக்கும் இந்த காற்றும் மழையும் வைக்கும் சோதனை?

என்கிற பரீட்சையை எழுதி நமது கம்பீரத்தை அடிக்கடி சோதித்துக் கொள்வதைப் பார்க்கும் போது இந்த நூற்றாண்டின் மாபெரும் நினைவுச் சின்னங்களாக நம்மை யுனெஸ்கோவில் நிறைவேற்றுவார்களோ தெரியாது...................

அந்தக் குடிலும் தன் வேதனையை புலம்பியது.

ஏய்... குப்பிலாம்பே............ எப்படி உனக்கு இப்படி ஒரு சிந்தை வந்தது?.....

குடிலுக்கு எப்போதே கேட்கத் தோன்றிய ஒரு வினா. இன்று தான் கொஞ்சம் ஆசுவாசமாகக் கதைக்க வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. ஏன் தெரியுமா? இது கோடை விடுமுறைக் காலம். எந்தக் காற்றும் மழையும் அவ்வளவு சீக்கிரமாக இவர்களை அண்டுவதில்லை.....

ஓ! அதுவா.... அந்த திண்ணையில் உட்கார்ந்திருக்கிறானே....... அந்த கோட்டுக் கிழவன்! அவன் தான் என் லட்சியத்தின் மூலகர்த்தா. இந்தத் தோட்டத்தில் பாட்டு மாஸ்டர் அவன் தான். இந்த மலையகப் பிரதேசத்தில் இந்த காலத்திலெல்லாம் அப்படி ஒன்றும் இலகுவாக பட்டம் கிடைக்காது. ஆனால் இவனுக்கு மாஸ்டர் பட்டம் படிக்காலே கிடைத்துவிட்டது.


இந்தக் கோட்டுக் கிழவன் மார்கழிப் பஜனை பாடியும் கோவில்களிலும் ஆயம்மா காம்பறாவில் சின்னதுகளுக்கு கதையும் பாட்டும் சொல்லிக் கொடுத்தும் ஊர்ப்பிள்ளைகள் கொடுத்த ஒரு மகா பட்டம்! இந்தப் பட்டம் தான் இவனை ஒரு லட்சிப்புருசனாக்கியது! எப்படியும் தனது மகனை படித்து ஆளாக்க வேண்டும் என்பது இவனது எண்ணம்!

ஆனால் அந்த ஆசைக்கு வந்தது ஒரு சோகம்! பாழாய்போன காலராவால் அவன் லட்சியம் எல்லாம் சிதறிப்போனது. அவன் மகன் இறந்து போனான்.இருந்தாலும்.......... அவனுடைய வீட்டிலுள்ள பொம்பிள்ளைப் பிள்ளையயைப் படிக்க வைக்கும் அளவிற்கு அவனுக்கு காலம் வாய்ப்பளிக்கவில்லை. அந்த சிந்தனை மாற்றத்திற்கு எந்த தலைவனும் வித்திடவில்லை. பாரதி பாடலைப் பாடினாலும் கோட்டுக் கிழவனின் பாட்டு மாஸ்டர் மூளைக்கு அவ்வளவு எளிதாக இது எட்டவில்லை.....

அப்படியா.....? பிறகு இந்த வீட்டில் இதோ கண் அயராமல் படித்துக் கொண்டிருக்கின்றானே... இந்தச் சுப்பிரமணி............. இவனுக்கு எப்படி இந்த ஞானம்? யார் இவன்?

குடில் குப்பிலாம்புவிடம் கேட்டது.

இவன், இந்த கோட்டுக்கிழவனின் பேராண்டி........... அதான் பேரன்! இவன் சின்ன வயசிலேயே கோட்டுக் கிழவனின் லட்சிய மூட்டையைத் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கின்றான். இவனுக்கும் படிப்பு என்பது யாரும் சொல்லித்தராமலேயே வந்த ஆசை! இந்த ஆசை கோட்டுக்கிழவனின் லட்சியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது........!

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை அடிக்கடி நான் கேட்பேன். இரவு வேளைகளில் அந்தக் கோட்டுக் கிழவன் தன் பேராண்டிக்கு வெள்ளைக்காரனால் அழைத்து வந்த வரலாறைச் சொல்லியிருக்கின்றான்.

அவனும் அந்த ஆதிலெட்சுமி கப்பலில் வந்த ஒருத்தனாம்! ஆயிரக்கனக்கானவர்களை ஏற்றிக்கொண்டு அடிமைப் பயணத்தை அழகாக அரங்கேற்றிய ஆதிலெட்சுமிக் கப்பல்! வரும் வழியிலேயே பல உயிர்களை பசியாலும் காலரா போன்ற நோய்களாலும் கொடூரமாக இயற்கையே கொன்ற பரிதாபக் காட்சியை நேரில் கண்ட ஒரு மனிதன்...

மன்னாரிலிருந்து வரும்போதே இதற்கு மேலும் இந்தப் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு பயணத்தைத் தொடர முடியாது என்று காட்டில் தவிக்கப்பவிடப்பட்ட ஒருவன் தான் இந்தக் கோட்டுக் கிழவன்;

மனதின் ரணங்களில் இனி எந்தத் துன்பத்திற்கும் தாக்குப் பிடிக்கக் கூடிய ஒருவன்! அவன் ஆசையை அவனுடைய பேராண்டிக்குச் சொல்லும் போதெல்லாம் என் கண்களில் நீர் வடியும்... எப்படியாவது .... இந்தப் பேராண்டிக்கு நான் உதவியாக இருந்து படிப்பதற்கு உதவி செய்ய எண்ணினேன்...... அந்தக் கோட்டுக்கிழவனுடைய லட்சியங்களுக்காக நானும் கைகோர்த்துக் கொள்ள எண்ணித்தான் இந்த வயசான காலத்திலும் இப்படி....... கஸ்டம் பாராமல் உழைக்கின்றேன் என்றது குப்பிலாம்பு!

பேராண்டி.... நேரம் பண்ணிரண்டாச்சு....... படுத்துக்கப்பா............ காலையில எழும்பிப் படிக்கலாம்..... என்ற கோட்டுக் கிழவனுடைய வார்த்தை கேட்ட பிறகு தான் சுப்பிரமணிக்கு மணி பண்ணிரண்டாகியதே தெரிந்தது.

தாத்தா... நாளைக்கு பத்தாவது பரீட்சை ஆரம்பமாகுது.. மறக்காம எழுப்பிவிடுங்க....... சுப்பிரமணியின் அந்த வார்த்தை கோட்டுக் கிழவனின் கண்களில் கண்ணீரைத் தந்தது.

நீ இருக்கிறவரைக்கும் தான் எனக்கு ஆறுதல்... காலையில் திரும்பவும் உன்னைத்தானே நான் பற்றவைத்து என் லட்சியங்களை கரைசேர்க்க வேண்டும்...... கோட்டுக்கிழவன் அந்தக் குப்பிலாம்பிடம் சென்று அதனை மெதுவாக அணைத்து விட்டு துடைத்தான்.
குப்பிலாம்பு தொடர்ந்து ஒளியைத் தந்து உஸ்ணத்திற்கு மத்தியில் சிமினி இல்லாமல் உழைத்து உழைத்து களைத்துப் போய் அமைதியாய் அதுவும் உறங்கிக் கொண்டது..

மறுநாள் பொழுது புலர்ந்தது. நேரம் ஐந்திருக்கும். விடியற்காலையில் படிப்பது சுப்பிரமணிக்கு எப்போதும் புத்துணர்ச்சியைத் தந்தது. சந்தோசமாகப் படித்து ... அந்தப் பத்து நாளும் அவன் பரீட்சையில் நன்கு தேறியிருந்தான். அன்று கோட்டுக்கிழவனின் தவம் அந்தப் பாடசாலையை நோக்கியே இருந்தது. ரிசல்ட் வருகிறது.............. அந்த பள்ளிக்கூட அதிபரின் செய்தியோடு பள்ளிக்கூட சுவரை ஆழமாக இறுக்கமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தான் கோட்டுக் கிழவன்..... அவன் எண்ணம் நிறைவேற அந்த அதிபரின் வாய் திறக்கவேண்டுமே!

பாட்டு மாஸ்டர்.... இங்கே வாயா.... உன்னுட்டு சுப்பிரமணி பாஸ் பண்ணிட்டான்................... உன்னுட்டு ஆசயெல்லாம் நிறைவேறிப் போச்சு....... இனி அவன ஏ.எல் படிக்க வைக்க இந்த ஸ்கூலு சரிவராது... டவுனு ஸ்கூலுக்குப் போக வேண்டும்....... யாரையாவது பிடிச்சு படிக்க வை.........


அப்போது தான் அந்த கோட்டுக் கிழவனுக்கு...... யாரையாவது பிடிச்சுப் படிக்க வை.... என்ற வார்த்தை அவனது ஏழ்மையை மனதிற்குள் கொண்டு வந்தது.....

பேராண்டி பாஸ் பண்ணிய சந்தோசம் வேறு.......... அதனால் வரும் ஆனந்தக் கண்ணீர் வேறு...... அதோடு கலந்து வறுமையின் ஏக்கக் கண்ணீரும் வேறு.... இரண்டும் கலந்து....... உஸ்ணமாயிருந்த அந்தக் கண்ணீர் அவன் நெஞ்சைத் தொட்டது. ஆனால் அவன் அழவில்லை! கண்ணீர் யார் உகுத்தார்களோ தெரியாது ......... அந்த நரைத்த முடியை அப்படியே நனைத்திருந்தது.

ஐயா... என்னுட்டுப் பேராண்டி.... டெஸ்ட்ல பாஸ் பண்ணிட்டான்... அவன டவுனு ஸ்கூல்ல சேர்க்க நீங்க தான் ஒதவனும்... எப்புடியாவுது ஒதவி செய்ங்க...... நான் கொஞ்சங் கொஞ்சமா கடன கட்டிப்புடுறேன்....................

இப்படி அந்தக் கோட்டுக்கிழவன் ஏறாத படி யில்லை.... இறங்காத இடமில்லை...........

ஆனால்.... எந்தப் பரோபகாரிக்கும் அந்தக் காலத்தில் கல்வியின் அருமை புரிந்திருக்கவில்லை.... அந்தத் தோட்டத்து துரை கொஞ்சம் கொப்பி புத்தகம் வாங்கிக் கொடுத்து பாராட்டினார். அவன் படித்த ஸ்கூல் வாத்தியார்மாறெல்லாம் சேர்ந்து அவனுக்கு டவுனு ஸ்கூலில் படிக்க வசதி செய்து கொடுத்தனர்... ஆனால்..... மாதா மாதம்... வரும் செலவுக்கு...................... கோட்டுக் கிழவன் தைரியத்தைக் கைவிடவில்லை.......

அடுத்த ஊர் சங்கத் தலைவரிடம் தன் கதையைக் கூறி உதவி கேட்டான் கோட்டுக் கிழவன். தினந்தோறும் நடக்கும் விடயங்களை குப்பிலாம்பும் குடிலும் கேட்டு கண்ணீர் வடிக்காத நாளில்லை...... அவர்கள் கதை அதுகளுக்குத் தானே முழுமையாகப் புரியும்.....?

எபப்டியோ அந்த ரெண்டு வருசமும் அவனுடைய கெட்டிக்காரத் தனத்தால் புதுப் பள்ளியிலும் நல்ல மாணவன் என்ற பெயருடன் படிப்பை முடித்தான்....... மீண்டும் ரிசல்ட் வந்தது............... அவன் எதிர்பார்த்தது போலவே அந்த ஊரில் படித்தவன் என்ற பட்டத்தைப் பெற்றான்.................


இது கோட்டுக் கிழவன் தனக்குக் கிடைத்த பாட்டு மாஸ்டர் பட்டத்தை விட மிகப் பெரியதாக நினைத்து அவனது லட்சியம் நிறைவேறியதாக எண்ணினான்....

ஆனால் சுப்பிரமணி இப்போது தான்... தனது பல்கலைக் கழக கனவை நிறைவேற்ற அடியெடுத்து வைத்தான்... அவனுக்கு அது தான் முதற்படி.............. இனி தான் அவன் முதலாந்தரத்தில் சேர்ந்து படிப்பதைப் போல ஒரு எண்ணம்... அதற்கு உதவிகள் அவனுக்கு நிறையவே கிடைத்தன... பொருளாதாரம் அவனை இங்கு கழுத்தைப் பிடிக்கவில்லை...............


கோட்டுக்கிழவன் பேராண்டி பாஸ் பண்ணிய நினைவுகளுடனும் அவனுக்குக் கிடைத்த பாராட்டுக்ளையும் அசைபோட்டுக் கொண்டு அந்தக் குப்பிலாம்புடன் திண்ணையில் அமைதியாய் கண்களில் நிஜமாகவே ஆனந்தக் கண்ணீருடன் அந்தச் சுருட்டுப் பாயுடன் குடிலின் கூரையையே பாரத்துக் கொண்டிருந்தான்.......

அந்த மார்கழி மாதக் காற்றும் என்னவோ கொஞ்சம் அதிகமாய்த் தான் இருந்தது. குடிலின் ரெட்டும் கிழிந்து அந்தக் கூரையின் கண்கள் திறந்து கொண்டன. குப்பிலாம்பு முணுக்... முணுக்கென்று எரிந்து கொண்டிருந்தது...... குடிலும் குப்பிலாம்பும் அந்தக் கிழவழைனயே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தன. அவனுடைய சந்தோசத்தில் அவைகளுக்கும் பங்கு உண்டு தானே.........

கிழவன் விட்டத்தைப் பார்த்தபடியே அயர்ந்துவிட்டான். இனி அவன் எழப் போவதில்லை...... குப்பிலாம்பும் அப்படியே வயதின் அசதியால்; ........ கொஞ்சம் கொஞ்சமாக கண்ணை மூடிக் கொண்டிருந்தது..................... அந்த இத்துப்போன கூரை மரங்களும் வளையத் தொடங்கின................ ஒரு மூன்றாம் பரம்பரையின் கனவு நிறைவேறிய நிலையில் அந்த நினைவுச் சின்னங்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கின....................


சுப்பிரமணி இப்போது பேராதனைப் பல்கலைக்கழக அக்பர் மண்டத்தின் மின்சாரத்துடன் தனது படிப்பைத் தொடர்ந்தான்... இப்போது அவன் உண்மையிலேயே படித்தவன் ஆகிவிட்டான்..... பட்டங்களால் மட்டுமல்ல... இந்த மண்ணுக்குச் சேவையாற்றுவதிலும் தான்..........

முற்றும்.

No comments:

Post a Comment