Sunday, May 15, 2011

தொழுவமும் தோஹா கட்டாரும்

மஸ்கெலிய பெ.லோகேஸ்வரன்

(யாவும் அனுபவக் கற்பனைகள்)

அந்த மார்கழிப் பனிக்காற்றில் விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் சந்ராவின் மாட்டுத் தொழுவம் பொலிவாயிருந்தது. தொழுவத்தின் முற்றத்தில் மாட்டுச் சாணம் தெளித்து மாக்கோலமிட்டு வாசலில் சாணப்பிள்ளையார் கொழுவிருக்க பறங்கிப்பூவின் அழகோடு அமைதியாய் விழாக் கோலமிட்டிருந்தது அந்தப் பகுதியில் அது கோவிலாகவே தென்பட்டது. அத்தனை தூய்மை!
சந்ரா வேலை என்று வந்து விட்டால் விடியாற்காலை எல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டல்ல! கடமை என்று வந்தாள் அவளுக்கு நிகர்; அவள் தான். அந்தக் காலைப் பனியில் ஆற்றுத் தண்ணீரை அள்ளி கொண்டு வந்து வீடுவாசல் கழுவி, திண்ணை மெழுகி,அடுப்பு மெழுகி அண்டாகுண்டா,சருவமெல்லாம் தண்ணீர் நிரப்பி வீட்டிலுள்ள துணிகளை எல்லாம் துவைத்து நீராடி இறைவனுக்கு விளக்கேற்றி அப்பப்பா! எத்தனை வேலைகள் சந்ராவிற்கு!ஒரு மாதாந்த பில் கட்டாத மெசின் சந்ரா! ஓய்வு என்பது அவளுக்கு எப்போதும் கிட்டியதுமில்லை. அதனை அவள் எதிர்பார்ப்பதுமில்லை! காலச் சக்கரம் அவள் கால்களுக்கும் கைகளுக்கும் சக்கரமிட்டு அலங்காரம் பண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தது.
சந்ரா இப்போதெல்லாம் ஓரேயடியாக அலுததுக் கொள்வாள். அவள் அலுத்துக் கொள்வதிலும் நியாயமில்லாமல் இல்லை.
'ச்சீ................... என்னடா இந்த வாழ்க்கை. எந்த நாளும் இந்த ஆட்டோடும் மாட்டோடும் போலராட வேண்டியிருக்குது. வீட்ல ஒரு டீ.வி இருக்கா, றேடியோ பெட்டி இருக்கா? போன வருசம் வாங்கின அந்த சின்ன றேடியோ பெட்டி இன்னும் அடகுக் கடயில பாடிக்கிட்டிருக்கு! அவன் வீட்டு திண்ணயில, அடுப்படியில, படுக்கயிலனு ஒவ்வொரு எடத்துக்கும் எத்தன றேடியோ பெட்டி, எத்தன டீ.வி! அடுக்க முடியாம அவன் திண்டாடுறான். நாம இங்க சேதிய கே;கிறதுனா கூட அடுத்தவன் தகவல் சொல்ல வேண்டியிருக்கு!'
அவளது முகம் சினத்திலும் வெறுப்பிலும் களையிழந்திருந்தது. அந்த வெறுப்பிலும் நியாமில்லாமல் இல்லை. அவளது உணர்வுகள் அடுத்தவர்களுக்கு வேண்டுமானால் கேளிக்கையாக இருக்கலாம். ஆனால் சந்ராவிற்கு................!
'என்னாங்க? இப்புடியோ தெனமும் மாட்டுக்கு புல் அறுத்தும் கோழிக்கு தீணி போட்டும் நீங்களும் நானும் காலத்த ஓட்ட முடியுமா?' அவள் ஆதங்கப்பட்டுக் கொண்டாள்.
ஏழைகளின் வாழ்வில் எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் காலம் தந்த பரிசல்லவா? இதில் சந்ரா மட்டும் விதிவிலக்காக முடியுமா என்ன?
'இங்கபாரு புள்ள.. இந்தத் தோட்டத்துல ஆடு மாடுனு வளர்க்கிற நம்மலப் பார்த்து எத்தனப் பேரு பொறாமப் படுறாங்க தெரியுமா? ஆனா நீ......... இதுவும் பத்தலனு இன்னும் ஆசப்படுற.......................... இருக்கிறதவுட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசப்படுதுல என்ன நெயாயம்?'
சந்ராவின் கணவன் நிதானமானவன். எதனையும் தீர்க்க தரிசனத்துடன் யோசிப்பான். சந்ராவிற்கும் அவனுக்கும் மாட்டுச் சாண வாசனைகள் எல்லாம் பழகிப் போன ஒன்று. அவர்களுக்கு பெரும்பாலும் தங்கள் மீது அடிக்கும் எந்த வாசனையுமோ எந்த நாற்றமோ அவர்களுக்குப் புரிவதில்லை! அந்தளவிற்கு உழைப்பையும் அவர்களையும் பிரிக்க முடியாது! ஆனால் வருவாய் போதுமானதாக இல்லை. பிள்ளைகளோ மூன்று தான். அவர்களது படிப்பிற்குப் பணம் தேவையல்லவா?
சந்ரா தீர்க்கமாக தனது வெளிநாட்டு மோகத்தை அவளது கணவன் வேலுசாமியிடம் தெரிவித்தான். வேலுசாமிக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை.கூழோ கஞ்சோ எல்லாரும் ஓரிடத்தில் வாழ்ந்து சந்தோசமாயிருக்க வேண்டும் என் நினைப்பவன் அவன்!ஆனால் சந்ராவின் இந்துப் புதிய டாம்பீர வாழ்க்கை மோகத்திற்கு அவன் விரும்பியோ விரும்பாமலோ தலைவணங்கிப்போக வேண்டிய கட்டாயம்.
வேலுசாமி தலையாட்டிப் பொம்மையானான். அன்று திங்கட்கிழமை சந்ராவின் டோஹா கட்டாருக்கான பயணச் சீட்டு ஏஜென்டு மொகிதீனால் வழங்கப்பட்டது. வீட்டில் தடபுடலான விருந்து! அவளுக்கும் பிரியாவிடை வைபவம் நடைபெற்றது! சந்ராh தனது பிள்ளைகளையும் கணவன் வேலுசாமியையும் மறந்து புதிய பயணம், எதிர்கால வாழ்க்கைபற்றி கனவு காணத் தொடங்கினாள். புதன் கிழமையும் வந்தது. அவள் கொழும்பு கட்டுநாயக்க விமானத்தில் பல வெளிநாட்டு வேலைக்காரிகள் வரிசையில் பயணமானாள்.
வருடம் இரண்டோடியது! அவளது இலங்கை வருகை ஊர்ஜிதம் செய்யப்பட்டது. வேலுசாமி அயருக்கு வாகனத்தைப் பிடித்துக் கொண்டு கட்டுநாயக்கவிற்கு பயணமானான். அவனது மனதில் இன்னமும் பழைய சந்ரா குடி கொண்டிருந்தாள். ஆனால்................. வந்த சந்ரா.................... அவனால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை................... அத்தனை மேக்கப்புடன் அழகாய் சிங்காரித்து கண்ணாடியணிந்து டிறவுசருடன் குதிக்கால் பாதணியுடன் .................... நடிகை தோற்றுப் போனாள்..................... சந்ரா! அத்தனைப் பேரழகியானாள்!
வேலுசாமி அன்று தான் வெள்ளைச் சாரத்துடன்........ அயண் பண்ணிய சட்டையுடன்............... அந்த தோட்டமே அவனை நக்கலடித்து அனுப்பியிருந்தது. சந்ரா அந்த தோட்டத்திற்கு வந்தாள். வீட்டில் ஏக தடபுடல்................! தோட்டமே அவளை வேடிக்கை பாரத்தது! அன்றைய பொழுது கழிந்தது.
இரவு வந்தது............. வேலுச்சாமி தனது ஆசை மனைவியை கொஞ்சம் அளவுக்கதிகமாகவே நேசித்து................ அன்று தான் திருமணமாகி முதலிரவுக்குக் காத்திருந்தவன் போல் வெட்கப்பட்டு அந்தப் படுக்கையறையை அடைந்தான். ஆனால்........ அவன் அருகே வந்ததும் சந்ராவிற்கு ஏகப்பட்ட கோபம்...................
'ச்சீ....... என்ன .................... இப்புடிச் சாண நாத்தம்............ ஐயோ.........கொமட்டுது ...................... வெளிய போ....................'
சந்ராவின் இந்தத் திடீர்பாய்ச்சல் அவனை வெட்கித் தலை குனிய வைத்தது. பொழுது விடிந்தது. வீட்டில் ஓரே கலேபரம்! வேலுசாமியை விவாகரத்து செய்ய சந்ரா திடசங்கற்பமாயிருந்தாள்! ஆனால் தோட்டத்து மக்கள் ஒன்று கூடி சந்ராவிற்கு எடுத்துச் சொல்லி அவளது மனதை மாற்றினார்கள். ஆனால், சந்ரா மீண்டும் டோஹா கட்டாருக்குப் பயணமானாள். அவளுக்கு இந்த தோட்டத்து தொழுவத்து வாழ்க்கையைவிட டோஹா கட்டார் வாழ்க்கைப் பிடித்துப் போயிருந்தது! போனவள் இன்று பதில் ஏதும் இல்லாமல் காணாமல் போயிருந்திருந்தாள்.. ஆனால்....... வேலுசாமி மட்டும் சந்ராவிற்காக ஒரு நப்பாசையுடன் வீடு, வாழ்க்கை, நடை, உடை, பாவனைகளை மாற்றி 'டடா..மம்மி...........கம் இயருக்கு............ மாறியிருந்தான்.......... ஆனால்...... சந்ராவின் தொலைந்த விலாசத்தைத் தான் அவனால் இன்று வரை கண்டு பிடிக்க முடியவில்லை!.
முற்றும்.

No comments:

Post a Comment